Saturday, December 14, 2013

மோக உலகம்...




இரவின் வெளிச்சம் இது

இரவல் வெளிச்சமாகும்...




மோக உலகம்...


மதுவில் மனதும் கரைந்தோடும் - அந்த

மனதும் உணர்வின் கரைதேடும் - ஆடித்

ததும்பும் இன்பமும் நிறைந்தாடும் - அந்த


தருணத்தில் மரணமும் மறைந்தோடும்...



பிறந்ததற்கு அர்த்தம் காணப் பல வழிகளுண்டு பூமியிலே - மனம்

திறந்ததற்கு அர்த்தம் பெண்மையின் மொழியிலுண்டு - தினம்

மறந்ததற்கு அர்த்தம் காணும் விழிகளுண்டு பூவையின் - இனம்

சிறந்ததற்கு அர்த்தம் சேர்க்கும் நடனத்தின் களிப்புமுண்டு...



பம்பரமாய் சுழன்று ஆடும் பெண்களும் - அதனையும்

மும்முரமாய் கண்டு ரசிக்கும் கண்களும் - அத்தனையும்

அம்பரத்தில் இழுக்கும் அலைகளும் எனப் பூவையரும்

அம்பலத்தில் சுழன்று ஆடும் கலைகளும் தான் என்னே!


மோக உலகமா - பெண்ணழகின்

தேக உலகமா - கண்ணழகின்

போக உலகமா - மண்ணழகின்

தியாக உலகமா - துபாய் நகரம்...?



எண்ண எண்ணச் சலிக்காத அழகின் கூடமா - அதனை

எண்ணி எண்ணிப் பொலிவாகப் பழகும் பாடமா - மனதும்

தின்ன தின்னத் திகட்டாத தேமதுரப் பண்டமா - உணர்வும்

பின்ன பின்னப் புகட்டும் மதுவும் மயக்கத்தின் கண்டமா?



இடுப்பை அசைக்கிறாளா - தள்ளாடும் படகில் மனதை வைத்துத்

துடுப்பை அசைக்கிறாளா - மயக்கம் அளிக்கும் கிண்ணத்து மதுவின்

கடுப்பை அசைக்கிறாளா - கொள்ளை அழகின் இடையில் மறைக்கும்

உடுப்பை அசைக்கிறாளா - உணர்வின் தடுப்பை அசைக்கிறாளே...!



ஓடையின் வெள்ளத்து அசைவில் ஆடும் நிலவினைப் போலவே

ஓடுகின்ற நாடித் துடிப்பினைத் தேடும் உணர்வினைப் போலவும்

வாடையின் போது மழையிலே ஆடும் மலர்களைப் போலவே

வானத்து விண்மீன்களென சிமிட்டும் ஒளியினைப் போலவும்

மேடையின் அருகிலே மேயும் கண்களுக்கு விருந்தாகவும்

மேம்பட ஆடுகின்ற மங்கையவள் தானும் அணிந்திருக்கும்

ஆடையின் அழகை மெருகூட்டும் ஆட்டத்தின் அழகோடு

ஆசையைக் கலந்து ஆவலோடு தருகின்றாள் அரங்கத்திலே...



மழை வரும் போது தடுப்பதற்காகவே

குடை விரித்தாலும் நனைவதைப் போலவே

மனதையறிந்து இன்பம் கொடுப்பதற்கே

கடை விரிக்கின்ற மங்கையவளும் அதனை

பிழை எனக் கொள்வதில்லை தன் மனதுக்கு

தடை விதித்து உடலுக்கு உடை கொடுத்து

விழையும் சுகத்துக்கு விடை கொடுக்கவே

விருப்பம் மேலிடும் திருப்பம் கண்டிடவே

அழைக்கும் உருவத்திற்கும் பணத்திற்கும் தான்

அடைந்த பருவத்தையே வழங்குகிறாள்...




வில்லினில் இருந்து புறப்படும் அம்பைப் போலவே அவள்

சொல்லினில் இருந்து புறப்படும் வம்பை அறியாத பலரும்

கல்லினில் அகப்பட்ட தேரையைப் போலவே ஒளிமறையும்

அல்லினில் அகப்பட்டு தேவியரைத் தேடிக் கூடுகின்றனர்...



காந்தப் புயலில் சிக்கிய இரும்புத் துகள்களைப் போலவே

காணும் கண்களில் விரும்பி ஆடும் நகல்களை தாமும்

ஏந்தப் போராடும் எண்ணத்தில் மதுவேந்திய கிண்ணத்தில்

எதிர்ப்பட்ட மயக்கத்தில் அசலை மறந்த ஈசலாகின்றனர்...




மதுவுடன் கலந்த வெள்ளத்தை பிரிக்க முடியாததைப் போலவே

மாதிடம் கலந்த உள்ளத்தைப் பிரிப்பதென்பதும் இயலாததாலே

அதனுடன் கலந்த நடனத்தில் தொலைந்த மனதையும் தேடுவது

பாதியாய்க் கலந்த பின்னே மீண்டு வருவதென்பது இயலாததாகும்...



ஆணையிடும் அதிகாரத்தில் பணி அமர்ந்தாலுமே ஆடுமந்த

வீணையிடம் எவனும் மறுபடியும் மீட்டிடவேத் தேடுமந்த

கண்ணிடம் கொண்ட நடனத்தின் எழிலை ரசிக்கக் கூடுமந்த

பெண்ணிடமே வருவான் வந்த வழியினை தானும் மறப்பான்...




மெல்லினமா - மங்கையவளும் பனித்துளி வந்து அமரும்

புல்லினமா - நங்கையவளும் மழைத்துளியில் சிறகுலர்த்தும்

புள்ளினமா - என்கையிலேந்தும் தனித்துளி ததும்பிச் சிந்தும்

கள்ளினமா - இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையினமா...?



பள்ளத்திலே வீழாத வெள்ளமுண்டோ - உண்டால் மதுவெனும்

வெள்ளத்திலே மயங்காத உள்ளமுண்டோ - கண்டால் மங்கையவள்

அசைவினில் ஆட்டத்தின் எல்லையுண்டோ - வண்டால் மலர்களுக்கு

இசைவதால் தேனுண்ணும் இதழ்களுக்கும் தொல்லையுண்டோ...?



இரவை மறைக்க மென் மங்கையவள் இடையாடுகிறது - அங்கவனின்

உறவை மறைக்க பணமும் மனமும் நடைபோடுகிறது - அங்கவளின்

வரவை நிறைக்க தன் பங்கையளித்து விடைதேடுகிறது - கூடுவிட்டுப்

பறவை இன்ப வானில் பறந்து கடைதேடுகிறது வெளிச்சத்தை நோக்கி...



வந்த வழி பார்க்கத் துடிக்க ஓருலகம்

அந்த வழி தேடி அலையும் பேருலகம்

எந்த வழி இன்பம் என்ற போக உலகம்

தந்த வழி தேடி அலையும் மோக உலகம்...



சுருங்கி விரிவது மதுவருந்தும் இதயம் மட்டுமல்ல - அங்கே

சுருங்கி விரிவது மங்கையவள் சதையும் தான் - கொதி நீரை

நெருங்கிப் பிரிவது நெருப்பு மட்டுமல்ல - அவளது மாரை

நெருங்கப் பிரிவது விருப்பும் தான் - இரவின் பொறுப்பும் தான்...



தேடையில் கிடைக்காத அழகெல்லாம் ஒன்றுகூடி அவள்

ஆடையில் அழைக்கின்ற அற்புதமாய் நன்றுகூடி அந்தரங்க

மேடையில் தேடுகின்ற நாட்டியத்தில் வென்றுகூட அவள்

சாடையில் அழைக்கின்ற நாடகத்தின் முடிவை யாரறிவார்...?



கடலில் இருந்தே அலைகள் தோன்றுகின்றன - அவள்

உடலில் இருந்தே கலைகள் தோன்றுகின்றனவோ?

கடற்கரை வந்து நின்றால் காலை இழுக்கின்றன அலைகள் - அவளின்

உடற்கரை வந்து சென்றால் ஆளை இழுக்கின்றன கலைகள்...

பாறையிலே மோதும் அலைகள் நுரையைத் தருகின்றன - அவளின்

பாதையிலே மோதும் கலைகள் நடனத்தைத் தருகின்றன...

மீன்களின் இருப்பிடமோ கத்தும் கடல் - கலை

மான்களின் இருப்பிடமோ அவளின் உடல்...

பொங்கி விழுவது அலைகடலின் கலைகள் - மனம்

ஏங்கித் தழுவுதல் அவளுடலின் நிலைகள்...

தீவுகள் தோன்றுவது மணற்திட்டால் - பல

நோவுகள் தோன்றும் அவளை மணந்திட்டால்...



அத்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அலைகடலின் நிலைகள்...

பித்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அவளுடலின் கலைகள்...

எத்தனையும் அதன் வசப் படுத்தியே

எள்ளி நகையாடுவது அவள் நடனக் கலைகள்...



மது அருந்த அருந்த மயக்கமும் தான் வந்தது -

மணம் பரப்பப் பரப்ப பூவைக்குள்ளும் தேன் வந்தது...

அது இருந்த போதும் இவையெல்லாம் ஏன் வந்தது -

அவரவர் விதியே என்று அவ்விடத்திற்கு நான் வந்தது...



ஆடற்கலைக்கு அவள் மலர்ந்தவளோ - சித்திரக்

கூடற்கலையில் மெய் கலந்தவளோ - சிந்தனையின்

தேடற்கலைக்கு அவள் வளர்ந்தவளோ - பள்ளிக்

கூடற்கலையில் கை தேர்ந்தவளோ...?



எண்ணியது எல்லாம் உள்ளத்தில் நிறைவேறிட

கண்ணிமைக்குள்ளே கனவுலகைக் காணுங்கள்...




பொருள்:

அம்பரம் - கடல், அம்பலம் - சித்திரக் கூடம், கடை - பெண்ணின் மறைவிடம், அல்லினில் - இரவினில்.

Sunday, November 24, 2013

போர்க்குற்றம்...




இனத்தை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்

ஈனப் பிறவியல்லவா நம் அரசியல் பெருந்தலைகள்...


போர்க்குற்றம் செய்தவனும் இன்று உலக அரங்கிலே

யார்க்குற்றம் செய்ததெனக் கேட்கின்றான் உலகமதில்

நியாயம் என்று முன்மொழிகின்ற சில நாடுகளும்

காயம் பட்டு உயிரிழந்த இனத்தைக் கண்டதுண்டோ?


கொற்றவனாய் இருந்தவன் கூற்றுவனாய் மாறி கொடுங்

கூற்றுக்கு இரையாக நம்மினத்தை அழித்ததும் ஏனோ?



கருவாயில் இருந்து பிறந்தவன் எவனும் போரிலே

கருவறுக்க மாட்டான் முறைகேடாய் அவனும்

எருவாயில் இருந்து பிறந்ததினாலே ஈழப்பெண்களின்

கருவறுத்தான் அதற்கு அரசியலின் பின்னணியும்

பெருவாயில் விழுங்கிய பிணங்கள் அத்தனையும்

ஒருநாளில் உலகையும் உலுக்காதோ? பாவியவன்

ஒருவாயில் ஊர்கூடி உமிழும் நிலையும் வரும்

தருவாயில் தனியீழம் இலங்கையில் பிறக்காதோ?


ஒத்தைக்கு ஒத்தையாய் நம்மினத்தை எதிர்த்திருந்தால்

உருக்குலைந்து போயிருப்பான் சிங்களனவன் தந்திரத்தால்

பத்து நாடுகளின் துணை கொண்டு அழித்ததாலே நம்மக்கள்

பரிதவித்து துடித்து உயிர்விட்டு மடிந்ததன்றோ பரிதாபம்...



சிந்தித்தால் விடை கிடைக்கும் நம்மினத்தைச்

சந்தித்தால் வழிபிறக்கும் வாழ்வும் நிலைக்கும்...


உப்பு சப்பில்லாத தீர்மானம் நிறைவேறியது தானதில்

தப்பு செய்தவனைப் பற்றிய வார்த்தைகளே இல்லை...


கதைக்கப் படுகிறது நம்மினத்தை பலவாறு என்றாலும்

புதைக்கப் பட்டது ஈழத்தமிழ் மக்களின் ஊனுடல் அன்றோ!



கொடியும் வேரேனவே வாழ்ந்திருந்த நம்மினத்தின்

கொடியைப் கொளுத்தி வேரைப் பிடுங்கியெறிந்த

முடியரசான சிங்களத்தின் முகத்திரைக் கிழித்து

முடியைப் பிடுங்கி எறிந்திடுவோம் உலகறிய...



விதைப்போம் நாமும் நம் எண்ணமும் எழுத்தினையும்

விரும்பிய தேசத்தில் நம்மினத்துக்கு நல்வாழ்வு ஓர்நாள்

கிடைக்கும் அதில் நாமும் முடிந்தவரை பங்காற்றியிங்கு

கிளர்ந்தெழும் மாணவர் சமூகத்துக்கு தோள் கொடுப்போம்...

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...




கால வெள்ளத்தில் நந்தனம் குளித்து வெளியேற அதைப்

போல வெள்ளத்தில் களித்துக் கொண்டாடிட இன்று வருகை

தரும் விஜய வருடத்தினை நாம் அனைவரும் ஒன்றாக

வருக என வரவேற்று தமிழ்ப் புத்தாண்டாய் உபசரிப்போம்...



நிறைவேறாத ஆசைகள் நிறைவேறிடவும்

கரையேறாத எண்ணங்கள் கரையேறிடவும்

குறைவேறாத மனதில் குடிகொள்ளவும்

வரையறை இல்லாத வாழ்வுதனை

தொடங்கும் விஜய வருடந்தனில்

தொடர்ந்து பெற்றிட வாழ்த்துகிறேன்...



கார்காலம் செழித்து பயிர்கள் சிறக்கவும்

பேர்காலம் செழித்து உயிர்கள் பிறக்கவும்

நார்க்கோலம் செழித்து மணம் பரப்பவும்

ஊர்க்கோலம் செழித்து உணர்வு நிரம்பவும்

பார்க்கோலம் எங்கும் நம் தமிழ் பரவவும்

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...



அசையும் காற்றும் தென்றலாக முகிழ்

அவிழும் மலர்களும் மன்றலாக மனம்

இசையும் வாழ்க்கை நன்றாக தினம்

அமைந்து விஜயம் என்றாக மகிழ்வுடன்

வாழ்த்துகிறேன்...



வந்து போன நந்தன வருடம் நமக்கு

தந்து போனவைகளில் விடுபட்டதை

முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டில்

ஈந்து உள்ளம் மகிழ்ந்திட விஜயம்தரும்

புத்தாண்டில் நினைத்தது நிறைவேறி

பத்தாண்டின் பயனடைய வாழ்த்துக்கள்...




உழைப்பாளிகளின் நெற்றி வியர்வை நீர்த்து விழவும்

படைப்பாளிகளின் வெற்றிப் பார்வை சேர்ந்து எழவும்

உழைப்பில் உலகம் செழிக்க ஏர் நடத்தும் தேர்ந்த உழவும்

படைத்து உணவின் மூலத்தில் உலவும் காலம் தொழவும்

உருவாகும் விஜய ஆண்டும் மழை பெருகி பிழை குறுகி

பெருமைத் தேடித் தரும் ஆண்டாக மலரட்டும், வளரட்டும்...

பேராசைகள் தூங்கா நகரம் துபாயாகும்...




அரெங்கெங்கும் அவளுடைய நடனம் தான் - அதைப் பார்த்துக்

கிரங்குவது என்னெவோ நம்முடைய மனங்கள் தான் - சேர்த்து

அருந்துவது மதுவைத்தான் அன்றிப் பழகத் துடித்து அவளோடு

விருந்துண்ண நினைப்பதந்த இரவில் கரைந்த உணர்வும் தான்...



ஆடப் பிறந்தவள் தானெனின் சில மங்கை பிறருடன்

கூடப் பிறந்தவள் இல்லை என்றாலும் ஆடிப் பொருள்

தேடப் பிறந்தவள் தானெனினும் இவ்வுலகை விட்டே

ஓடப் பிறந்தவள் இல்லை என்றாலும் கூடும் இருள்

நாடப் பிறந்தவள் தானவளும் தன்னால் குடும்பம்

வாழப் பிறந்தவள் என்றவளும் ஆடப் பிறந்தவள்...



ஏழ் பிறவி இவ்வுலகில்

எடுத்து வந்தாலும் இதில்

எத்தனையாவது பிறவி

என்ற போதிலும் அத்தனையும்

பாழ் பிறவி என்றே நான்

பறைசாற்றுவேன் துபாயின்

பகல்போன்ற இரவையும்

பார்த்திராவிடில்...



நிலவை நிழலாக்கி நினைவை எழிலாக்க

நங்கைதன் உடலின் நடைகூட்டி இரவில்

உலகை ஒளியூட்டி உணர்வைக் களிப்பூட்டி

உறவை வெளிக்காட்டும் மதுவை நீராட்டி

மனதைக் குளிப்பாட்டி மறந்த நினைவூட்டும்

மங்கைதன் நாட்டியத்தில் மயங்கும் இரவும்

போனதை மோகத்தில் தானந்த பாகத்தில்

போதையின் பாதையில் போவது எங்கே?



நாவதை மயக்கும் மதுவும் ஆட்டத்தில்

தேவதை முன்னால் எதுவும் நாட்டத்தில்

நானதை எண்ணி மயங்கும் கூட்டத்தில்

தானதைத் தொலைத்தேன் மனமாற்றத்தில்...



கண்ணாடியின் விளிம்பிலும் கரையும் மதுவில்

பெண்ணாடியக் களிப்பிலும் உள்ளமது முடிவில்

முன்னாடிய நடனத்தில் உள்ளோடிய மயக்கத்தில்

நின்றாடிய அரங்கத்தில் வென்றாடிய இரவுகள்...



அசைவது இடையா? இல்லை

அவளணிந்திருக்கும் உடையா?

இசைவது ஆடலா? இல்லை

இன்பந்துய்க்கின்ற தேடலா?

கரைவது மதுவா? இல்லை

கவர்ந்திழுக்கும் மாதுவா?

நிறைவது மனமா? இல்லை

நீந்திகுளிக்கும் தினமா?

நகன்றது நேரமா? இல்லை

நாவருந்திய மதுவின் ஈரமா?

புகுந்தது ஆசையா? இல்லை

பூமடல் விரியும் ஓசையா?



தூங்கா நகரம் - மனதைவிட்டு

நீங்கா நகரம் - துன்பந்தனை

வாங்கா நகரம் ஏமாற்றத்தில்

ஏங்கா நகரம் - நிராசைகள்

தேங்கா நகரம் - பேராசைகள்

தூங்கா நகரம் துபாயாகும்...



பணமாடும் உன் திசைபார்த்து அவளின்

மனமாடும் அதன் இசைசேர்த்து அங்கமும்

நடமாடும் நங்கைக்கு வளையல் இட்டால்

தடமாடும் அழகெலாம் வந்தங்கே படமாடும்...



பருவத்தின் மேன்மையெல்லாம் துபாயின் ஏதோவொரு

துருவத்தில் தொலைக்கும் பெண்கள் - ஆடவரும் தம்

உருவத்தின் தன்மையெல்லாம் ரூபாயில் காணவந்து

புருவத்தின் கீழ் தொலைக்கும் இரவன்றோ அங்கே!



மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போலே நடன

மங்கைக்கு மயங்கும் ஆடவன் போலே மதனப்

பகுதிக்கு மயங்கும் மன்மத நாடகத்தில் தனது

பங்கைத் தான் பெறத் துடிக்கும் இரவுகள்...



கணிதத்தால் கூட கணிக்க இயலாத ஓரழகு...

கணிகையவள் நெஞ்சைவிட்டு அகலாத பேரழகு...

அறிவியலால் கூட அளக்க முடியாத தேரழகு...

அறிந்து அனுபவித்தாலும் விடியாத ஊரழகு...

வேள்வி கண்டேன்...




நான் காதலில்

தோற்று இருந்தால்

துக்கம் தானென் கடைசிப்

பக்கமாக இருந்திருக்கும்...


காதலில்

வெற்றி கொண்டேன் - அதில்

வேள்வி கண்டேன்...

புகையும் நெருப்பும்

பகையும் விருப்பும்

அக்கம் பக்கம் இருந்தது

துக்கம் வெட்கத்தோடு

பொய்யும் புரட்டும் கலந்த

நெய்யும் வார்க்கிறது நினைவில்...


எரியட்டும் - எதிர்காலமது

தெரியட்டும் - புதிர்போடுவது

புரியட்டும் - அதிலென் வாழ்வும்

விரியட்டும்...



பாதி வரை சென்ற நதி

மீதி வரை செல்லட்டும்

கடல் காண...



ஆதி முதல் அந்தம் வரை

பாதி முதல் பந்தம் வரை

விரியும் பூவுலகின் அர்த்தம்

புரியா விதி காண...



கழுத்தில் பதியும் காதல் எழுத்தில்

கண்டதைப் பிழையென்று கொண்டதை

மதியென்றாலும் தழுவியது விதியன்றோ!?



விருப்பு மேலிட்ட

நெருப்பு அணைந்த பின்னே

வெந்த சாம்பலை அள்ளி

நொந்த மனதைத் தேற்றுவதில்

தவறில்லை என்பேன்...

திருமண வாழ்த்துக்கள்...




ஒண்முக சுந்தரியாளோடு பன்முகமாகச்

சண்முக சுந்தரியாளைக் கைப்பிடிக்கப்

புவிவந்தமரும் பெருநாள் காணும்

ரவிவர்மனுக்குத் திருமண வாழ்த்துக்கள்...



இருமனம் ஒதுங்கும் சோலையில் இருவரும்

ஒருமனம் அணிகின்ற சேலையில் இனிவரும்

திருமணம் பரப்பிடும் வேலையில் இருவரும்

பெருமணம் கொடுக்கும் மாலையை நாடுங்கள்...



பார்த்ததை எல்லாம் அன்பினால் ஒன்றாகச்

சேர்த்ததை எல்லாம் பண்பினால் நன்றாகும்

வார்த்தையைப் பரிமாறிப் பசியாற என்றும்

சேர்ந்திருந்து பிரியாத சேவையில் கூடுங்கள்...



ஆவின் பாலை ருசிக்கும் இளங்கன்றைப்போல்

பூவின் தேன் சுவையில் பூலோகத்தை ரசிக்கும்

நாவின் சுவையை அறிந்து நாளின் சுவையறியும்

யாவிலும் அனுபவத்தைக் கண்டறியத் தேடுங்கள்...



மேகம் கூடி மழையாகி மண்ணை நனைப்பதன்

மோகம் தேடி ஆறாகப் பெருகியோடும் நீராகத்

தாகம் தணிக்கக் கரை இரண்டை நனைத்ததன்

தேகம் கொண்டு கடல் காணும் வரை ஓடுங்கள்...



எத்தனையும் எண்ணியதைப் பெற்று நலமோடு நாடிய

அத்துணையோடு குணம்காணக் குலம்வாழத் தேடிய

அத்தனையும் நிமலன் அருளாலே வலம்வரக் கூடிய

அத்துணையோடு வரம்பெற்ற கரம்பெற துதிபாடுங்கள்...





அன்புத்தொகையோடு கூடிய வாழ்வினில்

பண்புத்தொகை தனை தேடியதில் நாளும்

வினைத்தொகையைத் நாடி இருவரும்

உயிர்மெய்யாய் ஒன்றாகி உள்ளத்துப்

புணர்ச்சி விதியை மீறாமல் நன்றாகும்

உணர்வுக்குள் என்றாகி உலகத்தில்

பெயரெச்சத்தை விட்டுச் செல்லும்

வினையெச்சம் காண வாழ்த்துகிறேன்...



இலக்கணத்தோடு வாழுங்கள் - அந்த

இணக்கத்தோடு வாழுங்கள் - அன்பு

இலக்கியம்போல் வாழுங்கள் - உயர்ந்த

இலட்சியத்தோடு வாழுங்கள் - சேர்ந்த

இல்லாளோடு வாழுங்கள் - தேர்ந்த

எல்லாவற்றையும் பெற்று வாழுங்கள்...



முனைப்போடு வாழுங்கள் - காதலாள்

நினைப்போடு வாழுங்கள் - மாதவள்

இனிப்போடு வாழக் கைப்பிடித்த காலக்

கணிப்போடு வாழுங்கள் என்றும்...






வாழ்த்துவது என் கடமை

வாழ்வது உன் திறமை

போற்றுவது என் கவிதை (ப்)

போல் வாழ்வது உன் திறமை...

விடிந்ததா? முடிந்ததா?




விடிய விடிய விளக்கு எரியும் - எண்ணெய்

முடிய முடிய அதன் விளக்கம் புரியும்...


விடிய விடிய பூங்கதவைத் திறக்கும் - வித்தை

முடிய முடிய கதகதப்பை மறக்கும்...


விடிய விடிய மெய் விளையாடும் - ஆட்டம்

முடிய முடிய களிப்பின் கை வளைதேடும்...


விடிய விடிய மோதலில் மிகுந்தாடும் - தாகம்

முடிய முடிய காதலும் புகுந்தாடும்...


விடிய விடிய பாதரசம் போல் உருக்கும் - உருகிப்

படியப் படியக் கூடலும் காதல்-ரசமாய் இருக்கும்...


விடிய விடியக் கற்பை அளக்கும் - அளவு கடந்து

முடிய முடிய அதனை முகப் பொற்பும் விளக்கும்...


விடிய விடிய இரவுத் திரையை விலக்கும் - விலக்கி

முடிய முடிய அந்த எல்லையில் போய் கலக்கும்...


விடிய விடிய விளக்கொளியின் விட்டிலாகும் - இரவும்

முடிய முடிய விளக்கம் தேடும் தேகம் கட்டிலாகும்...


விடிய விடிய தடையாகும் உடையாவும் - பொழுது

முடிய முடிய அணிந்தால் கொல்லும் படையாகும்...


விடிய விடிய வளைவுகளை ரசிக்கும் - ரசித்து

முடிய முடிய அந்த வளைவுக்குள் வசிக்கும்...


விடிய விடிய நினைப்பில் தவிக்கும் - ஆவல்

முடிய முடிய அதனை முனைப்பில் குவிக்கும்...


விடிய விடிய நினைத்தால் இனிக்கும் - ஆசை

படியப் படிய சேர்ந்து அணைத்தால் தொனிக்கும்...


விடிய விடிய முந்தியில் மயங்கும் - ரவியும்

படியப் படிய அந்தியில் உணர்வும் இயங்கும்...


விடிய விடிய தேகத்தில் பிறக்கும் - மோகமும்

வடிய வடிய அந்த பாகத்தில் சிறக்கும்...


புலரப் புலரப் பொழுதும் பகையாம் - பருவப்பூ

மலர மலர மாலையில் ஆசையும் மிகையாம்...


புலர புலர மாலை தனை தூரமாக்கும் - இதழ்கள்

உலர உலர கொடுக்கும் முத்தமதை ஈரமாக்கும்...

சிறிய விடுகதைகள்...




Small Riddles:

1. பொழுது சாய சாய

மேல் பக்கம் சாயுமது

பொழுது விடிய விடிய

கீழ் பக்கம் தோயும்

அது எது?



2. கவிழ்ந்து பூவிருக்கும்

தோகையதை மறைத்திருக்கும்

நிமிர்ந்து காயிருக்கும்

தோளுயரம் வளர்ந்திருக்கும்

அது எது?



3. குவிந்த மொட்டு போலிருக்கும்

காம்பதைத் தூக்கி நிற்கும்

அவிழ்த்தால் அதில் பாலிருக்கும்

காம்பதைத் தேக்கி நிற்கும்

அது எது?



4. தோரணங்கள் ஏந்தி வரும்

அசையும் போது காந்தி தரும்

மேல் பக்கம் பெருத்திருந்து

கீழ் பக்கம் சிறுத்திருக்கும்

அது எது?



5. பயிர்கள் செழித்திருக்கும்

போக வழியிருக்கும் அதுவும்

மறைந்திருக்கும் - நீர் வாறி

இறைத்தால் நெகிழ்ந்து முப்

போகம் தான் கொடுக்கும்

அது எது?



6. கோடிருக்கும் இரண்டு

பக்கமும் இருக்கும்

கோல் கொண்டு எழுத

சிரமும் இருக்கும்

எழுதும் பிழையைத்

திருத்துவது முடியாது

அது எது?



பொருள்:

காந்தி - அழகு








மோகனப் புன்னகை...





அவள் இதழ் அவிழ்ந்தால் புன்னகை

அவள் இதழ் குவித்தால் மென்னகை

அவள் இதழ் மகிழ்ந்தால் நன்னகை

நாணம் கொண்டு நெகிழ்ந்த அந்நகை...


அவளின் புன்னகை என் உயிரின் மோகனமா?

ஆவல் கொண்டு நானேறும் மயிலின் வாகனமா?


முத்துக்கள் நிறைந்த மூன்றாம் பிறையா?

முன்னழகில் மறையாத நான்காம் துறையா?


முன்னின்று முகப்பளக்கப் படையெடுக்கும் அத்திரமா?

என்னென்று சொல்லவொண்ணா பேரழகின் சித்திரமா?


இதழ்வெல்லும் இனிமை கொடுக்கும் கோவையா?

பதில்சொல்லும் தனிமைக்கு துணையாகும் பூவையா?


ஆழக்கடலுக்குள் நீந்த வழிகாட்டும் முத்தினமா?

பழகும் உடலுக்குள் வந்து ஒளிகூட்டும் ரத்தினமா?


முத்தம் கனிந்து வரும் மோகத்தின் விளைவிடமா?

அர்த்தம் பல கொடுக்கும் தேகத்தில் முளைவிடுமா?


அமிழ்தம்போல் சுரக்கும் உமிழ்நீரின் அட்சயப் பாத்திரமா?

தமிழ்போல் இனிக்கும் மொழியூறும் காட்சியின் சூத்திரமா?


அணைமீறித் ததும்பும் வெள்ளத்தின் சங்கமக் குமிழா?

துணைதேடும் விரல் வந்து தழுவும் குங்குமச் சிமிழா?


இரண்டாக மடித்து மெதுவாய்த் திறக்கும் பால் நிலவா?

திரண்ட பருவத்தில் தோன்றும் இன்பத்தின் மேல் உலகா?


பக்கவாட்டில் தூக்கலாய் ஒளிவிடும் விளக்கின் சுடரா?

பூக்கள் விரியும் அழகைக் கவியில் அளக்கும் தொடரா?


உலகை மறக்கச் செய்யும் ஒருவகை யுக்தியா?

உணர்வை இழுத்துச் செல்லும் குறுநகை சக்தியா?


திலகம் விளங்கும் முகத்தை தாங்கி வரும் நறுமுகையா?

திருந்தா உள்ளத்துக்கும் திருத்தமாக விளங்கும் சிறுநகையா?


காதற் பிணியைக் கனிவாய்ப் போக்கும் விலைமிகு மருந்தா?

சாதல் இதற்கில்லை என்று சொல்லும் கலைமிகு விருந்தா?


மாதர் முகத்துக்கு தேவனவன் மகிழ்ந்து தந்த கொடையா?

போதாக் குறைக்கு காமன் கேள்விகளுக்கு வந்த விடையா?


நங்கையவள் சிரித்தால் தோற்று விடுவாள் மேனகையே!

பொங்கும் உள்ளம் பூரித்தால் தோற்று விடும் பூநகையே!



அந்த மேனகையால் சரிந்தது என் மனம் மட்டுமல்ல...

அந்த பூநகையால் சரிந்தது அனுதினமும் தான்....


அவள் இதழ் பிரித்தாள் மோகனப் புன்னகை உருவானது...

அவள் எனைப் பிரிந்தாள் கவியில் அந்நகை கருவானது...


அவள் இதழ் பிரித்தாள் உணர்வில் ஒருமாற்றம் உண்டானது...

அவள் எனைப் பிரிந்தாள் உள்ளம் ஏமாற்றத்தில் திண்டாடுது...

கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ!



வெண்தாமரைக்கு அப்புறமாக செந்தாமரை என்று இரண்டாவதாக

பெண்தாமரை ஒன்று உதித்ததினால் பெருமகிழ்ச்சி பிறக்கட்டும்...

கண்தாமரையென இரண்டும் காட்சியிலே ஒன்றாகக் கண்டு உள்ளம்

தண்தாமரையாய் மலர்ந்து உவகை கொண்ட மணமும் சிறக்கட்டும்...



கண்ணன் பிறப்பான் என்றே கனவு கண்டும் அதீத நம்பிக்கையும் கொண்டாய்...

பெண்ணாய் பிறந்ததென்று மனதில் மகிழ்வும் கொண்டு பெருமிதம் கொள்வாய்...


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் வேண்டுமம்மா - இரண்டாவதும்

மங்கையாய்ப் பிறந்து விட்டால் மாமாதவம் செய்திருக்க வேண்டுமே....



கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ! - முன்பு

கண்டதன் காலமின்றும் வென்றதன் கோலமன்றோ! - அன்பு

கொண்டது கண்ணென்றால் வென்றது பெண்ணன்றோ! - கனவு

கண்டது இன்னொன்று ஆனால் வென்றது என்னென்று...?



கற்பனையில் காண்பெதெல்லாம் கவியாவதின்

சொற்பலன் யாவுமென்றும் வெற்றியாவதில்லை...

முற்பயன் கொண்டதெல்லாம் புவிமீதினிலே

பிற்பலன் நடந்த கதையின் தொடர்ச்சியே...



நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

நினைவினில் இன்று கடந்தது நன்று....


அணைத்தது அன்று அணைப்புக்குள் நின்று

அணைப்பினில் வென்று துணையானது இன்று...



பாதையை வகுக்கலாம் பயணத்தைப் பகுப்பது யார்?

போதையில் கதைக்கலாம் தெளிந்ததும் மிதப்பது யார்...?



தள்ளைப் பெறும் முன்னே கனவில் தவிப்பதும்

பிள்ளை பெறும் முன்னே பெயர் வைப்பதும்

வெள்ளை வெயில் முன்னே குளிர்காய்வதும்

கொள்ளை மையல் கொள்ளச் சூடாவதும்

கூடாதென்பது தேடுவதை நாம்பெறவே...




இன்றைய நாகரிகம்:

தமிழிலே முனைவர் பட்டமும் பெற்று

அமிழ்தினும் இனிய பெயர்களை விடுத்து

சமஸ்க்ரிதத்தில் பெயர் தேடி வைப்பதன்

மமதையைத் தான் இன்றைய நாகரிகம்

என்பேன்....



இது தமிழுக்குச் செய்கின்ற ஒருவிதத் துரோகம் ஆகும்...



வந்தாரையும் வாழ வைப்பது தமிழ்நாடு - பாதி

வெந்தாரையும் மீறி நொந்தாரையும் - துன்பம்

தந்தாரையும் துரத்தி வந்தாரையும் - இன்பம்

தந்தாரையும் ஏங்கிச் சென்றாரையும் வாழ

வைப்பது தாய் தந்த தமிழல்லவா - காப்பது

நாமதற்கு செய்யும் தொண்டல்லவா - பிள்ளை

நாமங்கள் இடுவதிலும் உண்டல்லவா...




ஒன்று மறுக்கப்படும் போது அதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில்

என்றும் பயனில்லை...




நூலறுந்த பட்டம் போலறுந்தது போலிருக்கும்

நாதமும் சுரோணிதத்தில் போய் விழுந்ததும்

வாலறுந்து மெல்லக் கருவாய் உருவாகியதுவும்

வளர்ந்து ஆண்-பெண்ணாவது அவரவர் விதியே...



ஓடும் நதி கரையை நனைக்கிறதா? இல்லையதைத்

தேடும் விதி தரையை நனைக்கிறதா? எல்லையை

நாடும் நதி கடல் அலையில் முடிகிறதா? இல்லையது

கூடும் விதி ஆடல் நிலையில் முடிகிறதா?




ஓடும் வெள்ளத்திற்கு தான் தெரியும் நதியின் திசை...

பாடும் உள்ளத்திற்கு தான் புரியும் நாதத்தின் இசை...

ஆடும் ஊஞ்சலை அந்தரத்தில் கட்டி விட முடியுமா...?

தேடும் மஞ்சத்தை மந்திரத்தில் எட்டி விட முடியுமா...?

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...




புரியாத உள்ளம் இளகவும் அறியாமை இருள் விலகவும்

தெரியாத கேள்வி விளங்கவும் கிடைக்காத அருள் வழங்கவும்

எரியாத விளக்கு ஒளிவிடவும் விலகாத அன்பில் களித்திடவும்

சரியாத எண்ணம் பிறந்திடவும் அழியாது பண்பைக் காத்திடவும்

தீபாவளி திருநாளில் இறைவனின் ஆசி பெற்று மகிழ்ந்திடவும்

வாழ்த்துக்கள்....



ஐப்பசியின் மழையாலே முப்பசியின் விழைவாலே

எப்பசியும் கொண்டார்க்கும் அப்பசியை வென்றார்க்கும்

சொற்பசியின் கவிபோலே நெற்பசியில் புவியனைத்தும்

நற்பசியோடு சுவைத்து பொற்பசியொடு வாழ்ந்திடவும்

தீபங்களின் ஒளி வரிசையிலே அசைகின்ற உள்ளங்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....



ஐக்கியமாகும் ஒளிவெள்ளம் ஐப்பசியில் இறைவனின் அருளாலே

யோக்கியமாகும் எண்ணங்களில் எல்லாம் ஈடேறிய உள்ளத்தின்

பாக்கியமாகும் களிப்புடனே தீபாவளியைக் கொண்டாடிடவே

வாக்கியமாகும் வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்...



இறைவனடி சென்றார்க்குப் படையலிட்டு

இதயந்தனில் நின்றார்க்கு உடைகளிட்டு

குறைமனதை வென்றாரின் விடைபெற்று

உதயந்தனில் தீப ஒளியேற்றி வழிபட்டு


இந்த தீபாவளியை வரவேற்போம்...



மத்தாப்புப்பூ போலே எண்ணங்கள் உள் தோன்றவும் அதன்

முத்தாய்ப்பான வண்ணங்கள் புறம் தோன்றவும் இருளகல

எத்திக்கும் ஒளி கொடுக்க ஏற்றி வைத்த தீபம் போலவே

தித்திக்கும் வாழ்வமைய போற்றுவோம் தீபாவளியை...





பொருள்:

முப்பசி: உணவுப்பசி, உணர்வுப்பசி, உயிர்ப்பசி...

உயிர் பசித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே வசித்திருக்கிறாய்...

உடல் பசித்திருப்பதாலே நீ இப்பூவுலகை ரசித்திருக்கிறாய்...

உணர்வு தகித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே சுகித்திருக்கிறாய்...

Friday, March 8, 2013

முடியுமா?

ஆர்வம் தலைப்படும் போது
 
எண்ணம் கலைப்படுகிறது...
 
அது காதல் கொள்ளும் போது
 
அந்த எண்ணமே இரும்பாகும்
 
எந்த இதயமும் துரும்பாகும்...
 
 
 
உதடுகள் வாசித்து உள்ளத்தால் யோசித்து வருவதல்லக் காதல்...
 
மனுதுக்குள் யாசித்து மறையும் வரை நேசிப்பது தான் காதல்...
 
 
 
காதல் வந்த அனைவருமே தன்
 
உணர்வுகளின் ஒளியைக் கொண்டு
 
மரணம் எனும் மார்க்கம் அடையும் வரை
 
உள்ளத்தின் நிழலைத் தேடுகிறார்கள்...
 
 
 
பருவத்தின் பாதையிலே சில நேரம் காதலொரு உணவு...
 
பழகியபின் பார்த்தால் காதலொரு பகுதிநேர உணர்வு...
 
 
 
உதட்டுக்கும் உணர்வுக்கும் இடையே உலவிய காதல்
 
பகட்டுக்கும் பார்வைக்கும் விருந்தாகி கலவியில் முடியும்...
 
 
 
உள்ளத்துக்கும் உணர்வுக்கும் இடையே உலவும் காதல்
 
உலகுக்கும் வானுக்கும் இடையே நிலவாய் ஒளிரும்...
 
 
 
விலக நினைக்கும் போது
 
பழக எண்ணுவதும்
 
பழக நினைக்கும் போது
 
விலக எண்ணுவதும்
 
காதலின் தலைசிறந்த
 
ஊடலாகும்...
 
 
 
உணர்வு அதிகாரம் செலுத்தும் போது காமம் அடங்கி விடுகிறது.
 
பருவம் அதிகாரம் செலுத்தும் போது காதலும் முடங்கி விடுகிறது...
 
 
 
பிறப்புக்கும் இறப்புக்கும் தடைபோடும் துல்லியக் கோடு தான்
 
காதலுக்கும் காமத்திற்கும் இடையேயான மெல்லியக் கோடு...
 
 
 
வளரும் செடியில் பருவப் பூவாவதும் காதல்
 
தளரும் போது துருவப் பனியாவதும்  காதல்...
 
 
 
கடற்கரையில் நின்று கொண்டு
 
கடல்நீர் முழுவதும் தன்
 
இருகைகளிலே அள்ளிவிட
 
நினைப்பதும் காதல்...
 
பின்
 
அக்கரையில் வந்து 
 
கடல்நீர் குறைந்ததென  
 
இரு கைகொண்ட நீரை
 
வார்ப்பதும் காதல்...
 
இடையில் ஒழுகிய நீர்
 
எண்ணத்தால் மனதைக்
 
கழுவவதற்கோ?
 
 
 
மன்மதன் வரைந்த கோடு
 
தொடங்கிய புள்ளியே காதல்...
 
 
 
ஆசைக்கு புள்ளி வைப்பதும்  
 
அதனைக் கிள்ளி வைப்பதும் 
 
ஓசையின்றி தள்ளி வைப்பதும்
 
ஓயும்வரை அள்ளி வைப்பதும்
 
காதல்...
 
 
 
முன்னுக்கு பின்
 
முரணாக தான் கொண்ட வாழ்வும்
 
சரணாகதி ஆவது காதலில் தான்...
 
 
 
சத்தமின்றி பருவம்
 
காலத்துக்கு கொடுக்கும்
 
முத்தமே காதல்...
 
 
 
ரத்தமின்றி புருவம்
 
இதயத்துக்கு தொடுக்கும்  
 
யுத்தமே காதல்...
 
 
 
மூடியப் புத்தகத்தின் முடிவுரையாவது காதல்...
 
தேடியே நாளும் படிக்கத் தூண்டுவதே காதல்...
 
 
 
பெண்ணவளின் பருவம் வரைகின்ற
 
கண்கவரும் ஓவியமே காதல்...
 
 
 
 
 
நான் கொள்ளும் காதலை
 
மறக்க முடியுமா?
 
இல்லையென்றாலும்
 
மறுக்க முடியுமா?
 
என்ற சொல்லின்
 
இறுதியும் அவளே!
 
 
 
என்
 
உள்ளத்தின் மாணிக்கமான
 
காதலும் அவளே!
 
 
 
விளங்க முடியா மனதின்
 
விளக்காவாள் அவள்...
 
வழங்க முடியா காதலின்
 
ஒளியாவாள் அவள்...

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்...

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்

உதட்டளவில் இருந்து என்ன பயன்?

எண்ணத்திலே தமிழ் சிறக்க வேண்டும்

எங்கும் அதன் புகழ் பறக்க வேண்டும்

உயிரிலே தமிழ் கலக்க வேண்டும்

உயர்வானதென்ற இலக்கும் வேண்டும்

நடையினில் தமிழ் மணக்க வேண்டும்

நம்மொழி என்ற இணக்கம் வேண்டும்

விடையினில் தமிழ் வெல்ல வேண்டும்

விளக்கத்தில் அதைச் சொல்ல வேண்டும்

ஒற்றுமையில் தமிழ் உலவ வேண்டும்

வேற்றுமையிலும் தரம் நிலவ வேண்டும்

தோன்றிய இனத்தைக் காத்திட வேண்டும்

தோல்வியிலும் ஒன்றிக் கூடிட வேண்டும்

வாய்மொழிகள் ஆயிரம் இருந்தும் தன்

தாய்மொழிக்கு பெருமை தேடிட வேண்டும்

உள்ளந்தனில் தமிழ் வாழ வேண்டும்

உலகந்தனில் தானாய் தமிழ் வாழும்...

காதலைப் பற்றிய என்மொழிகள்​...

காதல் - அது

உன்னைப் பார்க்கும் கண்ணாடியாகவும்

பெண்ணைப் பார்க்கும் முன்னோடியாகவும்

திகழ்கிறது...

அதிலே

அன்பைக் காணலாம் - நல்ல

பண்பைக் காக்கலாம்...





உன்னை

ஏற்றி விடும் ஏணியாகவும்

மனத்தின்கண் கேணியாகவும்

ஆசைக் கடலின் தோனியாகவும்

அன்புத்தேடலின் அபிமானியாகவும்

விளங்குவதே காதலாகும்...





         காத்திருந்தும் அலைந்தும்

         விக்க வைத்தும்

தொல்லை தருவதே காதல்...


      காலம் கடந்தும் 

      ழுவத் துடிக்கும்

   எல்லையே காதலாகும்...





கண்கள் வரையும் ஓவியத்திற்கு

கருத்தினில் வண்ணம் கொடுப்பது

காதலாகும்...


கருத்தினில் எழும் எண்ணத்திற்கு

கழுத்தினில் சரம் தொடுப்பது

காதலாகும்...


கழுத்தினைத் தொடும் சரத்திற்கும்

களிப்பினைக் கலந்து கொடுப்பது

காதலாகும்...


களிப்புடன் தொடரும் நேரத்திற்கும்

கவர்ச்சியும் நலமும் கொடுப்பது

காதலாகும்...





காற்றுள்ளவரை காதலும் இருக்குமது 

காணும் நெஞ்சில் எண்ணத்தின்

ஊற்றுள்ளவரை காதலும் சிறக்குமது

பேணும் கொஞ்சம் பேருள்ளவரை...





ஊரையும் மறந்து உறவிலே

மிதந்தது அன்றையக் காதல்...


நாரையும் மறந்த பூக்களாய்

மாறுவது  இன்றையக் காதல்...



தேரையும் மறந்த தெய்வத்தைத்

தேடியது அன்றையக் காதல்...


யாரையும் மணந்து எப்படியும்

வாழ்வது இன்றையக் காதல்...



நீரைப்போல தெளிந்து ஆறாய்

ஓடியது அன்றையக் காதல்...


சேறைப்போல களிந்து மாறாய்க்
 

கூடுவது இன்றையக் காதல்...



வேரைப்போல் பற்றிய உள்ளத்தை

நாடியது  அன்றையக் காதல்...


காரைப்போல் பருவத்தைக் கவர்ந்து

மூடுவது இன்றையக் காதல்...


கார் - கருமேகம்



ஊழ்வினையில் மீள்வினையைத் தேடியக் காதலும் காலத்தால் 

மீள்வினையும் ஊழ்வினையில் முடிந்தால் திருமணம் காணும்...


வாழ்மனையில் தாழ்வினையை நாடியக் காதலும் கோலத்தால்

தாழ்வினையில் மீள்வினையின்றி மடிந்தால் பிரிவைக் காணும்...

பேரின்பமே காதலாகும்...

பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மேல் ஆசை கொண்டு

கண்ணும் காட்சியை கருத்தினில் பதிவு செய்யும் போது

எண்ணம் தலைப்பட்டு ஏக்கமும் ஏற்பட்டு ஆண்மையும்

பெண்மையும் கூடி வாழ முற்படுவதே காதலாகும்...



ஏக்கத்தில் தொடங்கி எதிர்காலமே அவளென நினைந்து

பக்கத்தில் வந்துப் பழகத் துடிக்கும் விழிகளில் புனைந்த

தூக்கத்தை இரவுக்குக் கொடுத்து எண்ணமும் வளர்த்து

அக்கணத்தில் அவளிடத்தில் அடங்குவது காதலாகும்...



விழிகள் வரையும் கோலத்திற்கு விதியின் கோடுகளால் 

வழிகள் எங்கும் புள்ளியிட்டு மதியின் விளையாட்டால்

மொழிகள் கரையும் காலத்திற்குள் ஆசையின் உலகத்தில்

பழிகள் யாவும் பார்க்காமல் தொடர்வது தான் காதலாகும்...



எவ்விடம் எக்குலம் என்று ஏதும் எண்ணாது அக்கணம்

அவ்விடமே சொர்க்கமென நினைந்து உயிர் வளர்க்கும்

எவ்வித உணர்வுகளுக்கும் ஊக்கம் கொடுத்து தொடரும் 

அவ்வித மயக்கத்தில் உள்ளம் நனைவதே காதலாகும்...



காமத்துக்கு முன்தோன்றி பூவாய் மலர்ந்து கனிந்த

யாமத்துக்கு பின்தோன்றும் விடியலைச் சேர்ந்திடும்

ஏமத்துக்கு முன்தோன்றி  துணையாகும் அவளுடைய

நாமத்துக்கு பின்தொடரும் பேரின்பமே காதலாகும்...



நாசியில் சுவாசமாய் நாளெல்லாம் ஒற்றுமையாய்

ஆசியில் தெய்வமாய் ஆதார தீபமாய் ஒளிவீசும்

காசியில் கங்கையாய் காதலெனும் வெள்ளமாய்

மாசியில் மகத்துவம் பெற்றிடவே வாழ்த்துக்கள்...



 
காதலைப் பற்றிய அறிவியலின் கூற்று:


ஆதியில் தோன்றிய காதலாயினும் - பின்

பாதியில் தோன்றிய காதலாயினும் - முன்

சாதியை மறந்த காதலாயினும் - எதுவும்

வேதியல் மாற்றத்தால் விளைவதே ஆகும்.



கயல்விழியின் ஈர்ப்பால் தொடரும் ஆசையும் 

மையல்வழியின் சேர்ப்பால் பழகும் ஆர்வத்தில் 

முயல்கையில் தோன்றுகின்ற காதலாயினும்

இயற்பியல் மாற்றத்தின் விளைவே ஆகும்...



விலங்கியலாய்த் தோன்றிய மனிதனும் தன்னுடைய

கலங்கியலாய் இருந்த எண்ணமும் வெளிப்பட்டுத்

துலங்கிடவே தனக்கொரு துணைதேடி அலைந்து

நலங்கெடாத நங்கையிடம் காதல் கொண்டான்...

ஒருகையோசை...

உணர்வுகளில் ஊடுருவும் வலியை

உருவத்தின் தனிப்பட்ட பொலிவை

உள்ளந்தனில் மறைக்கப்பட்ட நலிவே

ஒருகையோசையின்  ஒலியே ஆகும்...



விரலிருந்தும் மீட்டும் வீணையில்லை - முத்துப்

பரலிருந்தும் மோகனவாயின் நகையில்லை - கத்தும்

குயிலிருந்தும் கூவும் அழைப்பில்லை - கொத்தும்

மயிலிருந்தும் தாவும் அணைப்பில்லை...



விளக்கிருந்தும் விழியருகில் ஒளியில்லை - மனதில்

விளக்கமிருந்தும் விரகத்தில் தெளிவில்லை - ஆற்றில்

கொக்கிருந்தும் கொத்திவிட மீனில்லை - எட்டுத்

திக்கிருந்தும் மதியொளி  வீசிட வானில்லை...



பூவிருந்தும் அள்ளிச் சூடிடத் தலையில்லை - மடல்

பூவிரிந்தும் துள்ளி ஆடிடும் நிலையில்லை - உடலில்

நோவிருந்தும் பள்ளி சேர்ந்திடத் தடையில்லை - உள்

நோக்கிருந்தும் எள்ளி நகையாடும் இடையில்லை...



சிலையிருந்தும் செதுக்கும் உளியில்லை - கண்ணில்

சோகம் ததும்பி  வடிக்கும் துளியில்லை - பெண்ணில்

கலையிருந்தும் மயங்கும் வழியில்லை - எண்ணில்

கருத்திருந்தும் இயங்கும் மொழியில்லை...



விதியிருந்தும் சேர்ந்து வாழும் திறனில்லை - மேலும்

விலகிச் சென்றால் வேறேதும் அறமில்லை  - நாளும்

மதியிருந்தும் தேர்ந்து வாழும் பொறுப்பில்லை - அதை 

மனதிலிருந்து சொல்வதற்கும்  மறுப்பில்லை...



விடையிருந்தும் வினவுவதற்கு இடமில்லை - இனி

விடுத்துச் செல்ல வேறெங்கும் தடமில்லை - கையில்

குடையிருந்தும் நனைவதற்கு மழையில்லை -  காலம்

கடந்து நினைப்பதற்கு இதுவும் பிழையில்லை...

ஏக்கம்...

உருவம் வளர்ந்த பின்

உள்ளத்தில் படர்ந்தது

ஏக்கம்...


பருவம் கிளர்ந்த பின்

பக்குவமாய் தொடர்ந்ததன்

தாக்கம்...


புருவம் உயர்ந்த பின்

பூமடல் மெல்ல திறந்ததன்

நோக்கம்..


உணர்வுகள் எழுந்த பின்

உள்ளுக்குள் கடந்ததன் 

மார்க்கம்...


இரவுக்குள் ஒளிந்த பின்

இன்பத்தின் விடியல் தான்

யார்க்கும்...




     ...ஏக்கம்...

தொங்கிய முந்தானையில்

தவங்கிடந்த முள்ளிழுத்தது

அவன் தான் இழுத்தான் என

அவள் ஏன் நடித்தாள்...?


ஏங்கிய அவனுக்கு முன்

முந்தியது அந்த முள்ளா...?

இழுக்க மறந்து சிக்கிய

முந்தானையின் உள்ளா...?

மாறி வரும் உலகம்...

ஆசையின் அளவும் பெருகியதால்

ஆடையின் அளவும் குறுகியது...

உணர்வுகளின் அளவும் பெருகியதால்

உள்ளத்தின் அளவும் குறுகியது...

ஓசையின் அளவும் பெருகியதால்

உரையாடும் அளவும் குறுகியது...

பணத்தின் அளவும் பெருகியதால்

பண்பாட்டின் அளவும் குறுகியது...



மாறி வரும் உலகம் ஆசையில்

ஊறி வரும் உலகம் அறிவியலில்

தேறி வரும் உலகம் நோயில் முன்

ஏறி வரும் உலகம் நவநாகரிகமாய்...

  ...மாறி வரும் உலகம்...


தூசினில் தோன்றிய இவ்வுலகம்

மாசிலாது இருந்தது அப்பொழுது

மாசுபட மனிதனின் படைப்பும்

காசுபட கறை கொண்டது...



நதிகளும் மலைகளுடன் தோன்றிய

விதிகளுடன் இவ்வுலகம் மனிதனின்

ஆக்கிரமிப்பில் மறைந்தது கொஞ்சம்

உட்கிரகித்தால் மாறுவது கொஞ்சம்...



உழவொன்றே தொழிலாகி இருந்து

சுழன்று கொண்டிருந்து உழைப்புடன்

வளர்ந்த சமுதாயமும் இப்பொழுது

தளர்ந்தது ஏனைய தொழிலால்...



களவுகளும் பெருகியது பணத்தால்

செலவுகளும் பெருகியது நினைத்தால்

நாகரீகமாய் வளர்ந்த உணர்வும்

நான்கு கால்களில் நடந்ததால்...



ஆடையும் ஆசையும் வளர்ந்தது

ஓடையும் ஆறாய் நிறைந்தது

நிலந்தனில் ஆவலும் பிறந்தது

நிர்வாண நிலையில் மறைந்தது...

ஏனென்றும் தெரிவதில்லை?

ஏன்...?

ஏனென்றும் தெரிவதில்லை

ஊனென்றும் புரிவதில்லை

வானொன்று தானதில்

வாழ்வொன்று தான்...

ஏனதில் உயிரொன்றும்

ஆனதில் உணர்வென்றும்

நீருக்குள் மீனைப் போல்

பாருக்குள் பல பேருக்குள்

ஒளிந்து நீந்திக் கரை காண

நெளிந்து செல்லும் கோலங்கள்...





பெண்...

தூக்கிக் கொடுப்பவளும்

தூக்கி விடுபவளும்

பெண் தான் - மொழியும்

நாக்கில் இருப்பவளும்

ஆக்கித் தருபவளும்

பெண் தான் - பொழுதுப்

போக்கில் வருபவளும்

ஊக்கம் தருபவளும்

பெண் தான் - சுமந்து

யாக்கைத் தருபவளும்

வாக்கைப் பெறுபவளும்

பெண் தான்...

 
பொருள்:  ஊன் - சதையுடன் கூடிய உடம்பு, பார் - உலகம், தூக்கு - ஆராய்ந்து அல்லது காலம் நீட்டித்து,

ஆக்கி - சமைத்து (உணவு மற்றும் உடல்), மொழிதல் - பேசுதல், ஊக்கம் - நம்பிக்கை, யாக்கை - உடம்பு,

கோலமயில்...

பூசல் தொடுக்கும் காலையில் போராடி எழுந்து

புனல் தனிலே பூவுடல் நடுங்க நீராடிக் குளித்து 

வாசல் தெளித்து வளமான மங்கையவள்

வனப்பான மேனியிலே ஆடைப் புனைந்து

பின்னாமல் கார் கூந்தல் விரித்ததன் மேலே

படரவிட்டு  கருஞ்சாந்துப் பொட்டிட்டு இல்லை

அன்னாமல் இருக்கும் இடையசைத்து மெல்ல

அன்னத்தின் நடையசைத்து அமர்ந்தெழுந்து

குலுங்காத தனமும் குளிரின் நெருக்கமும்

கொட்டியளக்கும்  மாக்கோலத்தின் அழகும்

அலுங்காது அடியெடுத்து முகத்தில் விழும்

அந்த முடிதிருத்தி  பூக்கோலம் வரைகின்றாள்

காலமகள் பெற்றெடுத்த கன்னி மயிலுந்தன் 

கால்கள் நடமாடி வரையும் ஓரழகும் வளர்

கோலமயில்
தோகையின் எழிலெல்லாம் 

கூடி என்னை வெல்லும் பேரழகன்றோ! 

கவித்துளிகள்...

ஓடுகின்ற ஆற்றினில் விழுந்த மழைத்துளிப் போலே நான்

தேடுகின்ற எண்ணத்தில் எழுந்த கவித்துளிகள்...


கூடுகின்ற கரையினில் எழுந்த அலைகளைப் போலே நான்

நாடுகின்ற உள்ளத்தில் விழுந்த கவித்துளிகள்...




எண்ணம் கலைப்படும் போது

எழுத்தும் தலைப்படுகிறது...


உள்ளம் நிலைப்படும் போது

உணர்வும் கலைப்படுகிறது...


உருவம் சிலைப்படும் போது 

பருவம் நிலைப்பெறுகிறது...


பெண்ணும் எதிர்ப்படும் போது

கண்ணும் புதிர்ப்படுகிறது...


கருத்தும் பலப்படும் போது

கவியும் புலப்படுகிறது...


உண்ணும் கலந்தொடும் போது 

உடலும் பலம் பெறுகிறது...


பெண்மை புலப்படும் போது 

பேரின்பம் வலம் வருகிறது...


காமம்  வலம் வரும் போது

காதல் புலம் பெயர்கிறது...


உண்மை நிலையறியும் போது 

உறவும் கலைப்படுகிறது...

பொங்கல் வாழ்த்து...

கார் பெருகி மழை பொழிந்து நதியெங்கும் 

நீர் பெருகி வயல் வழி ஓடி பயிர் வளர்ந்து

ஏர் பெருகி உலகெங்கும்  உழவு செழிக்க

ஊர் பெருகி உவகையுடன் கொண்டாடும்

சீர் பெருகிச் சிறந்திட வாழ்த்துகிறேன்...



கழைய வேண்டியவற்றை உள்ளதிலிருந்து கழித்து

உழைப்பினையும் உடலின் உறுதியையும் பெருக்கி


தழைக்கும் நல்வாழ்வினை  உணர்வினில் வகுத்து

அழைக்கும் அன்பும் மகிழ்ந்திட பொங்கல் வாழ்த்து...





உயிர்கள் உய்யவும்

பயிர்கள் செய்யவும்

பயன்படட்டும் இவ்வாண்டு...

பலன்பெறட்டும் நம்மக்கள்...



பொங்கலோ பொங்கல்...



உள்ளத்திலே உணர்வுகள் பொங்கட்டும்...

உலகத்திலே உழவுகள் பொங்கட்டும்...

வள்ளத்திலே உணவுகள் பொங்கட்டும்...

வழக்கத்திலே  உவகையும் பொங்கட்டும்...

வெள்ளத்திலே நதிகளும் பொங்கட்டும்...

விளக்கத்திலே மதியும் பொங்கட்டும்...

பள்ளத்திலே அருவிநீர் பொங்கட்டும்...

பழக்கத்திலே பண்பாடும் பொங்கட்டும்...


வள்ளம்  - கிண்ணம்

புத்தாண்டு நல்வாழ்துக்​கள் 2013...

கடந்த ஆண்டில் எடுத்த கடமைகளைச் செய்ய

நடந்து வந்த தூரத்தை இன்னும் கடப்பதற்காகவே

தொடர்ந்து வரும் இந்த ஆண்டிலும் முயற்சியோடு

நடந்து அவரவர் இலக்கை அடைய வாழ்த்துகிறேன்...




ஈராயிரத்து பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்தாலும்

ஓராயிரம் ஆசைகளின் படியில் உள்ளம் இருந்தாலும்

சீராயிரம் எண்ணங்கள் சிந்தனையின் பிடிவைத்தாலும்

ஏராயிரம் செழித்திடவே என்னுடைய வாழ்த்துக்கள்...




வீடு கடந்து மனையாள் மதி கடந்து வீதி நடந்து

நாடு கடந்து வினையால் விதி விட்ட வழி நடந்து

ஏடு கடந்து சிந்தையின் கதி நடக்க விழி நடத்தும்

பாடும் தொடரும் ஆசையும் பயன்பட வாழ்த்துக்கள்...





கேட்டதெல்லாம் கிடைக்கட்டும்

விட்டதெல்லாம் தொடரட்டும்

தொட்டதெல்லாம் துலங்கட்டும்

பட்டதெல்லாம் தளிர்க்கட்டும்...



விழி பார்த்து நடந்த வாழ்வினிலே

கை கோர்த்து கடந்த பொழுதைப்போலே

வழி பார்த்து  இனிவரும் நாளையும்

மெய் சேர்ந்து  கடந்திட வாழ்த்துகிறேன்...




அகப்பையில் புகப்பட்ட ஆசைகள் யாவும்

நகம்கையில் வளர்வதைப்  போலே வளர்ந்து

யுகம்கையில்  கிடைத்ததென  வாழ்ந்து வந்தால்

சுகம்கோடி உன்னைச் சுற்றித் தொடராதோ? 



தீர்மானங்கள் எடுக்கவும்

ஏர்மானங்கள் காக்கவும்

போற்குணங்கள் மறையவும்

நீர்நிலைகள் செழிக்கவும் 

இந்நாட்டிற்கு படிக்கட்டாக

இந்த ஆண்டு அமையட்டும்...



 


இதய கூண்டுக்குள் எழுந்த எண்ணங்கள் யாவும்

இந்த ஆண்டுக்குள் கைகூடிட வாழ்த்துகிறேன்...

ஏட்டில் எழுதாத கவியே!

ஒற்றைச் சொல்லாய் இருந்தவன் உன்னால் வாக்கியம் ஆனேன்...

நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென்   பாக்கியம் ஆகும்...



கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்

உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...



கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்

ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...

ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்

சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...



தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்

கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின் 

ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்

வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...



மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்

மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...



ஏட்டில் எழுதாத கவியே என்முன்

எழுந்து வந்தது போலே என்மனக்

காட்டில் பருகாத தேனாய் அன்புக்

காட்டிடவே வந்தவள் நீயே!



சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்

அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்

பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம் 

திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...



விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்

உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...



உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்

உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...

வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்

உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...

உன்னையே நான் கேட்பேன்...

என் எண்ணத்தை எதிர்வைத்து

உன்னையும் அதன் முன்வைத்து

எது வேண்டும் என்று கேட்டால்...

உன்னையே நான் கேட்பேன்...

ஏனென்றால் என் எண்ணமெல்லாம்

நிறைந்தவள் நீயல்லவா.....

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

சிந்தனையில் உருவான எண்ணங்கள் திறக்கவும்

சிந்தையில் எழுந்த நினைவுகள் அருகிச் சிறக்கவும்

நந்தன வருடத்தின் நாளெல்லாம் நன்றாகிட நாமும் 

வந்தனம் செய்து வரவேற்போம் இப்புத்தாண்டை... 

 



கதிர்படும் நெல்லெல்லாம் களத்துமேட்டில்

முதிர்பெற்று இல்லத்தில் சிறப்பதைப் போலவே 

எதிர்படும் சொல்லெல்லாம் உளத்துமேட்டில்

முதிர்பெற்று செல்லுமிடத்தில் சிறக்க வேண்டும்....
 



இடை நழுவிய ஆடையை மானம் காத்திடவே

இழுத்துப் பிடிக்கின்ற கைகளைப் போல காலத்தின்

எடை நழுவிய கடந்த வருடத்தின் மானம் காக்க

எதிர்வரும் நந்தனத்தின் உடை கொடுப்போம்....

வறுமை...

வாடிக்கையான நாட்களிலே வாழும் வாழ்கையிலே

வேடிக்கை காட்டும் வறுமை வந்து பாழ்வினையில்  

தேடிக்கை கூடும் உணவும் வாய்க்கு எட்டாமலும் 

பிடிக்கையில் சிக்காமலும் பரிதவிக்கும் பரிதாபம்...


பிறப்பு இங்கே...

இறப்பு அங்கே...

இரண்டுக்கும் நடுவே

இறைவனின் பொறுப்பு எங்கே?

நெரிஞ்சிப் பூவாய் நெருங்கும் கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     


செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...

சேலையைப் பற்றின்:

குதிங்காலைப் பிசக்குவதும் 

அதிகாலையில் கசங்குவதும்  

முரண்கொண்ட அழகைக்கூட  

அரண்கொள்ளப் பழகுவதற்குத்

திறங்கொண்ட மேனியிலும்

அறங்காக்கத் துணியும் சேலை...





கோபத்தை மூடிமறைக்கவும் நெஞ்சின்

தாபத்தை மூடித்திறக்கவும் எஞ்சிய

முன்னழகைப் பூட்டவும் மிஞ்சிய

பின்னழகைக் காட்டவும் கொஞ்சும்

வண்ணங்களைக் கூட்டும் வஞ்சியின்

எண்ணங்களைத் தீட்டும் சேலை...




குனிந்த அழகைப் பெண்ணோடு

தொனித்துக் கூறுவதும் - முன்

பணித்த எழிலை கண்ணோடு

துணிந்து கூறுவதும் - காலம்

கணித்த நிலையை  வனிதை

அணிந்துக் கூறுவதும் சேலை...



 முதல் இரவில் விலக்கினால் பெண்ணுக்கு இன்பம்

"முதல்" வரவின் இலக்கானால் ஆணுக்கு இன்பம்...

மறுநாள் காலையில் சேலையைத் துலக்கினால் பேரின்பம்...

மணநாள் மாலையின் அர்த்தத்தை விலக்கினால் பெருந்துன்பம்...




ஆசையை சேலையிலே விரித்திடுவாள்

அபிநயங்கள் அதன்மேல் புரிந்திடுவாள்

ஓசையின்றி வேலையைத் தெரிந்திடுவாள்

ஓயும்வரை கரையானாய் அரித்திடுவாள்  ...




பழகப் பழகப் பாலெனவே  புளித்திடுவாள்...

புளித்த கள்ளின் போதையெனக்  களித்திடுவாள்...

இளக இளக நெய்யெனவே  உருகிடுவாள்..

எதிரும் புதிருமாய் உன்னையே பருகிடுவாள்...





பெண்ணைப் பற்றி ஒரு பழமொழி உண்டு:

இதை வேறு விதமாகச் சொல்வார்கள்.

நான் சற்று நாகரிகமாக சொல்கிறேன் இப்படி:

அழுக்குத் தீரக் குளித்தவளும் இல்லை - கொண்ட

ஆசைத் தீரக் களித்தவளும் இல்லை...
           


அனுபவம் மிக்கவர்கள் இதற்கு மறுப்பு சொல்லலாமே!