Tuesday, January 27, 2015

அன்ன நடையா...? அன்னாள் நடையா...?


அவள் நடக்கும் தூரத்தை

அவள் கடக்கும் முன்னே

அன்னமது எட்டி விடும் -

அதன் பின்னால் தான்

அவள் வருவாள்...

அவ்வளவு மென்னடையாள்...

அளந்து வரும் நன்னடையாள்...


அடிமேல் அடியெடுத்து

அன்னமவள் நடக்கும் போது

அசைந்து வரும் தேரும் கூட

அதன் முன்னால் தோற்று விடும்...


தேரியங்கும் தெருவீதியிலே

தெய்வச் சிலையெனவெ அவளும்

தேவதையாக நடந்து வந்தாள் -

தேவலோக அழகையெல்லாம் தன்

திருவடியால் கடந்து வந்தாள்...



பூவுலகம் பொன்னுலகம் எல்லாம்

போலவொரு பேருலகமெனவே

பூவையவள் தன்னுலகம் காட்டி

பின்னலிடை அழகைப் பூட்டி


மேவும் அழகையெல்லாம்

மேலும் படை கூட்டி விழி

தாவும் வழி மீதினிலே அவள்

தரணியையே அளந்து வந்தாள்...



தாரணியாம் ஒரணியாம் சேர்ந்து

தங்கி விட்ட எழிலெல்லாம்

பூரணியாம் கூடியவள் பாதத்தில்

பூச்சூடும் படி நடந்து வந்தாள்...


சீரெழுந்த அழகையெல்லாம்

சிந்தாமல் சிதறாமல் மண்ணில்

பேரழுந்த பெட்டகமாய் அவள்

பொலிவோடு நடந்து வந்தாள்...



இடை நடுவில் இலைமறை காயாக

இலக்கியத்தை மறைத்து வைத்து

மடை நடுவில் வெள்ளம்போலே

மயங்கியவள் நடந்து வந்தாள்...


நிறை குடம் போல நீர் தழும்பாமல்

நிரம்பித் தழும்பும் அழகையெல்லாம்

குறை குடம் போலே காண்போரைக்

கூத்தாட விட்டு நடந்து வந்தாள் ...



இத்தனை அழகையெல்லாம் அவள்

எங்கே ஒளித்தாளோ - என்று நாம்

அத்தனை அழகையெல்லாம் தேடும்படி

அங்கே அசைந்து நடந்து வந்தாள்...


அசைய விட்ட அழகையெல்லாம்

ஆடையிலே மறைத்து வைத்தாலும்

இசைந்து அலுங்கிக் குலுங்கி ஓர்

இன்னிசையாய் நடந்து வந்தாள்...



சாமரங்கள் போலே கைவீசி

சாளரத் தென்றலென அசையும்

பூமரங்கள் போலே அவள்

பூமியிலே நடந்து வந்தாள்...


மான் கொண்ட அழகும் மெல்ல

மருண்டு துள்ளுவதைப் போலத்

தான் கொண்ட அழகும் துள்ள

தேன் குடமாய் நடந்து வந்தாள்...



பின்னல் கொண்ட கூந்தல் அவளின்

பின் அங்கும் இங்கும் ஆடுவதை ஏந்திய

மின்னல் போன்ற இடையும் தனத்தால்

மிரண்டு தள்ளாடும் படி நடந்து வந்தாள் ...


கன்னல் போன்ற வாளிப்பான தன்

கணுக்கால் கொண்டு வாலிபத்துக்கு

தின்னக் கொடுக்கும் இடையினிலே

திரண்ட அழகோடு நடந்து வந்தாள்...



மாதவியின் அழகென்ன - சிலம்பத்தின்

மாற்றுக் குறையாத சலங்கை குலுங்க

மாதேவியவள் ரதி தேவியென ஒளிரும்

மதி மயங்க வீதியிலே நடந்து வந்தாள்...


பூதேவியின் அழகென்ன - உள்வாங்கிய

பூமேனி குலுங்கும் பொன் மேனியிலே

சீதேவி விளங்கும் வண்ணம் பொற்பாதச்

சீரோடும் சிறப்போடும் நடந்து வந்தாள்...



சின்ன இடை குலுங்க

சிருங்கார ரசம் பொங்கி

அன்னாள் மடை தழும்ப

அன்ன நடை விளங்க

என்னே! - நான் மயங்க

எண்ணமும் தான் முயங்க

முன்னே அவள் நடக்க

முனைந்திட்ட கவியும்

பின்னே தொடர்ந்து வந்து

பேருவகைத் தாராதோ!!!



அள்ளித் தெளித்த ரசம்

அகப்பையிலே குடியேறி

துள்ளித் திரிந்து கொஞ்சம்

துவண்டெழுந்து என்னெழுது

கோல் புகுந்து எண்ணம் தான்

கோடிட்ட இடத்திலெல்லாம்

கால் பதியும் சுவடு போலே

கவியாய் வடிந்ததம்மா!!!

...கலையாத இளமை...


கார் தழுவிய வானம் மண்ணில் விழுந்து

கரைந்திட துடிக்குமது போல் மண்ணில்

ஏர் தழுவிய கால்கள் வயல்-வரப்பின் மேல்

ஏறித் தழுவிடத் துடிக்குமது போல் கழுத்தில்

தார் தழுவிய நெஞ்சில் கொஞ்சம் அசைந்து

தான் உயரத் தழுவிடத் துடிக்கும் அவளின்

மார் தழுவிய மயக்கம் தணிக்க நானும்

மான் தழுவதலைப் போலத் தழுவி மெல்ல



கொடி இடையின் கொம்பெனவே முளைத்த

கரங்களை அணைத்து நாணத்தால் அவளும்

பொடி நடையில் பாம்பெனவே அசையும்

பொலிவினிலே என்னை மறக்கும் நேரமதில்

விடியும் வரை கலை பலவும் பயில - காலை

வரும் வரையில் எங்கே துயில - பயின்றது

முடியும் வரை முத்தெடுத்து நான் தொடுக்க



கொதித்து இருக்கும் அவளுடலை கொஞ்சம்

குளிர வைத்துப் பின் சூடாக்க அவ்வுடலில்

பதித்து இருக்கும் முத்தங்களை மறுபடியும்

பதியுமாறு கொடுத்து அவ்வழகை நான் ரசிக்க

விதித்து இருக்கும் மன்மதனின் கருணையை

விளக்க வேறோன்றும் வேண்டாமல் நனைந்து

நொதித்து இருக்கும் உணர்வோடு ஒன்றாகி

நுட்பமாகக் கலந்தின்பம் தாண்டாமல் அடுத்து



உள்ளமது பூரித்து பொங்கியது விரிந்து பூமடலில்

உள்ள-மது குடித்துக் களித்து மீண்டும் பூவுடலில்

உள்ள-மது சிந்தாமல் பூவிதழை மடித்து சுகித்த

உள்ளமது உருகி பூவிதழை நனைத்த சுனையில்

வெள்ளமது உருவாகி உணர்ச்சிப் பெருக்கோடு

துள்ள-மது ஓடுகின்ற ஓடை நோக்கிப் பாயும்

பள்ளமது தெரியாமல் நதியெனவே தோய்ந்துப்

பண்பட்ட கலவிக் கடலிலே கலந்து ஆசையும்



அலையாகிப் பழகும் கரையின் மீது மோதி

அலைந்து நாளும் இன்பம் நல்கிக் கவின்று

நிலையாகிடப் படகும் ஆடுவதைப போலே

நின்றும் அசைந்தும் நன்றாய் ஆடிக் களித்து

சிலையாகிய அழகினிலே நீராடிப் போராடி

சிருங்காரப் பேரழகின் அறுபத்து நான்கு

கலையாகிடத் துடிக்கும் ஊடலும் கூடலும்

கலையாத இளமையை அழைக்கின்றது...



அழைத்த இன்பத்தை இடையில் வைத்து

அதிரூப தனத்தை உடையில் பொதிந்து

நுழைத்த வண்ணம் நடையில் தைத்து

நுடங்கும் இளமைக் கடையில் மறைத்து

விழைத்த அழகும் சிறுமடையில் பொங்கி

விருப்பம் போலே விடையைக் கொடுக்க

சழைத்த உடலில் உதரம் விழுந்து தங்கி

சற்றே திரண்டு கருவாய் விழைகின்றது...



கருவும் மெல்ல கவியாய் வளரக் காலம்

கனியும் என்றே காவல் கொள்ள அதன்

உருவும் நல்ல கவிழ்ந்து வளர மேலும்

உணர்வும் கொஞ்சம் புறத்தில் தெரிய

மருவும் உடலும் உருவம் கலைந்து

மயக்கம் வந்து மனதில் கொள்ளத்

திருவும் மகவாய் உதிக்கப் பையும்

திறந்து பயன் அடையும் இளமை...




கலையா இன்பம் மறையாதிருக்க

நிலையா வாழ்வில் குறையாதிருக்க

அலையா மனதும் நிறைவோடிருக்க

கலையா! என்றே பறையாதிருக்கக்


கலையும் இளமையும் மறையும் மெல்ல

இலையும் வளமையும் சருகாகும் செல்ல

நிலையும் வந்தடையும் - காலம் சொல்லா

விலையும் தந்தடையும் உயிர் ஒன்றுக்கே!!!



குடமும் கூட கும்பமானால் தலைக்கேறும்

இடமும் நீர் எடுக்க நேர்ந்தால் இடைக்கேறும்

படமும் நிழற் பிம்பமானால் தரைக்கேறும்

தடமும் பதிய நடந்தால் காலக் கடைக்கேறும்...

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...


ஆடியிலே விதைத்த சம்பா நெல்லும் மெல்ல

ஆவணியில் முளைவிட்டு கதிரோன் ஒளிபெற்று

புரட்டாசியிலே புத்துயிர் அடைந்திட வருகின்ற

ஐப்பசியில் மழைநீரை ஈர்த்து கொஞ்சம் அசைந்து

கார்த்திகையில் கதிர்விட்டு மண்குளிரும் பனியில்

மார்கழியில் நனைந்து அறுவடைகலம் புகுந்து

தைத் திங்கள் முதல் நாளில் பொங்கலாகும்...



உழவனின் கைபட்டு ஏர் கலப்பைக் கால் பட்டு

பழகும் மண்ணின் மணத்தோடும் குணத்தோடும்

கதிரவனின் ஒளிபட்டு கதிராய் நாளும் வெளிப்பட்டு

அதுவும் ஓர் நாளில் அறுவடையாகி எல்லோர்


பசியும் போக்கிட உள்ளோர்க்கு உணவாகி அதனை

புசிக்கும் வழி இல்லார்க்கு கனவாகி காணும் உலகில்

நசியும் பஞ்சமும் வறுமையும் இல்லா வளம் காண

வசிக்கும் யாவர்க்கும் வேண்டும் பொங்கலாகட்டும்...



கழிப்பதெற்கெனத் தோன்றும் போகியிலே பழையனவை

அழித்து நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நல்லுணவும்

பொங்கியதோடு நல்லுணர்வும் வளர்ந்து அனுதினமும்

தங்கியதோடு இன்பமும் நிலைத்து நின்றிட வேண்டும்...



புதுப் பானையில் பொலிவோடு பொங்கிய அரிசிக்கு

மதுரம் தந்திடும் வெல்லமென உள்ளமும் பொங்கி

அடிப்பாகத்தில் இனிக்கும் கரும்பாகி தைத்திங்களின்

அடிதொட்டு தொனிக்கும் யாவும் நலமாகிட வேண்டும்...



மாடுதனை ஆட்டுவித்து ஏரதனை நிலைநிறுத்திப் பயிரிட்ட

காடுதனில் விளைந்த நெல்லெடுத்து பொங்கல் படையலிட்டு

வாயில்லா உயிரினத்துக்கும் வாய்ப்பதனை உருவாக்கி

நோயில்லா நலம் வாழ நன்றியதனை செலுத்திட வேண்டும்...



விரும்பிய ஆடவனை மணந்திடவும் விருப்பம் போலவே மனம்

அரும்பும் ஆடவன் மனையாள வாய்த்திடவும் கன்னியர்கள் தாம்

காணும் பொங்கலிட்டு பகிர்ந்து உண்டவர்க்கும் கண்டவர்க்கும்

நாணும் வண்ணம் நலம் தைத்திங்கள் முதல் கூடிட வேண்டும்...



மதுவிருக்கும் மலர் போலே உள்ளம் மலர்ந்து

அதுவிருக்கும் நலத்தோடும் உள்ளம் மகிழ்ந்து

பொதுவிருக்கும் குணம் தனிலே உள்ளம் நெகிழ்ந்து

எதுவிருக்கும் இல்லையென்றாலும் நன்றாகட்டும்...



நதியிருக்கும் கரை போலே நாளும் பாதை வகுத்து

மதியிருக்கும் மனதோடு நல்லவற்றைத் தொகுத்து

விதியிருக்கும் துணையோடு மாலை தொடுத்து நற்

கதியிருக்கும் பதினாறு பேறும் வந்தடையட்டும்...



விழியிணைக்கும் காட்சிதனை செயலாக்க அன்பு

மொழியணைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி

பழியனைத்தும் மறந்து வாழ நாளும் செல்லும்

வழியனைத்தும் திறந்து நன்றே என்றாகட்டும்...



உளி மறைத்த உருவம் போலே எண்ணமும்

வெளித் தெரியா வண்ணம் தோன்றி வான்

வெளி மறைத்த நிலவாய் ஒளி வீசி உள்ளம்

களித்திடும் இன்பம் அன்றாடம் உண்டாகட்டும்...



அமிழ்தினும் இனிய நாளாம் பொங்கல் திருநாளை

தமிழர் தம் பெருவிழாவாக தரணியெங்கும் தைத்திங்கள்

உமியில் உதிர்ந்த நெல்லை உணவாக்கி படையலிட்டு

உமிழ்ந்திடும் கதிர்க்கு நன்றியோடு கொண்டாடுவோம்...



தை மகள் பிறந்ததிலே தரணியிலே கதிரவன் தன்

திசை மாறிப் பயணிக்கும் போது வானிலையும் அந்தத்

தை மகளை வரவேற்க மார்கழியின் குளிர் கொடுத்த

திங்கள் கடந்ததை பொங்கலோடு கொண்டாடுவோம்...



வீரத்தின் விளைநிலமாம் தமிழர் களத்திலும் உளத்திலும்

தீரத்தின் அடையாளமாய் விளங்கும் ஜல்லிகட்டோடு

ஓரத்தில் நின்று ஒதுங்காமல் மல்லுகட்டும் மாடுகளோடு

பாரத்தைச் செலுத்தி அடக்குவதே திறமையன்றோ!!!



பொட்டிட்ட மங்கையரும் பூவணிந்த பாவையரும்

கட்டுண்ட நாணம் மறந்து கண்டு மயங்கி வீட்டில்

கட்டிட்ட மாட்டுக்குத் தான் எத்தனை வீரமதிலே

கட்டுண்ட காளைமீது தன் கவனம் ஈர்க்குமன்றொ!!!



கன்னக் குழியிரண்டில் கவின்மிகு நகையும் மறைந்திருக்க

பின்னற் சடைதனிலே பூச்சுடியப் பேருவகை ஒளிந்திருக்க

மின்னற் கொடி இடையசையும் மெல்ல மயில் நடனம்புரிய

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...



மார்கழித்த மயக்கம் தணிக்க விண்ணில் இருந்து கதிரவனும்

பார்களித்து இன்புறவே ஒளிவீசிய பக்குவத்துக்கு நன்றி கூற

ஊர்கூடி பொங்கலிட்டு உவகையிலே மங்களம் பாடியிங்கு

தார்சூடிய தைதிங்களிலே தமிழர் நாம் கொண்டாடுவோம்...





-தை மகளை வரவேற்போம் - அத்

-தை மகளை வரவேற்று பல வித்

-தை நலம் பெற்றும் ஆயகலை மெத்

-தை சுகம் பற்றியும் தூய மனம் தத்

-தை இறகு போலவே பறக்கட்டும்...

மிதக்கும் வரை தான் படகு - மிதக்க விட்டே தான் பழகு...



அன்பிற்குரிய மனையாளுக்கு வணக்கம் - உன் மேல்

என்புதோல் கடந்த உள்ளத்தின் இணக்கம் - நீ அன்று

பிறந்த போது எனக்கெனவே பிறந்தாய் - என் மனம்

திறந்த போது உனக்கெனவே புகுந்தாய்...


புகுந்த உள்ளம் தனில் அன்று தொட்டு இன்று வரை

மிகுந்த அன்பால் என்னை திளைக்க செய்தாய் - கரை

காணா கடலில் அக்கறையாய் என்னுள் கலந்து மறை

தோணா வேதமாய் என் வாழ்வை மாற்றினாய்...


மாற்றியது மாலை மட்டுமன்று - எனை இன்றும்

மாற்றுவது உன் சேலை மட்டுமன்று - அன்பு வழி

காட்டியது அதி காலை மட்டுமன்று - நீ என்றும்

காட்டுவது நதி நாளும் சேரும் கடலன்றோ?


நதி நாளும் சேர்ந்த கடல் போலே நீயும் நவ

நிதி யாவும் சேர்ந்த உடலன்றோ பொன்னுடலை

விதி ஆளும் தினம் பார்த்து பூமடியில் அன்று

ரதி யாய் நீயும் அவனியில் அவதரித்தாய்...


அவதரித்தாய் நீயும் அன்று - உன்னை ஈன்றதனால்

அவள் தரித்தாள் தாயாக - சேயாக நீ வளர்ந்த பின்

யுவதியாகி என் மனதில் குடி கொண்டாய் - இன்றோ

அவதிக் குள்ளாகிறது மனது உனைச் சிறிது பிரிந்தால்...


பிரிந்த இதழ்கள் தாம் பிரிந்த உள்ளங்களை இணைக்கும்

விரிந்த இதழ்களைப் போலே நாளும் நறுமணம் வீசி நான்

புரிந்த வரையில் என் மனக் கோட்டையிலே ன்னாட்சியை

தெரிந்த வரையிலே பிடித்தது உனைத் தவிர யாருமுண்டோ...?


வருடம் தோறும் வசந்தம் நாம் வசிக்கும் வாசல் தேடி

நெருடல்கள் ஏற்படுத்தி தருவதோடு நில்லாமல் நாடிய

ஆருடம் தோற்கும் வண்ணம் அமையும் வாழ்விலே

தேரிடம் அமர்ந்த தெய்வமென அவதரித்தாய் அல்லவா...


நாரோடு பூவை போலே நாமும் நட்டு வைத்த பூஞ்செடியின்

வேரோடு நீரைப் போலே கலந்தின்பம் கண்டு மகிழ்ந்து

பாரோடு பகல் மறையும் மீனைபோலவே ஒளி வீச நானன்று

தாரோடு கைப் பிடித்த நாளைத் தான் மறக்க முடியுமா...?


முடியும் என்றே நம் வாழ்வும் தொடங்கி இன்று வரை

விடியும் என்றே நம்பிக்கையுடன் கடந்த நாட்களில்

படியும் அன்பினை எடுத்தியம்பி உள்ளம் நிரம்பி

வடியும் வரை வாழ்வைச் செலுத்துவோம் என்றும்...


என்னவளுக்கு எனை மணந்த

தென்னவளுக்கு புதுமை தந்த

மன்னவனுக்கு பெருமை அளித்த

அன்னவளுக்கு பிறந்த நாள் மிகுந்த

மகிழ்ச்சியைத் தந்திட வேண்டும்...


மிதக்கும் வரை தான் படகு - வெள்ளத்தில்

மிதக்க விட்டே தான் பழகு - உள்ளத்தில்

மிதக்கும் கரையின் முன்பு - என்றும்

மிதக்க தோன்றும் அன்பு...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



செண்டாடிய பொழுதுகளை வண்டுகள் மறந்தாலும்

திண்டாடிய பொழுதுகளை காலத்தால் மறந்தாலும்

கண்டாடிய நினைவுகளை கவனம் தான் மறைத்தாலும்

கொண்டாடிய பொழுதுகளை உள்ளம் மறப்பதில்லை...



ஓராயிரம் நினைவுகளோடு புத்தாண்டும் தொடங்கிப்

பாராயிரம் வழிகளில் நாம் பகுத்துண்டு நடந்தாலும்

ஈராயிரத்துப் பதினைந்தாம் ஆண்டும் தொடங்கட்டும்

நாராயிரத்துப் பூக்களின் மாலையெனவே மாறட்டும்...



நில்லா உணர்வுகளின் கடிவாளத்தைப் பிடித்ததன்

பொல்லா நினைவுகளை ஓரிடம் நிறுத்தியதோடு

வல்லா நிலையாக வாழ்க்கையின் பாதையிலே

எல்லா வளமும் பெற்று இன்பமுற வாழ்த்துக்கள்...



மண்ணில் ஊறிய நீரைப் போலவே மகிழ்வதை

எண்ணில் தோன்றிடும் நினைவுகளால் நெகிழ்ந்து

கண்ணில் ஏறிய காட்சிகளைக் கருத்தொருமித்த

பெண்ணில் கண்டு ஆனந்தமடைய வாழ்த்துக்கள்...



கோடுகள் நேர்நின்றால் கோலமாவதில்லை அதனால்

கொஞ்சம் வளைந்து கொடுத்துப் பயணித்து பள்ளம்

மேடுகள் தன்னைக் கடந்த பாதையைக் கோலமாக்கிய

நெஞ்சம் நிலைத்துப் பூமியில் வாழ்ந்திட வாழ்த்துக்கள்...



உளியில் தோன்றாத அழகை உள்ளமதில் நேர்நிறுத்தியக்

களிப்பில் தோன்றிய சிலையின் உருவம் போலவே வான்

வெளியில் தோன்றாத புதுத் தாரகையாய் உருப்பெற்று அன்

பளிப்பாய் தோன்றிய வாழ்கையை அமைத்திட வேண்டும்...



கடந்த ஆண்டில் தொட மறந்ததையும்

நடப்பு ஆண்டில் கை விட்டதையும்

நடக்க இருக்கும் புதிய ஆண்டில்

தொட்டிடவும் தொடர்ந்திடவும்

வாழ்த்துக்கள்...



எண்ணியது யாவும் நடந்திடல் வேண்டும்...

பண்ணிய செயல்கள் பயன்பெற வேண்டும்...

திண்ணிய நெஞ்சம் தினம் தினம் வேண்டும்...

கண்ணியமாய் வாழ்வைக் கடந்திடல் வேண்டும்...



நாளுக்கு நாள் நன்மையைத் தேடிட வேண்டும்...

நன்மைக்குள் உண்மையை நாடிட வேண்டும்...

உண்மைக்குள் பெண்மையைத் தேடிட வேண்டும்...

பெண்மைக்குள் அன்பின் தன்மையை நாடிட வேண்டும்...



இருண்டு விடிவதல்ல விடியல் - உழைத்துக் கொண்டு

இருக்கும் கைகளின் பிடியில்...

விழுந்து ஓடுவதல்ல வெள்ளம் - விடா முயற்சியால்

எழுந்து ஓடுவதன்றோ உள்ளம்...