Saturday, August 1, 2015

பெண் நோக்குப் பாவனை

அயனங்கள் இரண்டுள்ளதைப் போலே அவள் கொண்ட

நயனங்கள் திரண்டங்கே அரங்கத்தில் கார்கூந்தலோடு

வினயங்கள் புரியும் அழகும் மதுவோடு கரைந்து நா

நனையும் வண்ணத்தில் நடனமாடினாள் இளமங்கை...



இளமங்கை அவள் ஆடும் நடனத்திலே மயங்குகின்ற

உளமங்கே சுற்றித் தான் வருகிறதே தவிர ஏங்குகின்ற

நலமெங்கே போனதென்றும் அறியாமல் மதுவருந்தும்

குலமங்கே கூடியங்கு நரைதிரை விலக்கும் நள்ளிரவு...



வெள்ளை வெயில் போலவே அரங்கமும் திகழுமதில்

கொள்ளை மயில் அழகியவள் ஆடுகையில் மார்துகிலில்

பிறைநிலவும் வந்துதிக்கக் கண்ட அல்லிவிழிகள் தாம்

குறை துயில் கொண்டதையறியாமல் பூத்து குலுங்கின...



மலையை மறைக்கின்ற முகில் போலே அவளது மா


மலையை மறைக்கின்ற துகிலதனையும் மீறி எழுகின்ற

அலையைப் போலவே விழுந்து எழும் அழகைத் தான்

கலையென்பதா இல்லை அவள் நடன நிலையென்பதா?



நோக்கினாள் என்பதா - கூடும் இன்பத்தை மாரிலேற்றித்

தேக்கினாள் என்பதா- நாடும் மனதைத் தேரிலேற்றித்

தாக்கினாள் என்பதா - பூவை தன்னையே நாரிலேற்றி

ஆக்கினாள் மாலையாக அவையில் நள்ளிரவுக்கு சூட..



காட்டினாள் அவள் அழகை நடனத்தில் செழிக்கும் வரை

கூட்டினாள் மேலும் ஆடலில் அந்த ரதியும் பழிக்கும் வரை

ஏட்டினால் எழுதாத பேரழகை இந்த மதியும் மயங்கும் பயன்

பாட்டினால் அவ்வரங்கை ஆனந்த கூடமாகவே மாற்றினாள்...



இலையசையும் தென்றலென நள்ளிரவில் அந்த நடனக்

கலையசையும் மன்றிலவள் வெள்ளி நிலவெனவே தன்

தலையசையும் விதியும் மீறி கொள்ளை அழகின் ஈடில்லா

நிலையசையும் நதியைத் தேடும் கடலைக் காண வந்தாள்...



ஆடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை விழியசைக்கும்

ஜாடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை வழியும் மதனரச

மேடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை மதுவும் உட்புகும்

ஓடையில் அவளழகு ஒளிந்துள்ளதா எல்லைக் கடந்த இரவிலே...



சூதகம் கொண்டவளும் ஆடும் போது மதுவுக்கிணை மதுரமாக

மோதகம் போலிலங்கும் மேனியெழில் குலுங்கும் நடையின்

பாதகம் கண்டவுடன் அறிந்திடாத ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்து

மாதகம் புகுந்திட யாதகமும் துடித்திடச் சாதகமாகும் இரவிலே...



கோடிட்ட இடத்தைப் போலே நிரம்பாத அழகையெல்லாம் அடிக்

கோடிட்டு நடனத்தால் நிரம்பும் வண்ணம் ஆசை எண்ணம் எலாம்

நாடிட்ட தடாகத்தைத் ஆடிய பூக்களில் அரைகுறை போதையில்

தேடிட்டு போய் விழுந்ததைப் போலே தேன் குடித்திட விழுந்தது....



தெரியும் மலர்க்காட்டில் தேடியலைந்து அமர்ந்து வேதிவினை

புரியும் மதுவோடு நீரைக்கலந்து உடலோடு காமமது கிளர்ந்து

விரியும் மனக்கூட்டில் எழுந்த எண்ணங்களை எல்லாம் அங்கே

திரியும் மாதுவோடு நினைவாய்க் கலக்கும் அந்த நள்ளிரவு...



பள்ளி கொண்டவளும் பலகலைப் பயில அரங்கத்திலே ஆடத்

துள்ளி கொண்டவளும் இடவலம் பிடித்து இசைநயம் படிக்க

அள்ளி முடித்த ஆடையும் அங்கங்கே ஒளித்த அழகையும்

கள்ளி அவளுடலின் செழித்த அழகையும் காட்டும் நள்ளிரவு...



நிறைத் தள்ளாடும் துலாபாரம் போலவே மாதவள் நெஞ்சம்

குறைத் தள்ளாடும் அழகும் குறிவைத்து மதுவருந்திய அவ்

அறைத் தள்ளாடும் வண்ணம் பொறிவைத்து பிடிக்கின்ற

முறைத் தள்ளாடும் நோக்கத்தை மெருகூட்டும் நள்ளிரவு...



ஆடற் கலையில் மாதவளும் எல்லைத் தாண்டுகின்றாள்

ஆடிய கரங்களுக்கு சூட்டிட வளையை வேண்டுகின்றாள்

கூடற் கலையில் மாரன் கை வில்லை வளைக்கின்றாள்

கூவியென்னை மாலை சூட்டிட அவளே அழைக்கின்றாள்...



கொதிக்கும் மது வெப்பைக் குளிர்விக்கவே ஆடுகின்றாள்

விதிக்கும் பாடலுக்கு ஏற்பவளும் பொருள் தேடுகின்றாள்

மதிக்கும் பேரைப் பார்த்து தன் பூவுடலைக் காட்டுகின்றாள்

நதிக்குள் துடுப்பிழந்த படகெனவே இடுப்பை ஆட்டுகின்றாள்...



ஆடுவதும் அவள் ஆடி ஆடி பொருள் தேடுவதும் தேடியதை

நாடுவதும் அவள் நாடி நாடி இருண்ட வெளிச்சத்தில் மனதால்

வாடுவதும் அவள் வாடி வாடி திரண்ட அழகினுக்கே பொருட்கை

கூடுவதும் அவள் ஆடிப் பாடி ஆனந்தக் களிப்பை ஊட்டுகின்றாள்...



மானாட மயிலாட மங்கையவள் பொங்கி எழும் அழகின்

ஊனாட உயிரின் உணர்வாட மறைந்திருக்கும் உள்ளழகும்

தானாட தளிர் கையாடக் கொங்கையும் குதித்தாட இடையாட

ஏனாட என்றால் நடைபோடும் இளமை இரவுடன் சேர்ந்தாட...



முன்னழகு முனைந்தாடக் கவியளக்கும் பேரழகு நங்கையின்

பின்னழகு புனைந்தாடப் புவியளக்கும் பாதமும் நடைபோடத்

தன்னழகு நினைந்தாடக் காமரதமென அசைவதைக் காண்போர்

என்னழகு என்றே யாவரும் இணைந்தாடாத் துடிக்கும் நள்ளிரவு...



வட்டமிடும் அழகெனவே விளங்கும் வதனமும் கீழிறங்கத்

திட்டமிடும் திரண்டப் பேரழகு தனங்களும் இடைஇறங்கி

விட்டமிடும் புள்ளியைச் சுற்றிய விழிகளும் வலம் வரத்

தட்டமிடும் ஓரண்டப் பார்வையை விளக்கும் நள்ளிரவு...



பிரம்மன் படைத்த அழகையெல்லாம் கடைவிரித்து

பிறன்மனைக் காணக் கூட்டியவள் நடைபிரித்துத்

திறம்பட நடனத்தின் வழி காட்டியவள் இடைதிரித்து

முறம் போல் அசைய மெல்ல சாமரம் வீசுகின்றாள்...



ஆடும் போதவளின் தனம் முந்தியதோ பார்க்கும் கண்கள்

தேடும் தாதவளின் வதனம் முந்தியதோ அசையும் கால்கள்

கூடும் சூதவளின் இடைதான் முந்தியதோ யார்க்கும் மனம்

நாடும் மாதவளின் நடைதான் முந்தியதோ இசையோடு...



அல்லியவள் மாலையிலே மொட்டாகி இரவிலே மலரும்

புல்லிதழ் அதிரவே அரங்கிலே ஆட்டமாடி பொருள் சுருட்டும்


வில்லியவள் காலையிலே கனவாய்க் கலைந்த பொழுதைச்

சொல்லியே ஆகவேண்டும் பெண் நோக்குப் பாவனையை...