Saturday, February 14, 2015

காதலைப் பற்றி ஏதோ என் மொழியில்:

கருத்தரித்த காதல் கூட

தோல்வி கண்டிருக்கின்றன...

கருத்தொருமித்த காதலுக்கு

என்றுமே தோல்வியில்லை...


காதலைப் பற்றி ஏதோ என் மொழியில்:


ஏதோ என்பது -

நான் எண்ணியவற்றில் ஏதோ...!!!!

மனதைப் பின்னியவற்றில் ஏதோ...!!!

காதல் பண்ணியவற்றில் ஏதோ...!!!

உணர்வும் கன்னியவற்றில் ஏதோ...!!!


இன்னது தான் இப்படித்தான்

என்பதெல்லாம் காதலில் இல்லை...


அவளின்

முகம் கண்டும் வரலாம் - சீரிய

அகம் கண்டும் வரலாம் - கூரிய

நகம் கண்டும் வரலாம் - நேரிய

யுகம் கண்டும் வரலாம் - அழகின்

ரகம் கண்டும் வரலாம் - பழகும்

விதம் கண்டும் வரலாம் - இடையின்

பதம் கண்டும் வரலாம் - கொங்கை

மதம் கண்டும் வரலாம் - நடக்கும்

ரதம் கண்டும் வரலாம் - பார்வை

விடம் கண்டும் வரலாம் - பருவத்

தடம் கண்டும் வரலாம் - உருவப்

படம் கண்டும் வரலாம் - மனதின்

திடம் கண்டும் வரலாம் - அன்பின்

வசம் கண்டும் வரலாம் - வனப்பின்

ரசம் கண்டும் வரலாம் - உடலின்

நலம் கண்டும் வரலாம் - ஊடலின்

வலம் கண்டும் வரலாம் - தேடலின்

நிலம் கண்டும் வரலாம் - பூவையின்

களம் கண்டும் வரலாம் - காதலும்

வளம் கொண்டும் வருமே!!!

---------------------------------------------------------------------------------------


நிலவகைப் பட்டதைப் போலே காதலும்

சிலவகைப் படுகின்றது பூமி மேலே...


உவப்பத் தலை கூடி உள்ளம் தனை நாடி

அவளிடத்தில் கலை தேடுவது ஒரு காதல்...


கலை தேடிய அவள் மனதிலே நின்று

நிலையான இடம் பிடிப்பது ஒரு காதல்...


உருவக் களிப்பிலே உள்ளம் தொலைத்து

கருவத் தோடு வளர்வதும் ஒரு காதல்...


உணர்வின் கொந்தளிப்பிலே உழன்று காலக்

கணக்கைக் கூட்டிக் கழிப்பது ஒரு காதல்...


கண்ணிமைப் பின்னலிலே அன்பு வலை உண்டு

பண்ணியிருமனம் ஒன்றாவது ஒரு காதல்...

---------------------------------------------------------------------------------------


குறிஞ்சி மலைப் பூவைப் போலே நினைவை

உறிஞ்சி உள்ளத்தை நிரப்பும் ஒரு காதல்...


முல்லை மணம் போலே முகர்ந்து நுகர்ந்து

எல்லை இல்லா இன்பம் எய்யும் ஒரு காதல்...


மருத மரம் போல் செழித்து வளர்ந்து நிழல்

தருவதும் தென்றலாவதும் ஒரு காதல்...


நெய்த வலைப் போலே நீரை நழுவவிட்டு

நெய்தவளிடமே மயங்குவது ஒரு காதல்...


பாலை நிலமாய் இருந்த மனதைப் பண்படுத்தி

சோலை வனமாய் மாற்றுவது ஒரு காதல்...

---------------------------------------------------------------------------------------


இளவேனிற் காலமாய் இருந்த மனதில் அவள்

இளமை அழகு குடிகொள்ள என் மனதில் மெல்ல

முதுவேனிற் காலமாய் மாறிய உணர்வுகளும்

முதிர்ச்சியடைய அவளிதயம் தஞ்சம் புகுந்திட

இலையுதிர் காலமாய் என் எண்ணமெல்லாம்

கலையழகோடு உதிர்த்து கவியாக்க பின் வரும்

வசந்த காலத்தை எதிர் பார்த்து அவள் மனமும்

பசந்த தினம் பார்த்து காதலும் நிறைவேறி முன்

பனிக்காலக் குளிர் அடங்காத அவள் உடலில்

தொனிக்கும் ஆசைதனை வி(வ)ரித்துப் பின்

பனிக்காலக் குளிர் மறைக்கின்ற கூடலில்

இனிவரும் காலம் தனை களிக்க வேண்டும்...

---------------------------------------------------------------------------------------


புள்ளிகள் தொடங்கி கோடுகளாகி

பள்ளிகள் தொடங்கி ஏடுகளாகி

பருவங்கள் கிளர்ந்து உருவங்களாகி

புருவங்கள் வளைந்திரு துருவங்களாகி

உணர்வுகள் எழுந்து நினைவுகளாகி

உணவுகள் மறந்து கனவுகளாகி

உலகத்தை மறைத்த கோலங்களாகி

திலகத்தை வரைந்த காலங்களாகி

ஆசையும் நெருங்கிய ஆடைகளாகி

ஓசையின்றி விரும்பிய மேடைகளாகி

கசிந்துருகிய வண்ணம் தாழ்வாகிப்

பசித்திருக்கும் எண்ணம் வாழ்வாவதே

காதலாகும் வாழ்வும் திருமணத்தில்

மோதலாகி முற்றுபெறாமல் ஒருமனதாய்

நின்று எதிலேயும் எங்கேயும் எப்போதும்

நன்றாய் வாழ்வதே நமது கடமையாகும்...

---------------------------------------------------------------------------------------


அத்தனை காதலையும் தன்னகத்தே அடக்கிய

ஆசையையும் அதனோடு கூடி விழைகின்ற

இன்பத்தையும் இருவர் நாடி ஒருவர் என்றாகி

ஈண்ட பொழுதினில் பெரிதும் மகிழ்ந்து ஆடிய

உலகத்தை பலதடவை மறந்து என்றும் தேடிய

ஊக்கத்தோடு உணர்வினைக் கலந்து அத்தோடு

ஐக்கியாமாகிட உள்ளத்தின் கதவுகளைத் திறந்து

எழிலெல்லாம் தெளித்து வரைகின்ற கோலத்தில்

ஏக்கத்தை வாரி இறைத்து மறையும் புள்ளிகளோடு

ஒன்றிய ஊடலும் உயிர் மெய்யோடு உருவாகிட

ஓடும் குருதியிற் பாய்ந்து அதுவும் கருவாகிட

ஔடதம் காட்டும் விளக்கமே சான்றாகும்

அஃதன்றி வேறறியேன் காதலினால் என்ன பயன்...?

---------------------------------------------------------------------------------------


எறும்புகள் ஊர்வது எதற்காக...?

பாதை தேய்வதற்கா...? இல்லை அதன்

பாதம் தேய்வதற்கா...?


நிலவும் நகர்வது எதற்காக...?

வளர்ந்து தேய்வதற்கா...? இல்லை ஓடி

ஒளிந்து மறைவதற்கா...?


நதியும் ஓடுவது எதற்காக...?

கரையை வகுப்பதற்கா...? இல்லை கடல்

திரையை பகுப்பதற்கா ...?


மலர்கள் மலர்வதும் எதற்காக...?

மணம் பரப்புதற்கா....? இல்லை அதன்

குணம் உரைப்பதற்கா...?


காலை விடிவதும் எதற்காக...?

இரவை மறைப்பதற்கா...? இல்லை அதன்

உறவை அளப்பதற்கா...?

மீண்டும்

மாலை வருவதும் எதற்காக...?

இர(வை)வல் அழைப்பதற்கா...? இல்லை அதன்

வரவில் பிழைப்பதற்கா...?


கனவும் வருவது எதற்காக...?

உறக்கம் கலை பெறுவதற்கா...? இல்லை அதன்

கிரக்கம் நிலை பெறுவதற்கா...?


பருவம் வருவது எதற்காக...?

பழகி மகிழ்ந்திடவா...? இல்லை அதன்

அழகில் நெகிழ்ந்திடவா...?


இளமைக் கோலமும் எதற்காக...?

இடையைக் கண்டு இணங்குதற்கா...? இல்லை

தடையைக் கண்டு வணங்குதற்கா...?


காதல் தோன்றுவது எதற்காக...?

காணும் உலகை அளப்பதற்கா...? இல்லை வாழும்

காலம் முழுதும் நினைப்பதற்கா...?


வாழ்க்கை என்பதும் எதற்காக...?

பிறவிக் கடனை கழிப்பதற்கா ...? இல்லை நம்

உறவுக்கு கடன் அளிப்பதற்கா...?


உருவம் கலைவதும் எதற்காக...?

உலகம் முழுதும் மாறுவதால் - நானும் அதை

உங்களுக்கு எடுத்துக் கூறுவதால்...

---------------------------------------------------------------------------------------


காதலென்பது கண்வழிப் புகுந்தும்

கருத்தினில் நிறைந்து காணப்படுவது...

காதலென்பது செவிவழிப் புகுந்தும்

கற்பனையில் நிறைந்து பேணப்படுவது...

காதலென்பது மெய்வழிப் புகுந்தும்

காணாததில் மறைந்து நாணப்படுவது...

காதலென்பது பொய்வழிப் புகுந்தும்

கலைப் பொக்கிசமாய் பேணப்படுவது...

காதலென்பது திருமணத்தை நுகர்ந்தும்

கட்டிய மாலையில் நிறையைக் காண்பது...

காதலென்பது காமம் தனை நுகர்ந்தும்

கடைவழிப் போய்க் கரையைக் காண்பது...

---------------------------------------------------------------------------------------


எழுத்தினில் தோன்றிய காதல் - இலக்கியக்

கழுத்தினில் போய் முடிவதும் உண்டு...

மழையென பொழிந்த காதல் - இலக்கனப்

பிழையென ஆகி முடிவதும் உண்டு...

மாலையில் தொடங்கிய காதல் - மங்கையின்

சேலையில் போய் முடிவதும் உண்டு...

எண்ணத்தில் தோன்றிய காதல் - அவலெழில்

வண்ணத்தில் கவியாய் வடிந்ததும் உண்டு...

குணத்தினில் தோன்றிய காதல் - ஒன்றுபட்டு

மணத்தினில் போய் முடிவதும் உண்டு...

அவனியில் தொடங்கிய காதல் - ஆதாம்

ஏவாளின் உறவாய் முடிந்ததும் உண்டு...

பழியினில் தோன்றிய காதல் - உடன் பட்டு

குழியினில் போய் விழுவதும் உண்டு...

பணத்தினில் தோன்றிய காதல் - கடன் பட்டு

கிணத்தினில் போய் விழுவதும் உண்டு...

காமத்தில் தோன்றிய காதல் - அகப் பட்டு

சாமத்தில் போய் வருவதும் உண்டு...

---------------------------------------------------------------------------------------


கண் தான் வாசல் அவ்வாசல் வழி

காட்டியதன் பின் செல்லப் பருவக்

கிளர்ச்சியினாலே உள்ளம் மேலும்

கீழும் அலை பாயும் எண்ணத்தை

குவித்து அவளைக் கண்டு மகிழக்

கூடிய நினைவுகளைத் திரட்டிக்

கை மறந்த பொருளைப் போலே

கெண்டை விழியாளிடம் அவன்

கேட்க விருக்கும் கேள்வியுமே

கொண்டையாடும் இடையிலாடும்

கோலத்தைப் போலே அவனைக்

கௌவிக் கொண்டது காதல்...

---------------------------------------------------------------------------------------


நகரத்தான் நினைக்கிறான் காதல்

நகரத்தான் நினைக்கிறான் - அதுவே

பட்டிகாட்டான் நினைக்கிறான் - காதல்

கொட்டிக் காட்டத்தான் நினைக்கிறான்...

---------------------------------------------------------------------------------------


அன்பு மட்டும் காதலில்லை - நல்ல மனதின்

பண்பும் கூட காதல் தான்...

அரவணைப்பு மட்டும் காதல் இல்லை - ஒன்றிய

அவள் நினைப்பும் கூட காதல் தான்...

புரிதல் மட்டும் காதல் இல்லை - அவளை

அறிதல் கூட காதல் தான்...

விட்டு கொடுத்தல் காதல் இல்லை - அவள் செவி

தொட்டு மடுத்தல் கூட காதல் தான்...

விளக்கம் கொடுத்தல் காதல் இல்லை - அவள்

விளங்கக் கொடுத்தல் கூட காதல் தான்...

இளமை மட்டும் காதல் இல்லை - உணர்வின்

முழுமை கூட காதல் தான்...

கனவு மட்டும் காதல் இல்லை - அவளுடைய

நினைவும் கூட காதல் தான்...

உறவு மட்டும் காதல் இல்லை - சங்கமித்தப்

பிறகும் கூட காதல் தான்...

இன்பம் மட்டும் காதல் இல்லை - உடன்பட்டால்

துன்பம் கூட காதல் தான்...

படித்துணர்வது மட்டும் காதல் இல்லை - அதனை

துடித்துணர்வதும் கூட காதல் தான்...

காலம் தழுவுதல் மட்டும் காதல் இல்லை - அவள்

கோலம் தழுவுதல் கூட காதல் தான்...

பிரிந்திருத்தல் மட்டும் காதல் இல்லை - அவளதை

பரிந்துரைத்தால் அதுவும் கூட காதல் தான்...

விதையாய் வளர்வது மட்டும் இல்லை காதல் - தொடர்

கதையாய் நீண்டு தொடர்வதும் காதல் தான்...

பொற்புடையது மட்டும் காதல் இல்லை - மானம்

கற்புடையதும் கூட காதல் தான்...

பௌதீகமானது மட்டும் காதல் இல்லை - உலகில்

தெய்வீகமானதும் கூட காதல் தான்...

இல்லற நோன்பு மட்டும் காதல் இல்லை - அதன்

நல்லறப் பண்பும் காதல் தான்...

வாழ்க்கை மட்டும் காதல் இல்லை - உள்ளத்தின்

வேட்கையும் கூட காதல் தான்...

வாழத் தகுந்தது மட்டும் காதல் இல்லை - என்றும்

வாழ்க்கைக்கு உகந்ததும் காதல் தான்...

---------------------------------------------------------------------------------------


கண்ணோடு கண் நோக்கி வார்த்தையின்றி

கருப்பட வளர்ந்தது அன்றையக் காதல் -

அலைபேசியின்

எண்ணோடு எண் தேக்கி வார்த்தையன்றி

எதிர்ப்பட வளர்ந்தது இன்றைய காதல்...


உளத்தோடு உளம் நோக்கி வீரப் போர்க்

களத்திலும் வளர்ந்தது அன்றைய காதல்...

பருவத்தின்

நலத்தோடு நலம் போக்கி உணர்வின்

கலத்தோடு வளர்வது இன்றைய காதல்...


---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------