Tuesday, January 27, 2015

...கலையாத இளமை...


கார் தழுவிய வானம் மண்ணில் விழுந்து

கரைந்திட துடிக்குமது போல் மண்ணில்

ஏர் தழுவிய கால்கள் வயல்-வரப்பின் மேல்

ஏறித் தழுவிடத் துடிக்குமது போல் கழுத்தில்

தார் தழுவிய நெஞ்சில் கொஞ்சம் அசைந்து

தான் உயரத் தழுவிடத் துடிக்கும் அவளின்

மார் தழுவிய மயக்கம் தணிக்க நானும்

மான் தழுவதலைப் போலத் தழுவி மெல்ல



கொடி இடையின் கொம்பெனவே முளைத்த

கரங்களை அணைத்து நாணத்தால் அவளும்

பொடி நடையில் பாம்பெனவே அசையும்

பொலிவினிலே என்னை மறக்கும் நேரமதில்

விடியும் வரை கலை பலவும் பயில - காலை

வரும் வரையில் எங்கே துயில - பயின்றது

முடியும் வரை முத்தெடுத்து நான் தொடுக்க



கொதித்து இருக்கும் அவளுடலை கொஞ்சம்

குளிர வைத்துப் பின் சூடாக்க அவ்வுடலில்

பதித்து இருக்கும் முத்தங்களை மறுபடியும்

பதியுமாறு கொடுத்து அவ்வழகை நான் ரசிக்க

விதித்து இருக்கும் மன்மதனின் கருணையை

விளக்க வேறோன்றும் வேண்டாமல் நனைந்து

நொதித்து இருக்கும் உணர்வோடு ஒன்றாகி

நுட்பமாகக் கலந்தின்பம் தாண்டாமல் அடுத்து



உள்ளமது பூரித்து பொங்கியது விரிந்து பூமடலில்

உள்ள-மது குடித்துக் களித்து மீண்டும் பூவுடலில்

உள்ள-மது சிந்தாமல் பூவிதழை மடித்து சுகித்த

உள்ளமது உருகி பூவிதழை நனைத்த சுனையில்

வெள்ளமது உருவாகி உணர்ச்சிப் பெருக்கோடு

துள்ள-மது ஓடுகின்ற ஓடை நோக்கிப் பாயும்

பள்ளமது தெரியாமல் நதியெனவே தோய்ந்துப்

பண்பட்ட கலவிக் கடலிலே கலந்து ஆசையும்



அலையாகிப் பழகும் கரையின் மீது மோதி

அலைந்து நாளும் இன்பம் நல்கிக் கவின்று

நிலையாகிடப் படகும் ஆடுவதைப போலே

நின்றும் அசைந்தும் நன்றாய் ஆடிக் களித்து

சிலையாகிய அழகினிலே நீராடிப் போராடி

சிருங்காரப் பேரழகின் அறுபத்து நான்கு

கலையாகிடத் துடிக்கும் ஊடலும் கூடலும்

கலையாத இளமையை அழைக்கின்றது...



அழைத்த இன்பத்தை இடையில் வைத்து

அதிரூப தனத்தை உடையில் பொதிந்து

நுழைத்த வண்ணம் நடையில் தைத்து

நுடங்கும் இளமைக் கடையில் மறைத்து

விழைத்த அழகும் சிறுமடையில் பொங்கி

விருப்பம் போலே விடையைக் கொடுக்க

சழைத்த உடலில் உதரம் விழுந்து தங்கி

சற்றே திரண்டு கருவாய் விழைகின்றது...



கருவும் மெல்ல கவியாய் வளரக் காலம்

கனியும் என்றே காவல் கொள்ள அதன்

உருவும் நல்ல கவிழ்ந்து வளர மேலும்

உணர்வும் கொஞ்சம் புறத்தில் தெரிய

மருவும் உடலும் உருவம் கலைந்து

மயக்கம் வந்து மனதில் கொள்ளத்

திருவும் மகவாய் உதிக்கப் பையும்

திறந்து பயன் அடையும் இளமை...




கலையா இன்பம் மறையாதிருக்க

நிலையா வாழ்வில் குறையாதிருக்க

அலையா மனதும் நிறைவோடிருக்க

கலையா! என்றே பறையாதிருக்கக்


கலையும் இளமையும் மறையும் மெல்ல

இலையும் வளமையும் சருகாகும் செல்ல

நிலையும் வந்தடையும் - காலம் சொல்லா

விலையும் தந்தடையும் உயிர் ஒன்றுக்கே!!!



குடமும் கூட கும்பமானால் தலைக்கேறும்

இடமும் நீர் எடுக்க நேர்ந்தால் இடைக்கேறும்

படமும் நிழற் பிம்பமானால் தரைக்கேறும்

தடமும் பதிய நடந்தால் காலக் கடைக்கேறும்...

No comments:

Post a Comment