Monday, February 27, 2012

ஞானப் புலம்பல்...

கேட்டுப் பெறுவது பிச்சை

கேட்காமல் கொள்வது இச்சை

தொட்டுக் கூடுவது இன்பம்

தொடாமல் சுடுவது துன்பம்

விட்டுக் கொடுப்பது நட்பு

விடாமல் தடுப்பது கற்பு

பட்டுப் போகாதது அன்பு

படாமல் படர்வது பண்பு

ஒட்டிக் கெடுப்பது பகை

ஒட்டாமல் வளர்வது மிகை

கொட்டி அழைப்பது அழகு

கொடாமல் கொடுப்பதைப் பழகு

வட்டி வளர்ப்பது வரவை

வாடாமல் அளப்பது இரவை

கட்டிப் பின்னுவது குழலை

கட்டாமல் கொஞ்சுவது மழலை

எட்டிப் பழகுவது உறவை

எட்டாமல் பறப்பது பறவை

தட்டிக் கழிப்பது வாக்கை 

தட்டாமல் பேசியதன் நாக்கை 

பெட்டிக்குள் அடக்குவது பணத்தை

பாடைக்குள் முடக்குவது பிணத்தை  

சட்டிக்குள் அடங்குவது அகப்பை

சாடாமல் சாடுவது வகுப்பை

நட்டு வளர்ப்பது மரத்தை

நடாமல் வளர்வதில்லை பரத்தை

கெட்டும் பெறுவது ஞானம்   

கேளாமல் கொடுப்பது வானம்

விட்டுப் போவது பொழுதுகள்

வீழாமல் காப்பது விழுதுகள்...


அ முதல் அஃ வரை...

அவசரத்தில் புத்தி கெட்டால்

என்னுடைய பெயரும் முட்டாள் . . .


ஆத்திரத்தில் அறிவை இழந்தால்

அளக்க உதவுமா முழந்தாள் . . .


இடையினில் கண்ட விருந்தால்

இன்னல் தீருமா மருந்தால் . . .


ஈகைக்கொரு விளக்கம் விதியானால்

ஈடுசெய்ய அழைக்குமோ மதியானால் . . .


உலகைச் சொல்லி அழுவதால்

உவகை வருமா தொழுவதால் . . .


ஊருக்கு லாபம் அந்த விலையாலே  

ஊர்வலத்தின் பாபம் எந்த நிலையாலே . . .


எண்ணிச் சொல்வதற்கு எதுவுமில்லை

எண்ணாமல் விடுவதற்கு பொதுவுமில்லை . . .


ஏனென்று கேட்க மண்ணில் யாருமில்லை

ஏளனத்தைப் பார்க்க கண்ணில் நீருமில்லை . . .


ஐயம் தீருவதற்கு வழியுமுண்டா

ஐயனுக்கு நான்காவது விழியுமுண்டோ . . .


ஒருத்தியின் மானம் காக்க விடியலுண்டா

ஒழுக்கம் இழந்து விட்ட மடியிலுண்டோ . . .  


ஓரமாய் இருப்பவரை உலகில் மதிப்பதுண்டா

ஓடமாய் இருப்பவரை உலகம் மிதிப்பதுண்டே . . .


ஔடதம்   இல்லாத நிலைமையுண்டா

ஔவையைப்  போல் புலமையுண்டோ . . .


அஃ என்பதே உயிரெழுத்தின் முடிவாகும் 

அஃதாவது ஆயுத எழுத்தானது வடிவாகும் . . .

அலையின் இயல்பு...

முன்பே எனக்கு தெரிந்திருந்தால் உன்

முகம் பார்த்ததோடு நிறுத்தியிருப்பேன்

அன்பே உனைப் புரிந்து கொள்ள

அகம் பார்க்க நினைத்தாலே அங்கே 

அகப்பட்டுக் கொண்டேன் நானும்

ஆழ்கடலென்று தெரியாமல் சிறைப்

புகப்பட்ட என்னை மீட்ட நீ சிந்தும்

புன்னகை அலையாலே முடியுமா?

இழுத்து விடுவது தான் அலையின் இயல்பு - என்

எழுத்து தொடர்வதும் அதன் இயல்பே...


மீட்டிய புன்னகையின் ராகத்தை

மீண்டும் மீட்டி விட எனையங்கு 

கூட்டி விடும் அந்த யோகத்தைக் 

கூடும் நாள் தான் எதுவோ?
 

உள்ளமதில் உரையாடுகின்றாய்...

உள்ளத்தின் நிழலில் ஒளியாய் வந்தாய் 

உயிர்வாழ சுவாசத்தில் வளியாய் வந்தாய் 

உலகத்தில் உன்னதமான உறவாய் வந்தாய் 

உதிர்ந்தாலும் வளர்கின்ற இறகாய் வந்தாய்... 

 வளி - காற்று


என்ணத்தை மொழியாக்கும் கலையைத் தந்தாய்  

என்றென்றும் விழிதேடும் நிலையைத் தந்தாய்

எதிர்காலம் என்பதை நிகழ்காலமாய்த் தருகிறாய் 

எதிர்கொள்ளும் போது மகிழ்கோலமாய்த் தருகிறாய்... 



காற்றாய் நுழைந்து என்னுள் காதலாய் மலர்கின்றாய் 

காந்தம் போல் மயக்கத்தின் மோதலாய்க் கலக்கின்றாய் 

ஊற்றாய் எழுந்தோடி ஆறாய்க் கரைதேடுகின்றாய் 

உணர்வில் கலந்து உள்ளமதில் உரையாடுகின்றாய்... 

விண்ணைத் தொடாத மதியவள்...


விண்ணைத் தொடாத மதியவள்...

விளக்கம் தேடாத விதியவள்...

எண்ணத் தொலையாத கலையவள்...

எனைவந்து தழுவாத நிலையவள்...


கண்ணைத் தொடரும் நிழலவள்...

கருத்தைத் தழுவும் எழிலவள்...

பெண்ணில் பேரின்பச் சிலையவள்...

பெருமைக் கடலாடும் அலையவள்...

மண்ணில் மார்கழிப் பனியவள்...

மயக்கத்தின் ஓர்வழி இனியவள்...