Thursday, July 9, 2015

நற்றவத்தால் கவியாக பிறந்து வந்தாய்...

காவியத்தின் பூட்டைத் திறந்து - அது

மேவியிருக்கும் ஏட்டை மறந்து - திரைக்

காவியத்தின் பாட்டை படைத்து - சொல்

ஓவியத்தில் கோட்டை கட்டுவார்...



மொட்டுக்குள் இருக்கும் தேனின் சுவையை

பாட்டுக்குள் பொதிந்து வைத்து இசையின்

மெட்டுக்குள் இருக்கும் நயத்தோடு இலக்கிய

ஏட்டுக்குள் பதிந்த கருத்துக்களைக் காட்டுவார்...



இளமையின் ஊஞ்சலாய் எதிர்ப்படும் கருத்தின்


வளமையில் பொருளைப் புனைந்து கட்டும் கவிச் 

செழுமையில் தோன்றிய எண்ணங்களைப் பாடல்

முழுமையும் தருவதில் வல்லவரே கண்ணதாசன்...



மதுகை கொண்டு மயங்கிட வாய்க் குடித்தாலும்

எதுகை கொண்டு இயங்கிடக் கவி வடித்தாலும்

மாதவள் எழிலும் முயங்கிடும் சொல்லைப் பூட்டி

காதலாள் உள்ளத்தைக் காட்டியவரே கண்ணதாசன்...



பழுத்த அனுபவத்தையும் பட்டறிவுச் சிந்தனையும்

அழுந்த வாழ்க்கையில் விழுந்த நினைவுகளையும்

எழுத்தின் மூலம் அழகிய திரையிசைப் பாடலாக

எழுந்த விதம் தான் என்னே! நான் வியக்கின்றேன்!



காதலும் தத்துவமும் கலந்து வந்த மகத்துவமும்

போதவிழும் மணம் நிறைக்கும் தாலாட்டின் பண்பும்

சாதலை விடக் கொடிய சோகத்தின் மாண்பையும்

பாதமதில் சரணடையும் பக்தியையும் என்னவென்பேன்!



சித்தர்களின் சிந்தனையை உள்ளத்தில் நிறுத்தி

பித்தர்களின் போக்கையும் புத்தியில்திருத்தி

எத்தர்களின் ஏளனங்களை எழுத புகுந்ததோடு

தத்தமது வாழ்கையின் சாரத்தையும் சேர்த்துப்



படைத்த பாடல்கள் எத்தனையோ - காதலையும்

அடைத்த பாடல்கள் எத்தனையோ - காலத்தையும்

வென்ற பாடல்கள் எத்தனையோ - மக்கள் மனதில்

நின்ற பாடல்கள் எத்தனையோ -அத்தனையும்



அகல் விளக்கின் ஒளியைப் போலே அடி நிழலின்

புகழ் அசையும் வண்ணம் கொழுந்து விட்டு - நிலவின்

நகல் விளக்காய் திரைத்துறையில் வாழ்ந்து - எழிலின்

புகல் வானமாய் விளங்கியதன்றோ கவியரசின் பிறப்பு...



எண்ண எண்ண இனிக்கும் நினைவுகளை - மதுரம்

திண்ண திண்ண தொனிக்கும் ஆசையைப் போலே - புது

வண்ண வண்ண வார்த்தைகளோடு இணைத்து - மது

பண்ண பண்ண மயக்கும் பாடலைத் தருவார் கண்ணதாசன்..



சிறு கூடல் பட்டியிலே பிறந்தாலும் காதலையும்

மறு தேடலாய்க் கொண்டு முழுமையடையச் செய்த

இறுமாப்பு சிறிதும் இல்லாத கவியரசே! - திரையுலகம்

பெறும் வாய்ப்பு இனியும் உண்டோ நவில் அரசே!!!



வார்த்தைகளை வளைத்து ஓவியம் ஆக்கினாய்

வாழ்க்கையிலே திளைத்து காவியம் ஆக்கினாய்

பார்த்தவைகளை நுழைத்து பாடலும் ஆக்கினாய்

பார்மகள் உனை அழைத்து கவிதை ஆக்கினாள்...



கற்பனை விருட்சத்தின் விதையைத் தன்

சொற்புனையும் ஆற்றலால் கவியாக்கிய

பொற்புனையும் கலையாக்கி அழகுறவே

சிற்பமென நீ கொடுத்தாய் பாடல்களாய்...



உற்ற கவி பல பேரும் ஊரிலுண்டு - உனைக்

கற்ற கவியும் சில பேருண்டு - திரையுலகம்

பெற்ற கவி உனைப் போலே இங்கு யாருண்டு

நற்றவத்தால் கவியாக பிறந்து வந்தாய்... 




கொள்ளை இன்பத்தையும் கொட்டி அளந்தாய் 

வெள்ளை மனதையும் பாட்டில் புனைந்தாய்

பிள்ளை உள்ளத்தையும் பாசத்தில் கலந்தாய்

தள்ளை மொழியாய் தாலாட்டில் கொடுத்தாய்...



கன்றரியாததைப் பசுவானது

நன்றறியும் அது போலே துடிக்கும்

சேயுள்ளத்தை அறிந்து பெற்ற

தாயுள்ளம் போலவே கவியுரைத்தாய்...



அன்றில் பறவைகள் குடியிருக்கும்

குன்றில்முளைத்தெழுந்த காதலை -

ஒன்றாய் கலந்த உள்ளத்தின் பாடலாய்

நன்றாய்க் கொடுத்தாய் திரையுலகிற்கே!!!



நாகரீகத்தின் தொட்டிலில் குழந்தையானாய்

போகப்போகத்தெரியும் என்றே பறைசாற்றினாய்

மோகத்தின் கட்டிலில் கனிந்த காதலானாய்

தியாகத்தில் புரண்டு நிற்கும் தாய்மையானாய்...