Tuesday, January 27, 2015

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...


ஆடியிலே விதைத்த சம்பா நெல்லும் மெல்ல

ஆவணியில் முளைவிட்டு கதிரோன் ஒளிபெற்று

புரட்டாசியிலே புத்துயிர் அடைந்திட வருகின்ற

ஐப்பசியில் மழைநீரை ஈர்த்து கொஞ்சம் அசைந்து

கார்த்திகையில் கதிர்விட்டு மண்குளிரும் பனியில்

மார்கழியில் நனைந்து அறுவடைகலம் புகுந்து

தைத் திங்கள் முதல் நாளில் பொங்கலாகும்...



உழவனின் கைபட்டு ஏர் கலப்பைக் கால் பட்டு

பழகும் மண்ணின் மணத்தோடும் குணத்தோடும்

கதிரவனின் ஒளிபட்டு கதிராய் நாளும் வெளிப்பட்டு

அதுவும் ஓர் நாளில் அறுவடையாகி எல்லோர்


பசியும் போக்கிட உள்ளோர்க்கு உணவாகி அதனை

புசிக்கும் வழி இல்லார்க்கு கனவாகி காணும் உலகில்

நசியும் பஞ்சமும் வறுமையும் இல்லா வளம் காண

வசிக்கும் யாவர்க்கும் வேண்டும் பொங்கலாகட்டும்...



கழிப்பதெற்கெனத் தோன்றும் போகியிலே பழையனவை

அழித்து நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நல்லுணவும்

பொங்கியதோடு நல்லுணர்வும் வளர்ந்து அனுதினமும்

தங்கியதோடு இன்பமும் நிலைத்து நின்றிட வேண்டும்...



புதுப் பானையில் பொலிவோடு பொங்கிய அரிசிக்கு

மதுரம் தந்திடும் வெல்லமென உள்ளமும் பொங்கி

அடிப்பாகத்தில் இனிக்கும் கரும்பாகி தைத்திங்களின்

அடிதொட்டு தொனிக்கும் யாவும் நலமாகிட வேண்டும்...



மாடுதனை ஆட்டுவித்து ஏரதனை நிலைநிறுத்திப் பயிரிட்ட

காடுதனில் விளைந்த நெல்லெடுத்து பொங்கல் படையலிட்டு

வாயில்லா உயிரினத்துக்கும் வாய்ப்பதனை உருவாக்கி

நோயில்லா நலம் வாழ நன்றியதனை செலுத்திட வேண்டும்...



விரும்பிய ஆடவனை மணந்திடவும் விருப்பம் போலவே மனம்

அரும்பும் ஆடவன் மனையாள வாய்த்திடவும் கன்னியர்கள் தாம்

காணும் பொங்கலிட்டு பகிர்ந்து உண்டவர்க்கும் கண்டவர்க்கும்

நாணும் வண்ணம் நலம் தைத்திங்கள் முதல் கூடிட வேண்டும்...



மதுவிருக்கும் மலர் போலே உள்ளம் மலர்ந்து

அதுவிருக்கும் நலத்தோடும் உள்ளம் மகிழ்ந்து

பொதுவிருக்கும் குணம் தனிலே உள்ளம் நெகிழ்ந்து

எதுவிருக்கும் இல்லையென்றாலும் நன்றாகட்டும்...



நதியிருக்கும் கரை போலே நாளும் பாதை வகுத்து

மதியிருக்கும் மனதோடு நல்லவற்றைத் தொகுத்து

விதியிருக்கும் துணையோடு மாலை தொடுத்து நற்

கதியிருக்கும் பதினாறு பேறும் வந்தடையட்டும்...



விழியிணைக்கும் காட்சிதனை செயலாக்க அன்பு

மொழியணைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி

பழியனைத்தும் மறந்து வாழ நாளும் செல்லும்

வழியனைத்தும் திறந்து நன்றே என்றாகட்டும்...



உளி மறைத்த உருவம் போலே எண்ணமும்

வெளித் தெரியா வண்ணம் தோன்றி வான்

வெளி மறைத்த நிலவாய் ஒளி வீசி உள்ளம்

களித்திடும் இன்பம் அன்றாடம் உண்டாகட்டும்...



அமிழ்தினும் இனிய நாளாம் பொங்கல் திருநாளை

தமிழர் தம் பெருவிழாவாக தரணியெங்கும் தைத்திங்கள்

உமியில் உதிர்ந்த நெல்லை உணவாக்கி படையலிட்டு

உமிழ்ந்திடும் கதிர்க்கு நன்றியோடு கொண்டாடுவோம்...



தை மகள் பிறந்ததிலே தரணியிலே கதிரவன் தன்

திசை மாறிப் பயணிக்கும் போது வானிலையும் அந்தத்

தை மகளை வரவேற்க மார்கழியின் குளிர் கொடுத்த

திங்கள் கடந்ததை பொங்கலோடு கொண்டாடுவோம்...



வீரத்தின் விளைநிலமாம் தமிழர் களத்திலும் உளத்திலும்

தீரத்தின் அடையாளமாய் விளங்கும் ஜல்லிகட்டோடு

ஓரத்தில் நின்று ஒதுங்காமல் மல்லுகட்டும் மாடுகளோடு

பாரத்தைச் செலுத்தி அடக்குவதே திறமையன்றோ!!!



பொட்டிட்ட மங்கையரும் பூவணிந்த பாவையரும்

கட்டுண்ட நாணம் மறந்து கண்டு மயங்கி வீட்டில்

கட்டிட்ட மாட்டுக்குத் தான் எத்தனை வீரமதிலே

கட்டுண்ட காளைமீது தன் கவனம் ஈர்க்குமன்றொ!!!



கன்னக் குழியிரண்டில் கவின்மிகு நகையும் மறைந்திருக்க

பின்னற் சடைதனிலே பூச்சுடியப் பேருவகை ஒளிந்திருக்க

மின்னற் கொடி இடையசையும் மெல்ல மயில் நடனம்புரிய

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...



மார்கழித்த மயக்கம் தணிக்க விண்ணில் இருந்து கதிரவனும்

பார்களித்து இன்புறவே ஒளிவீசிய பக்குவத்துக்கு நன்றி கூற

ஊர்கூடி பொங்கலிட்டு உவகையிலே மங்களம் பாடியிங்கு

தார்சூடிய தைதிங்களிலே தமிழர் நாம் கொண்டாடுவோம்...





-தை மகளை வரவேற்போம் - அத்

-தை மகளை வரவேற்று பல வித்

-தை நலம் பெற்றும் ஆயகலை மெத்

-தை சுகம் பற்றியும் தூய மனம் தத்

-தை இறகு போலவே பறக்கட்டும்...

No comments:

Post a Comment