Sunday, November 24, 2013

போர்க்குற்றம்...




இனத்தை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்

ஈனப் பிறவியல்லவா நம் அரசியல் பெருந்தலைகள்...


போர்க்குற்றம் செய்தவனும் இன்று உலக அரங்கிலே

யார்க்குற்றம் செய்ததெனக் கேட்கின்றான் உலகமதில்

நியாயம் என்று முன்மொழிகின்ற சில நாடுகளும்

காயம் பட்டு உயிரிழந்த இனத்தைக் கண்டதுண்டோ?


கொற்றவனாய் இருந்தவன் கூற்றுவனாய் மாறி கொடுங்

கூற்றுக்கு இரையாக நம்மினத்தை அழித்ததும் ஏனோ?



கருவாயில் இருந்து பிறந்தவன் எவனும் போரிலே

கருவறுக்க மாட்டான் முறைகேடாய் அவனும்

எருவாயில் இருந்து பிறந்ததினாலே ஈழப்பெண்களின்

கருவறுத்தான் அதற்கு அரசியலின் பின்னணியும்

பெருவாயில் விழுங்கிய பிணங்கள் அத்தனையும்

ஒருநாளில் உலகையும் உலுக்காதோ? பாவியவன்

ஒருவாயில் ஊர்கூடி உமிழும் நிலையும் வரும்

தருவாயில் தனியீழம் இலங்கையில் பிறக்காதோ?


ஒத்தைக்கு ஒத்தையாய் நம்மினத்தை எதிர்த்திருந்தால்

உருக்குலைந்து போயிருப்பான் சிங்களனவன் தந்திரத்தால்

பத்து நாடுகளின் துணை கொண்டு அழித்ததாலே நம்மக்கள்

பரிதவித்து துடித்து உயிர்விட்டு மடிந்ததன்றோ பரிதாபம்...



சிந்தித்தால் விடை கிடைக்கும் நம்மினத்தைச்

சந்தித்தால் வழிபிறக்கும் வாழ்வும் நிலைக்கும்...


உப்பு சப்பில்லாத தீர்மானம் நிறைவேறியது தானதில்

தப்பு செய்தவனைப் பற்றிய வார்த்தைகளே இல்லை...


கதைக்கப் படுகிறது நம்மினத்தை பலவாறு என்றாலும்

புதைக்கப் பட்டது ஈழத்தமிழ் மக்களின் ஊனுடல் அன்றோ!



கொடியும் வேரேனவே வாழ்ந்திருந்த நம்மினத்தின்

கொடியைப் கொளுத்தி வேரைப் பிடுங்கியெறிந்த

முடியரசான சிங்களத்தின் முகத்திரைக் கிழித்து

முடியைப் பிடுங்கி எறிந்திடுவோம் உலகறிய...



விதைப்போம் நாமும் நம் எண்ணமும் எழுத்தினையும்

விரும்பிய தேசத்தில் நம்மினத்துக்கு நல்வாழ்வு ஓர்நாள்

கிடைக்கும் அதில் நாமும் முடிந்தவரை பங்காற்றியிங்கு

கிளர்ந்தெழும் மாணவர் சமூகத்துக்கு தோள் கொடுப்போம்...

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...




கால வெள்ளத்தில் நந்தனம் குளித்து வெளியேற அதைப்

போல வெள்ளத்தில் களித்துக் கொண்டாடிட இன்று வருகை

தரும் விஜய வருடத்தினை நாம் அனைவரும் ஒன்றாக

வருக என வரவேற்று தமிழ்ப் புத்தாண்டாய் உபசரிப்போம்...



நிறைவேறாத ஆசைகள் நிறைவேறிடவும்

கரையேறாத எண்ணங்கள் கரையேறிடவும்

குறைவேறாத மனதில் குடிகொள்ளவும்

வரையறை இல்லாத வாழ்வுதனை

தொடங்கும் விஜய வருடந்தனில்

தொடர்ந்து பெற்றிட வாழ்த்துகிறேன்...



கார்காலம் செழித்து பயிர்கள் சிறக்கவும்

பேர்காலம் செழித்து உயிர்கள் பிறக்கவும்

நார்க்கோலம் செழித்து மணம் பரப்பவும்

ஊர்க்கோலம் செழித்து உணர்வு நிரம்பவும்

பார்க்கோலம் எங்கும் நம் தமிழ் பரவவும்

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...



அசையும் காற்றும் தென்றலாக முகிழ்

அவிழும் மலர்களும் மன்றலாக மனம்

இசையும் வாழ்க்கை நன்றாக தினம்

அமைந்து விஜயம் என்றாக மகிழ்வுடன்

வாழ்த்துகிறேன்...



வந்து போன நந்தன வருடம் நமக்கு

தந்து போனவைகளில் விடுபட்டதை

முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டில்

ஈந்து உள்ளம் மகிழ்ந்திட விஜயம்தரும்

புத்தாண்டில் நினைத்தது நிறைவேறி

பத்தாண்டின் பயனடைய வாழ்த்துக்கள்...




உழைப்பாளிகளின் நெற்றி வியர்வை நீர்த்து விழவும்

படைப்பாளிகளின் வெற்றிப் பார்வை சேர்ந்து எழவும்

உழைப்பில் உலகம் செழிக்க ஏர் நடத்தும் தேர்ந்த உழவும்

படைத்து உணவின் மூலத்தில் உலவும் காலம் தொழவும்

உருவாகும் விஜய ஆண்டும் மழை பெருகி பிழை குறுகி

பெருமைத் தேடித் தரும் ஆண்டாக மலரட்டும், வளரட்டும்...

பேராசைகள் தூங்கா நகரம் துபாயாகும்...




அரெங்கெங்கும் அவளுடைய நடனம் தான் - அதைப் பார்த்துக்

கிரங்குவது என்னெவோ நம்முடைய மனங்கள் தான் - சேர்த்து

அருந்துவது மதுவைத்தான் அன்றிப் பழகத் துடித்து அவளோடு

விருந்துண்ண நினைப்பதந்த இரவில் கரைந்த உணர்வும் தான்...



ஆடப் பிறந்தவள் தானெனின் சில மங்கை பிறருடன்

கூடப் பிறந்தவள் இல்லை என்றாலும் ஆடிப் பொருள்

தேடப் பிறந்தவள் தானெனினும் இவ்வுலகை விட்டே

ஓடப் பிறந்தவள் இல்லை என்றாலும் கூடும் இருள்

நாடப் பிறந்தவள் தானவளும் தன்னால் குடும்பம்

வாழப் பிறந்தவள் என்றவளும் ஆடப் பிறந்தவள்...



ஏழ் பிறவி இவ்வுலகில்

எடுத்து வந்தாலும் இதில்

எத்தனையாவது பிறவி

என்ற போதிலும் அத்தனையும்

பாழ் பிறவி என்றே நான்

பறைசாற்றுவேன் துபாயின்

பகல்போன்ற இரவையும்

பார்த்திராவிடில்...



நிலவை நிழலாக்கி நினைவை எழிலாக்க

நங்கைதன் உடலின் நடைகூட்டி இரவில்

உலகை ஒளியூட்டி உணர்வைக் களிப்பூட்டி

உறவை வெளிக்காட்டும் மதுவை நீராட்டி

மனதைக் குளிப்பாட்டி மறந்த நினைவூட்டும்

மங்கைதன் நாட்டியத்தில் மயங்கும் இரவும்

போனதை மோகத்தில் தானந்த பாகத்தில்

போதையின் பாதையில் போவது எங்கே?



நாவதை மயக்கும் மதுவும் ஆட்டத்தில்

தேவதை முன்னால் எதுவும் நாட்டத்தில்

நானதை எண்ணி மயங்கும் கூட்டத்தில்

தானதைத் தொலைத்தேன் மனமாற்றத்தில்...



கண்ணாடியின் விளிம்பிலும் கரையும் மதுவில்

பெண்ணாடியக் களிப்பிலும் உள்ளமது முடிவில்

முன்னாடிய நடனத்தில் உள்ளோடிய மயக்கத்தில்

நின்றாடிய அரங்கத்தில் வென்றாடிய இரவுகள்...



அசைவது இடையா? இல்லை

அவளணிந்திருக்கும் உடையா?

இசைவது ஆடலா? இல்லை

இன்பந்துய்க்கின்ற தேடலா?

கரைவது மதுவா? இல்லை

கவர்ந்திழுக்கும் மாதுவா?

நிறைவது மனமா? இல்லை

நீந்திகுளிக்கும் தினமா?

நகன்றது நேரமா? இல்லை

நாவருந்திய மதுவின் ஈரமா?

புகுந்தது ஆசையா? இல்லை

பூமடல் விரியும் ஓசையா?



தூங்கா நகரம் - மனதைவிட்டு

நீங்கா நகரம் - துன்பந்தனை

வாங்கா நகரம் ஏமாற்றத்தில்

ஏங்கா நகரம் - நிராசைகள்

தேங்கா நகரம் - பேராசைகள்

தூங்கா நகரம் துபாயாகும்...



பணமாடும் உன் திசைபார்த்து அவளின்

மனமாடும் அதன் இசைசேர்த்து அங்கமும்

நடமாடும் நங்கைக்கு வளையல் இட்டால்

தடமாடும் அழகெலாம் வந்தங்கே படமாடும்...



பருவத்தின் மேன்மையெல்லாம் துபாயின் ஏதோவொரு

துருவத்தில் தொலைக்கும் பெண்கள் - ஆடவரும் தம்

உருவத்தின் தன்மையெல்லாம் ரூபாயில் காணவந்து

புருவத்தின் கீழ் தொலைக்கும் இரவன்றோ அங்கே!



மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போலே நடன

மங்கைக்கு மயங்கும் ஆடவன் போலே மதனப்

பகுதிக்கு மயங்கும் மன்மத நாடகத்தில் தனது

பங்கைத் தான் பெறத் துடிக்கும் இரவுகள்...



கணிதத்தால் கூட கணிக்க இயலாத ஓரழகு...

கணிகையவள் நெஞ்சைவிட்டு அகலாத பேரழகு...

அறிவியலால் கூட அளக்க முடியாத தேரழகு...

அறிந்து அனுபவித்தாலும் விடியாத ஊரழகு...

வேள்வி கண்டேன்...




நான் காதலில்

தோற்று இருந்தால்

துக்கம் தானென் கடைசிப்

பக்கமாக இருந்திருக்கும்...


காதலில்

வெற்றி கொண்டேன் - அதில்

வேள்வி கண்டேன்...

புகையும் நெருப்பும்

பகையும் விருப்பும்

அக்கம் பக்கம் இருந்தது

துக்கம் வெட்கத்தோடு

பொய்யும் புரட்டும் கலந்த

நெய்யும் வார்க்கிறது நினைவில்...


எரியட்டும் - எதிர்காலமது

தெரியட்டும் - புதிர்போடுவது

புரியட்டும் - அதிலென் வாழ்வும்

விரியட்டும்...



பாதி வரை சென்ற நதி

மீதி வரை செல்லட்டும்

கடல் காண...



ஆதி முதல் அந்தம் வரை

பாதி முதல் பந்தம் வரை

விரியும் பூவுலகின் அர்த்தம்

புரியா விதி காண...



கழுத்தில் பதியும் காதல் எழுத்தில்

கண்டதைப் பிழையென்று கொண்டதை

மதியென்றாலும் தழுவியது விதியன்றோ!?



விருப்பு மேலிட்ட

நெருப்பு அணைந்த பின்னே

வெந்த சாம்பலை அள்ளி

நொந்த மனதைத் தேற்றுவதில்

தவறில்லை என்பேன்...

திருமண வாழ்த்துக்கள்...




ஒண்முக சுந்தரியாளோடு பன்முகமாகச்

சண்முக சுந்தரியாளைக் கைப்பிடிக்கப்

புவிவந்தமரும் பெருநாள் காணும்

ரவிவர்மனுக்குத் திருமண வாழ்த்துக்கள்...



இருமனம் ஒதுங்கும் சோலையில் இருவரும்

ஒருமனம் அணிகின்ற சேலையில் இனிவரும்

திருமணம் பரப்பிடும் வேலையில் இருவரும்

பெருமணம் கொடுக்கும் மாலையை நாடுங்கள்...



பார்த்ததை எல்லாம் அன்பினால் ஒன்றாகச்

சேர்த்ததை எல்லாம் பண்பினால் நன்றாகும்

வார்த்தையைப் பரிமாறிப் பசியாற என்றும்

சேர்ந்திருந்து பிரியாத சேவையில் கூடுங்கள்...



ஆவின் பாலை ருசிக்கும் இளங்கன்றைப்போல்

பூவின் தேன் சுவையில் பூலோகத்தை ரசிக்கும்

நாவின் சுவையை அறிந்து நாளின் சுவையறியும்

யாவிலும் அனுபவத்தைக் கண்டறியத் தேடுங்கள்...



மேகம் கூடி மழையாகி மண்ணை நனைப்பதன்

மோகம் தேடி ஆறாகப் பெருகியோடும் நீராகத்

தாகம் தணிக்கக் கரை இரண்டை நனைத்ததன்

தேகம் கொண்டு கடல் காணும் வரை ஓடுங்கள்...



எத்தனையும் எண்ணியதைப் பெற்று நலமோடு நாடிய

அத்துணையோடு குணம்காணக் குலம்வாழத் தேடிய

அத்தனையும் நிமலன் அருளாலே வலம்வரக் கூடிய

அத்துணையோடு வரம்பெற்ற கரம்பெற துதிபாடுங்கள்...





அன்புத்தொகையோடு கூடிய வாழ்வினில்

பண்புத்தொகை தனை தேடியதில் நாளும்

வினைத்தொகையைத் நாடி இருவரும்

உயிர்மெய்யாய் ஒன்றாகி உள்ளத்துப்

புணர்ச்சி விதியை மீறாமல் நன்றாகும்

உணர்வுக்குள் என்றாகி உலகத்தில்

பெயரெச்சத்தை விட்டுச் செல்லும்

வினையெச்சம் காண வாழ்த்துகிறேன்...



இலக்கணத்தோடு வாழுங்கள் - அந்த

இணக்கத்தோடு வாழுங்கள் - அன்பு

இலக்கியம்போல் வாழுங்கள் - உயர்ந்த

இலட்சியத்தோடு வாழுங்கள் - சேர்ந்த

இல்லாளோடு வாழுங்கள் - தேர்ந்த

எல்லாவற்றையும் பெற்று வாழுங்கள்...



முனைப்போடு வாழுங்கள் - காதலாள்

நினைப்போடு வாழுங்கள் - மாதவள்

இனிப்போடு வாழக் கைப்பிடித்த காலக்

கணிப்போடு வாழுங்கள் என்றும்...






வாழ்த்துவது என் கடமை

வாழ்வது உன் திறமை

போற்றுவது என் கவிதை (ப்)

போல் வாழ்வது உன் திறமை...

விடிந்ததா? முடிந்ததா?




விடிய விடிய விளக்கு எரியும் - எண்ணெய்

முடிய முடிய அதன் விளக்கம் புரியும்...


விடிய விடிய பூங்கதவைத் திறக்கும் - வித்தை

முடிய முடிய கதகதப்பை மறக்கும்...


விடிய விடிய மெய் விளையாடும் - ஆட்டம்

முடிய முடிய களிப்பின் கை வளைதேடும்...


விடிய விடிய மோதலில் மிகுந்தாடும் - தாகம்

முடிய முடிய காதலும் புகுந்தாடும்...


விடிய விடிய பாதரசம் போல் உருக்கும் - உருகிப்

படியப் படியக் கூடலும் காதல்-ரசமாய் இருக்கும்...


விடிய விடியக் கற்பை அளக்கும் - அளவு கடந்து

முடிய முடிய அதனை முகப் பொற்பும் விளக்கும்...


விடிய விடிய இரவுத் திரையை விலக்கும் - விலக்கி

முடிய முடிய அந்த எல்லையில் போய் கலக்கும்...


விடிய விடிய விளக்கொளியின் விட்டிலாகும் - இரவும்

முடிய முடிய விளக்கம் தேடும் தேகம் கட்டிலாகும்...


விடிய விடிய தடையாகும் உடையாவும் - பொழுது

முடிய முடிய அணிந்தால் கொல்லும் படையாகும்...


விடிய விடிய வளைவுகளை ரசிக்கும் - ரசித்து

முடிய முடிய அந்த வளைவுக்குள் வசிக்கும்...


விடிய விடிய நினைப்பில் தவிக்கும் - ஆவல்

முடிய முடிய அதனை முனைப்பில் குவிக்கும்...


விடிய விடிய நினைத்தால் இனிக்கும் - ஆசை

படியப் படிய சேர்ந்து அணைத்தால் தொனிக்கும்...


விடிய விடிய முந்தியில் மயங்கும் - ரவியும்

படியப் படிய அந்தியில் உணர்வும் இயங்கும்...


விடிய விடிய தேகத்தில் பிறக்கும் - மோகமும்

வடிய வடிய அந்த பாகத்தில் சிறக்கும்...


புலரப் புலரப் பொழுதும் பகையாம் - பருவப்பூ

மலர மலர மாலையில் ஆசையும் மிகையாம்...


புலர புலர மாலை தனை தூரமாக்கும் - இதழ்கள்

உலர உலர கொடுக்கும் முத்தமதை ஈரமாக்கும்...

சிறிய விடுகதைகள்...




Small Riddles:

1. பொழுது சாய சாய

மேல் பக்கம் சாயுமது

பொழுது விடிய விடிய

கீழ் பக்கம் தோயும்

அது எது?



2. கவிழ்ந்து பூவிருக்கும்

தோகையதை மறைத்திருக்கும்

நிமிர்ந்து காயிருக்கும்

தோளுயரம் வளர்ந்திருக்கும்

அது எது?



3. குவிந்த மொட்டு போலிருக்கும்

காம்பதைத் தூக்கி நிற்கும்

அவிழ்த்தால் அதில் பாலிருக்கும்

காம்பதைத் தேக்கி நிற்கும்

அது எது?



4. தோரணங்கள் ஏந்தி வரும்

அசையும் போது காந்தி தரும்

மேல் பக்கம் பெருத்திருந்து

கீழ் பக்கம் சிறுத்திருக்கும்

அது எது?



5. பயிர்கள் செழித்திருக்கும்

போக வழியிருக்கும் அதுவும்

மறைந்திருக்கும் - நீர் வாறி

இறைத்தால் நெகிழ்ந்து முப்

போகம் தான் கொடுக்கும்

அது எது?



6. கோடிருக்கும் இரண்டு

பக்கமும் இருக்கும்

கோல் கொண்டு எழுத

சிரமும் இருக்கும்

எழுதும் பிழையைத்

திருத்துவது முடியாது

அது எது?



பொருள்:

காந்தி - அழகு








மோகனப் புன்னகை...





அவள் இதழ் அவிழ்ந்தால் புன்னகை

அவள் இதழ் குவித்தால் மென்னகை

அவள் இதழ் மகிழ்ந்தால் நன்னகை

நாணம் கொண்டு நெகிழ்ந்த அந்நகை...


அவளின் புன்னகை என் உயிரின் மோகனமா?

ஆவல் கொண்டு நானேறும் மயிலின் வாகனமா?


முத்துக்கள் நிறைந்த மூன்றாம் பிறையா?

முன்னழகில் மறையாத நான்காம் துறையா?


முன்னின்று முகப்பளக்கப் படையெடுக்கும் அத்திரமா?

என்னென்று சொல்லவொண்ணா பேரழகின் சித்திரமா?


இதழ்வெல்லும் இனிமை கொடுக்கும் கோவையா?

பதில்சொல்லும் தனிமைக்கு துணையாகும் பூவையா?


ஆழக்கடலுக்குள் நீந்த வழிகாட்டும் முத்தினமா?

பழகும் உடலுக்குள் வந்து ஒளிகூட்டும் ரத்தினமா?


முத்தம் கனிந்து வரும் மோகத்தின் விளைவிடமா?

அர்த்தம் பல கொடுக்கும் தேகத்தில் முளைவிடுமா?


அமிழ்தம்போல் சுரக்கும் உமிழ்நீரின் அட்சயப் பாத்திரமா?

தமிழ்போல் இனிக்கும் மொழியூறும் காட்சியின் சூத்திரமா?


அணைமீறித் ததும்பும் வெள்ளத்தின் சங்கமக் குமிழா?

துணைதேடும் விரல் வந்து தழுவும் குங்குமச் சிமிழா?


இரண்டாக மடித்து மெதுவாய்த் திறக்கும் பால் நிலவா?

திரண்ட பருவத்தில் தோன்றும் இன்பத்தின் மேல் உலகா?


பக்கவாட்டில் தூக்கலாய் ஒளிவிடும் விளக்கின் சுடரா?

பூக்கள் விரியும் அழகைக் கவியில் அளக்கும் தொடரா?


உலகை மறக்கச் செய்யும் ஒருவகை யுக்தியா?

உணர்வை இழுத்துச் செல்லும் குறுநகை சக்தியா?


திலகம் விளங்கும் முகத்தை தாங்கி வரும் நறுமுகையா?

திருந்தா உள்ளத்துக்கும் திருத்தமாக விளங்கும் சிறுநகையா?


காதற் பிணியைக் கனிவாய்ப் போக்கும் விலைமிகு மருந்தா?

சாதல் இதற்கில்லை என்று சொல்லும் கலைமிகு விருந்தா?


மாதர் முகத்துக்கு தேவனவன் மகிழ்ந்து தந்த கொடையா?

போதாக் குறைக்கு காமன் கேள்விகளுக்கு வந்த விடையா?


நங்கையவள் சிரித்தால் தோற்று விடுவாள் மேனகையே!

பொங்கும் உள்ளம் பூரித்தால் தோற்று விடும் பூநகையே!



அந்த மேனகையால் சரிந்தது என் மனம் மட்டுமல்ல...

அந்த பூநகையால் சரிந்தது அனுதினமும் தான்....


அவள் இதழ் பிரித்தாள் மோகனப் புன்னகை உருவானது...

அவள் எனைப் பிரிந்தாள் கவியில் அந்நகை கருவானது...


அவள் இதழ் பிரித்தாள் உணர்வில் ஒருமாற்றம் உண்டானது...

அவள் எனைப் பிரிந்தாள் உள்ளம் ஏமாற்றத்தில் திண்டாடுது...

கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ!



வெண்தாமரைக்கு அப்புறமாக செந்தாமரை என்று இரண்டாவதாக

பெண்தாமரை ஒன்று உதித்ததினால் பெருமகிழ்ச்சி பிறக்கட்டும்...

கண்தாமரையென இரண்டும் காட்சியிலே ஒன்றாகக் கண்டு உள்ளம்

தண்தாமரையாய் மலர்ந்து உவகை கொண்ட மணமும் சிறக்கட்டும்...



கண்ணன் பிறப்பான் என்றே கனவு கண்டும் அதீத நம்பிக்கையும் கொண்டாய்...

பெண்ணாய் பிறந்ததென்று மனதில் மகிழ்வும் கொண்டு பெருமிதம் கொள்வாய்...


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் வேண்டுமம்மா - இரண்டாவதும்

மங்கையாய்ப் பிறந்து விட்டால் மாமாதவம் செய்திருக்க வேண்டுமே....



கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ! - முன்பு

கண்டதன் காலமின்றும் வென்றதன் கோலமன்றோ! - அன்பு

கொண்டது கண்ணென்றால் வென்றது பெண்ணன்றோ! - கனவு

கண்டது இன்னொன்று ஆனால் வென்றது என்னென்று...?



கற்பனையில் காண்பெதெல்லாம் கவியாவதின்

சொற்பலன் யாவுமென்றும் வெற்றியாவதில்லை...

முற்பயன் கொண்டதெல்லாம் புவிமீதினிலே

பிற்பலன் நடந்த கதையின் தொடர்ச்சியே...



நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

நினைவினில் இன்று கடந்தது நன்று....


அணைத்தது அன்று அணைப்புக்குள் நின்று

அணைப்பினில் வென்று துணையானது இன்று...



பாதையை வகுக்கலாம் பயணத்தைப் பகுப்பது யார்?

போதையில் கதைக்கலாம் தெளிந்ததும் மிதப்பது யார்...?



தள்ளைப் பெறும் முன்னே கனவில் தவிப்பதும்

பிள்ளை பெறும் முன்னே பெயர் வைப்பதும்

வெள்ளை வெயில் முன்னே குளிர்காய்வதும்

கொள்ளை மையல் கொள்ளச் சூடாவதும்

கூடாதென்பது தேடுவதை நாம்பெறவே...




இன்றைய நாகரிகம்:

தமிழிலே முனைவர் பட்டமும் பெற்று

அமிழ்தினும் இனிய பெயர்களை விடுத்து

சமஸ்க்ரிதத்தில் பெயர் தேடி வைப்பதன்

மமதையைத் தான் இன்றைய நாகரிகம்

என்பேன்....



இது தமிழுக்குச் செய்கின்ற ஒருவிதத் துரோகம் ஆகும்...



வந்தாரையும் வாழ வைப்பது தமிழ்நாடு - பாதி

வெந்தாரையும் மீறி நொந்தாரையும் - துன்பம்

தந்தாரையும் துரத்தி வந்தாரையும் - இன்பம்

தந்தாரையும் ஏங்கிச் சென்றாரையும் வாழ

வைப்பது தாய் தந்த தமிழல்லவா - காப்பது

நாமதற்கு செய்யும் தொண்டல்லவா - பிள்ளை

நாமங்கள் இடுவதிலும் உண்டல்லவா...




ஒன்று மறுக்கப்படும் போது அதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில்

என்றும் பயனில்லை...




நூலறுந்த பட்டம் போலறுந்தது போலிருக்கும்

நாதமும் சுரோணிதத்தில் போய் விழுந்ததும்

வாலறுந்து மெல்லக் கருவாய் உருவாகியதுவும்

வளர்ந்து ஆண்-பெண்ணாவது அவரவர் விதியே...



ஓடும் நதி கரையை நனைக்கிறதா? இல்லையதைத்

தேடும் விதி தரையை நனைக்கிறதா? எல்லையை

நாடும் நதி கடல் அலையில் முடிகிறதா? இல்லையது

கூடும் விதி ஆடல் நிலையில் முடிகிறதா?




ஓடும் வெள்ளத்திற்கு தான் தெரியும் நதியின் திசை...

பாடும் உள்ளத்திற்கு தான் புரியும் நாதத்தின் இசை...

ஆடும் ஊஞ்சலை அந்தரத்தில் கட்டி விட முடியுமா...?

தேடும் மஞ்சத்தை மந்திரத்தில் எட்டி விட முடியுமா...?

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...




புரியாத உள்ளம் இளகவும் அறியாமை இருள் விலகவும்

தெரியாத கேள்வி விளங்கவும் கிடைக்காத அருள் வழங்கவும்

எரியாத விளக்கு ஒளிவிடவும் விலகாத அன்பில் களித்திடவும்

சரியாத எண்ணம் பிறந்திடவும் அழியாது பண்பைக் காத்திடவும்

தீபாவளி திருநாளில் இறைவனின் ஆசி பெற்று மகிழ்ந்திடவும்

வாழ்த்துக்கள்....



ஐப்பசியின் மழையாலே முப்பசியின் விழைவாலே

எப்பசியும் கொண்டார்க்கும் அப்பசியை வென்றார்க்கும்

சொற்பசியின் கவிபோலே நெற்பசியில் புவியனைத்தும்

நற்பசியோடு சுவைத்து பொற்பசியொடு வாழ்ந்திடவும்

தீபங்களின் ஒளி வரிசையிலே அசைகின்ற உள்ளங்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....



ஐக்கியமாகும் ஒளிவெள்ளம் ஐப்பசியில் இறைவனின் அருளாலே

யோக்கியமாகும் எண்ணங்களில் எல்லாம் ஈடேறிய உள்ளத்தின்

பாக்கியமாகும் களிப்புடனே தீபாவளியைக் கொண்டாடிடவே

வாக்கியமாகும் வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்...



இறைவனடி சென்றார்க்குப் படையலிட்டு

இதயந்தனில் நின்றார்க்கு உடைகளிட்டு

குறைமனதை வென்றாரின் விடைபெற்று

உதயந்தனில் தீப ஒளியேற்றி வழிபட்டு


இந்த தீபாவளியை வரவேற்போம்...



மத்தாப்புப்பூ போலே எண்ணங்கள் உள் தோன்றவும் அதன்

முத்தாய்ப்பான வண்ணங்கள் புறம் தோன்றவும் இருளகல

எத்திக்கும் ஒளி கொடுக்க ஏற்றி வைத்த தீபம் போலவே

தித்திக்கும் வாழ்வமைய போற்றுவோம் தீபாவளியை...





பொருள்:

முப்பசி: உணவுப்பசி, உணர்வுப்பசி, உயிர்ப்பசி...

உயிர் பசித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே வசித்திருக்கிறாய்...

உடல் பசித்திருப்பதாலே நீ இப்பூவுலகை ரசித்திருக்கிறாய்...

உணர்வு தகித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே சுகித்திருக்கிறாய்...