Thursday, April 17, 2014

மையலாய் நானும் உதிப்பேனா...?



ஜயத்தில் தொடங்குது ஆண்டும்

ஐயங்கள் தீர்ந்திடவே தூண்டும்

மையத்தைத் தொடர்ந்து ஈண்டும்

வையத்தில் வாழ்ந்திட வேண்டும்...

 
 
 
படிக்கின்ற காலம் தான் பொற்காலம் - கடந்த பின்

நடிக்கின்ற காலம் தான் தற்காலம் - உணர்வுகளைப்

பிடிக்கின்ற காலம் தான் இக்காலம் - உள்ளந்தனில்

வடிக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 
விதைக்கின்ற காலம் தான் பொற்காலம் - நடந்த பின்

கதைக்கின்ற காலம் தான் தற்காலம் - வந்தததைக் கண்டு

பதைக்கின்ற காலம் தான் இக்காலம் - வேண்டாததைப்

புதைக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 

உழைக்கின்ற காலம் தான் பொற்காலம் - விருப்பங்களில்

திழைக்கின்ற காலம் தான் தற்காலம் - வார்த்தைகளைக்

குழைக்கின்ற காலம் தான் இக்காலம் - திருப்பங்களை

அழைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



குறைக்கின்ற காலம் தான் பொற்காலம் - இருப்பதை

மறைக்கின்ற காலம் தான் தற்காலம் - பொருட்களை

நிறைக்கின்ற காலம் தான் இக்காலம் - கருணையை

இறைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



நகைக்கின்ற காலம் தான் பொற்காலம் - உள்ளதை

வகைக்கின்ற காலம் தான் தற்காலம் - மயக்கத்தில்

திகைக்கின்ற காலம் தான் இக்காலம் - சோம்பலைப்

பகைக்கின்ற காலம் தான் எக்காலம்...?

 
 
எண்ணங்களை வடிப்பேனா...?

எண்ணியதில் துடிப்பேனா...?

வண்ணங்களைப் பிடிப்பேனா....?

வாழ்வுதனில் படிப்பேனா...?


 
விரும்பியதைப் படிப்பேனா....?

விரும்பாததில் நடிப்பேனா...?

அரும்பியதை வடிப்பேனா...?

நெருங்கியதைப் பிடிப்பேனா...?



மையப் புள்ளியில் விதிப்பேனா...?

இயல் இசையை மதிப்பேனா...?

ஐய வருடந்தனை துதிப்பேனா...?

மையலாய் நானும் உதிப்பேனா...?



 
ஜய வருடத்தின் இனிய உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்...



சுயமாய் எடுத்த முடிவுகளில் முயன்று வெற்றி காணவும்

நயமாய் வார்த்தைகளைப் பயின்றதைப் பற்றிப் பேணவும்

வயமாய் தொடுத்த பணிகளை விட்டு விடாமல் தொடரவே

ஜயமாய் வருடமும் சித்திரையில் அடியெடுத்து வருகின்றது...