Tuesday, June 3, 2014

தலைவியின் துடிப்பு



வண்டது தேன் குடிக்கும் போதே இதழ்களால்

கண்டதை தான் மூடியிருக்கலாம் - தலைவியவள்

மறந்து மயக்கத்தில் ஆழ்ந்த போது வண்டது

பறந்து போனதைக் கண்டு துடிக்கின்றாள்...




தொட்டது உடல்தனிலே துலங்கும் முன்னே கைவிடப்

பட்டது மடல்தனிலே விளங்கும் பின்னே - கைதொடச்

சுட்டது உணர்வுக்குள் கலங்கும் - முன்னே மெய்தனைத்

தொட்டது நினைவுக்கு விளங்காமல் துடிக்கும்...




தலைவனை நினைத்து உதிரும் கண்ணீர் துளிகள் எத்தனையோ?

தலையணைக்குள்ளே காணாமல் போகின்றது அத்தனையும்...

இலைமறை காய் போலே எதிர்பட்ட நினைவுகள் எத்தனையோ?

வலைக்குள்ளே சிக்கிய மீனைபோலே துடிக்கின்றது அத்தனையும்...



ஆடைகூட பாரமாகித் தூரமாகிய வண்ணங்கள் எத்தனையோ?

தேடையிலே உணர்வுகளில் ஒளிந்து கரைகின்றது அத்தனையும்...

கூடையிலே கொட்டிய பூக்களில் விடுபட்டது எத்தனையோ?

ஓடையிலே தொடுக்காமல் கை விடப்பட்டது அத்தனையும்...



காலையிலே கதிராய் உதிக்கின்ற ஆவல்கள் எத்தனையோ?

மாலையிலே நிலவாய் வளர்ந்து தேய்கின்றது அத்தனையும்...

சோலையிலே ஒளியில் ஊடுருவுகின்ற நிழல்கள் எத்தனையோ?

பாலையிலே கானலாய் ஒளியில் மறைகின்றது அத்தனையும்...



மேகமது மழை பொழியாமல் கலைகின்றது எத்தனையோ?

தாகமதைத் தணிக்காமல் தொலைகின்றது அத்தனையும்...

மோகமது உணர்வாய் விரிந்து விரும்பியது எத்தனையோ?

தேகமதைத் தீண்டாமல் பிரிந்து சுருங்கியது அத்தனையும்...



தடையகற்றி தவிப்பகற்றிய பொழுதுகள் எத்தனையோ?

இடைமெலிந்த இடைவெளிக்குள் விழுந்தது அத்தனையும்...

மடை திறந்த வெள்ளம் போலே பெருகியது எத்தனையோ?

கொடை கொடுத்த உடல்தனிலே உருகியது அத்தனையும்...