Saturday, December 14, 2013

மோக உலகம்...




இரவின் வெளிச்சம் இது

இரவல் வெளிச்சமாகும்...




மோக உலகம்...


மதுவில் மனதும் கரைந்தோடும் - அந்த

மனதும் உணர்வின் கரைதேடும் - ஆடித்

ததும்பும் இன்பமும் நிறைந்தாடும் - அந்த


தருணத்தில் மரணமும் மறைந்தோடும்...



பிறந்ததற்கு அர்த்தம் காணப் பல வழிகளுண்டு பூமியிலே - மனம்

திறந்ததற்கு அர்த்தம் பெண்மையின் மொழியிலுண்டு - தினம்

மறந்ததற்கு அர்த்தம் காணும் விழிகளுண்டு பூவையின் - இனம்

சிறந்ததற்கு அர்த்தம் சேர்க்கும் நடனத்தின் களிப்புமுண்டு...



பம்பரமாய் சுழன்று ஆடும் பெண்களும் - அதனையும்

மும்முரமாய் கண்டு ரசிக்கும் கண்களும் - அத்தனையும்

அம்பரத்தில் இழுக்கும் அலைகளும் எனப் பூவையரும்

அம்பலத்தில் சுழன்று ஆடும் கலைகளும் தான் என்னே!


மோக உலகமா - பெண்ணழகின்

தேக உலகமா - கண்ணழகின்

போக உலகமா - மண்ணழகின்

தியாக உலகமா - துபாய் நகரம்...?



எண்ண எண்ணச் சலிக்காத அழகின் கூடமா - அதனை

எண்ணி எண்ணிப் பொலிவாகப் பழகும் பாடமா - மனதும்

தின்ன தின்னத் திகட்டாத தேமதுரப் பண்டமா - உணர்வும்

பின்ன பின்னப் புகட்டும் மதுவும் மயக்கத்தின் கண்டமா?



இடுப்பை அசைக்கிறாளா - தள்ளாடும் படகில் மனதை வைத்துத்

துடுப்பை அசைக்கிறாளா - மயக்கம் அளிக்கும் கிண்ணத்து மதுவின்

கடுப்பை அசைக்கிறாளா - கொள்ளை அழகின் இடையில் மறைக்கும்

உடுப்பை அசைக்கிறாளா - உணர்வின் தடுப்பை அசைக்கிறாளே...!



ஓடையின் வெள்ளத்து அசைவில் ஆடும் நிலவினைப் போலவே

ஓடுகின்ற நாடித் துடிப்பினைத் தேடும் உணர்வினைப் போலவும்

வாடையின் போது மழையிலே ஆடும் மலர்களைப் போலவே

வானத்து விண்மீன்களென சிமிட்டும் ஒளியினைப் போலவும்

மேடையின் அருகிலே மேயும் கண்களுக்கு விருந்தாகவும்

மேம்பட ஆடுகின்ற மங்கையவள் தானும் அணிந்திருக்கும்

ஆடையின் அழகை மெருகூட்டும் ஆட்டத்தின் அழகோடு

ஆசையைக் கலந்து ஆவலோடு தருகின்றாள் அரங்கத்திலே...



மழை வரும் போது தடுப்பதற்காகவே

குடை விரித்தாலும் நனைவதைப் போலவே

மனதையறிந்து இன்பம் கொடுப்பதற்கே

கடை விரிக்கின்ற மங்கையவளும் அதனை

பிழை எனக் கொள்வதில்லை தன் மனதுக்கு

தடை விதித்து உடலுக்கு உடை கொடுத்து

விழையும் சுகத்துக்கு விடை கொடுக்கவே

விருப்பம் மேலிடும் திருப்பம் கண்டிடவே

அழைக்கும் உருவத்திற்கும் பணத்திற்கும் தான்

அடைந்த பருவத்தையே வழங்குகிறாள்...




வில்லினில் இருந்து புறப்படும் அம்பைப் போலவே அவள்

சொல்லினில் இருந்து புறப்படும் வம்பை அறியாத பலரும்

கல்லினில் அகப்பட்ட தேரையைப் போலவே ஒளிமறையும்

அல்லினில் அகப்பட்டு தேவியரைத் தேடிக் கூடுகின்றனர்...



காந்தப் புயலில் சிக்கிய இரும்புத் துகள்களைப் போலவே

காணும் கண்களில் விரும்பி ஆடும் நகல்களை தாமும்

ஏந்தப் போராடும் எண்ணத்தில் மதுவேந்திய கிண்ணத்தில்

எதிர்ப்பட்ட மயக்கத்தில் அசலை மறந்த ஈசலாகின்றனர்...




மதுவுடன் கலந்த வெள்ளத்தை பிரிக்க முடியாததைப் போலவே

மாதிடம் கலந்த உள்ளத்தைப் பிரிப்பதென்பதும் இயலாததாலே

அதனுடன் கலந்த நடனத்தில் தொலைந்த மனதையும் தேடுவது

பாதியாய்க் கலந்த பின்னே மீண்டு வருவதென்பது இயலாததாகும்...



ஆணையிடும் அதிகாரத்தில் பணி அமர்ந்தாலுமே ஆடுமந்த

வீணையிடம் எவனும் மறுபடியும் மீட்டிடவேத் தேடுமந்த

கண்ணிடம் கொண்ட நடனத்தின் எழிலை ரசிக்கக் கூடுமந்த

பெண்ணிடமே வருவான் வந்த வழியினை தானும் மறப்பான்...




மெல்லினமா - மங்கையவளும் பனித்துளி வந்து அமரும்

புல்லினமா - நங்கையவளும் மழைத்துளியில் சிறகுலர்த்தும்

புள்ளினமா - என்கையிலேந்தும் தனித்துளி ததும்பிச் சிந்தும்

கள்ளினமா - இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையினமா...?



பள்ளத்திலே வீழாத வெள்ளமுண்டோ - உண்டால் மதுவெனும்

வெள்ளத்திலே மயங்காத உள்ளமுண்டோ - கண்டால் மங்கையவள்

அசைவினில் ஆட்டத்தின் எல்லையுண்டோ - வண்டால் மலர்களுக்கு

இசைவதால் தேனுண்ணும் இதழ்களுக்கும் தொல்லையுண்டோ...?



இரவை மறைக்க மென் மங்கையவள் இடையாடுகிறது - அங்கவனின்

உறவை மறைக்க பணமும் மனமும் நடைபோடுகிறது - அங்கவளின்

வரவை நிறைக்க தன் பங்கையளித்து விடைதேடுகிறது - கூடுவிட்டுப்

பறவை இன்ப வானில் பறந்து கடைதேடுகிறது வெளிச்சத்தை நோக்கி...



வந்த வழி பார்க்கத் துடிக்க ஓருலகம்

அந்த வழி தேடி அலையும் பேருலகம்

எந்த வழி இன்பம் என்ற போக உலகம்

தந்த வழி தேடி அலையும் மோக உலகம்...



சுருங்கி விரிவது மதுவருந்தும் இதயம் மட்டுமல்ல - அங்கே

சுருங்கி விரிவது மங்கையவள் சதையும் தான் - கொதி நீரை

நெருங்கிப் பிரிவது நெருப்பு மட்டுமல்ல - அவளது மாரை

நெருங்கப் பிரிவது விருப்பும் தான் - இரவின் பொறுப்பும் தான்...



தேடையில் கிடைக்காத அழகெல்லாம் ஒன்றுகூடி அவள்

ஆடையில் அழைக்கின்ற அற்புதமாய் நன்றுகூடி அந்தரங்க

மேடையில் தேடுகின்ற நாட்டியத்தில் வென்றுகூட அவள்

சாடையில் அழைக்கின்ற நாடகத்தின் முடிவை யாரறிவார்...?



கடலில் இருந்தே அலைகள் தோன்றுகின்றன - அவள்

உடலில் இருந்தே கலைகள் தோன்றுகின்றனவோ?

கடற்கரை வந்து நின்றால் காலை இழுக்கின்றன அலைகள் - அவளின்

உடற்கரை வந்து சென்றால் ஆளை இழுக்கின்றன கலைகள்...

பாறையிலே மோதும் அலைகள் நுரையைத் தருகின்றன - அவளின்

பாதையிலே மோதும் கலைகள் நடனத்தைத் தருகின்றன...

மீன்களின் இருப்பிடமோ கத்தும் கடல் - கலை

மான்களின் இருப்பிடமோ அவளின் உடல்...

பொங்கி விழுவது அலைகடலின் கலைகள் - மனம்

ஏங்கித் தழுவுதல் அவளுடலின் நிலைகள்...

தீவுகள் தோன்றுவது மணற்திட்டால் - பல

நோவுகள் தோன்றும் அவளை மணந்திட்டால்...



அத்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அலைகடலின் நிலைகள்...

பித்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அவளுடலின் கலைகள்...

எத்தனையும் அதன் வசப் படுத்தியே

எள்ளி நகையாடுவது அவள் நடனக் கலைகள்...



மது அருந்த அருந்த மயக்கமும் தான் வந்தது -

மணம் பரப்பப் பரப்ப பூவைக்குள்ளும் தேன் வந்தது...

அது இருந்த போதும் இவையெல்லாம் ஏன் வந்தது -

அவரவர் விதியே என்று அவ்விடத்திற்கு நான் வந்தது...



ஆடற்கலைக்கு அவள் மலர்ந்தவளோ - சித்திரக்

கூடற்கலையில் மெய் கலந்தவளோ - சிந்தனையின்

தேடற்கலைக்கு அவள் வளர்ந்தவளோ - பள்ளிக்

கூடற்கலையில் கை தேர்ந்தவளோ...?



எண்ணியது எல்லாம் உள்ளத்தில் நிறைவேறிட

கண்ணிமைக்குள்ளே கனவுலகைக் காணுங்கள்...




பொருள்:

அம்பரம் - கடல், அம்பலம் - சித்திரக் கூடம், கடை - பெண்ணின் மறைவிடம், அல்லினில் - இரவினில்.