Saturday, December 19, 2015

இனிய திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உருவமற்ற நெருப்பை ஓர் அகலில் கொண்டு வந்து

உருவத்தைக் கொடுக்கும் தீபமெனும் ஒளிபொருந்திய

திருக்கார்த்திகைத் திருநாளை தீபத் திருநாளாக்கிய

பெருமையை நிலைநாட்டிட விளக்கேற்றிடுவோம்...



எண்ணெய் வார்த்து திரிகளிட்ட அகல் விளக்குகளை

திண்ணை எங்கும் வரிசையாக அடுக்கி காண்பவர்

கண்ணை மயக்கும் தீபமாக ஒவ்வோர் வீட்டிலும்

விண்ணை வெல்ல ஒளியாக ஏற்றிடுவோமாக...



உரசலில் உண்டாவது தான் நெருப்பாகும் - அன்பு

உரசலில் உண்டாவது தான் விருப்பாகும் - ஒளி

வருவதில் மறைவது தான் இருளாகும் - அதைத்

தருவதில் நிறைவது இறை அருளாகும்...



அடிமுடியைத் தொடாதவாறு உருவமற்ற ஒளியாகப்

பிடிபடாவண்ணம் தீப்பிழம்பாக மாறிய சிவனார் தான்

அருவமாய் அருள் வழங்கிய நாளே கார்த்திகைத் தீபத்

திருநாளாகும் அந்நாளில் மகா தீபத்தை வணங்குவோம்...



பாபங்கள் மறைந்திடவும் நெஞ்சில் எழும் கோப -

தாபங்கள் குறைந்திடவும் எஞ்சிய முன்னோர்கள்

சாபங்கள் அழிந்திடவும் பஞ்சில் எரியும் அகல்

தீபங்கள் ஏற்றிடவும் திருக்கார்த்திகைத் திருநாளில்...



நதிவெள்ளம் பெருகும் போது கடல்வெள்ளம் தோய்ந்துவிடும்

கடல்வெள்ளம் உருகும் போது மழைவெள்ளம் சேர்ந்துவரும்

மழைவெள்ளம் பெருகும் போது மரங்கள் கூட சாய்ந்துவிடும்

ஒளிவெள்ளம் பெருகும் போது மழைவெள்ளம் ஓய்ந்துவிடும்



வேலை போல் எரிகின்ற அகல் தீபத்தையும் அக்னி

ஜ்வாலை போல் எரிகின்ற மகா தீபத்தையும் தரிசித்து

காலை பொழுதில் எரிகின்ற செங்கதிரை உள்வாங்கி

மாலை பொழுதில் தெரிகின்ற நிலவை போலே மக்கள்

ஒளிமயமான வாழ்வினை அழகிய சிலை செதுக்கும்

உளிமயமான காலத்தை கடந்திட வாழ்த்துகிறேன்...





அனைவருக்கும்

இனிய

திருக்கார்த்திகைத்

தீபத்திருநாள்

வாழ்த்துக்கள்...

...நோய்க்கு மருந்தானாள்...

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைத்

தன் நோய்க்கு தானே மருந்து"

என்கின்ற வள்ளுவனின் குரலிலே

காதல் நோய்க்கு மருந்து என்னவென்று

அழகாக எடுத்துரைக்கிறார்...




உடல்பட்ட நோய்க்கு மருந்துண்டு பார்வைக்கு

உடன்பட்ட நோய்க்கு மருந்தவளே.

இதனைத் தழுவிய கவிதையே "நோய்க்கு மருந்தானாள்"...

அனைவரும் படித்து ரசிக்கவும்...




...நோய்க்கு மருந்தானாள்...


அவள் தந்த நோய்க்கு

அவள் தான் மருந்து -

அதையே தான் வள்ளுவனும்

அனுபவித்து முன்மொழிந்தான்...



கண் கொண்ட காதல் நோய்க்கு

பெண் கொண்டாள் மருந்து -


விண் கொண்ட வெண்ணிலவுக்கு

விடிவெள்ளியெனவே இருந்து...



பாரா மனதையும் கண்கலந்து

சேரா நோய்க்கும் அவள் தான் மருந்து

தீராக் காதலுக்கும் அவளுடைய

பேரால் வந்தது அன்பெனும் விருந்து



இதழ்களில் ஊறித் ததும்பும் என்

இதயத்துக்கு ஏற்ற அவளே மருந்து

அதரத்தையே பருகும் முத்தமெனும்

மதுரத்தை மோகங்கொள்ள அருந்து



இறையைக் காணத் துடிக்கும் என்

நிறையை பேணும் அவள் தான் மருந்து

இரையாகும் காதல் ச(ந்த)ர்ப்பத்தினை

இடைவிடாமல் துரத்தும் நானே பருந்து



குறைவில்லா அழகைக் கொண்டே

கொடுக்கின்றாள் எனக்கும் விருந்து

மறைவில்லா மனதைத் திறந்து

மயங்கவே தருகின்றாள் மருந்து...



கரையில்லா நதியைப் போலவே

கடல்காண ஓடுகின்றாள் புரண்டு

அரைநில்லா மேகலை தான் நழுவ

ஆடல்காணத் தேடுகின்றாள் திரண்டு...



சீரசைய சிறந்து விளங்குகின்ற இடையின்

தேரசைய நடமாடினாள் தன்னை மறந்து

நேரசைய திறம்படக் குலுங்கும் அழகின்

மாரசைய படம்காட்டினாள் மெல்ல திறந்து



ஆலையில் அகப்பட்ட கரும்பைப் போல

சேலையில் புகப்பட்ட எறும்பானது அவளது

மாலையில் அடைப்பட்ட அரும்பைப் போல

காலைவரை சிறைபட்டு துரும்பானது...



பூநிறையும் காட்டிற்குள் பூத்து விரிந்த

தாமரைக் கூட்டிற்குள் காற்றுக் கூடத்

தானுழையா வண்ணம் சேர்த்தணைத்து

மானுட வாழ்வை மகத்துவம் ஆக்கினாள்...



பாலாடை போன்ற பருவத்து மேனியில்

மேலாடையென அள்ளிக் கொடுத்தாள் விருந்து

நூலாடை கூட நழுவியதை மறந்தவளும்

தேனோடையில் ஈந்தாள் தேவாமிர்த மருந்து...



உரசலில் தொடங்கிய விருந்தும் உணர்வின்

நெரிசலில் அடங்கிய பின்னர் இடைவழியின்

அரசிலைத் தடவிய மருந்தும் புணர்ந்தபின்

பரிசலும் சிக்கிய சுழி போலங்கே உழன்றது...



அருந்தாச் சங்கிலே மதுவூரிய பின்னரே அதை

மருந்தாக்கி காதல் நோய்க்குட்பட்ட மனதுக்கு

வருந்தா உணர்வையும் மெய்யதிலே கலந்தின்ப

விருந்தாக அளித்தாள் விடைபெற்றது நோயும்...



அடைகாக்கின்ற கோழியைப் போலவே "அந்த"

விடைகாக்கின்ற ஊழியத்தைக் கண்டு அவளது

இடைத்தோன்றும் ஆழியில் நானும் அலைமீறும்

தடையேறிச் செல்லுகின்ற பாய்மரப் படகாவேன்...



நோய்க் கொண்ட உடலுக்கு மருந்தானாள் - மயங்கும்

பாய்க் கொண்ட உணர்வுக்கு விருந்தானாள் - முயங்கும்

வாய்க் கொண்ட பெண்மைக்கு மருந்தானேன் -வியந்துப்

போய்க் கண்ட அண்மைக்கு விருந்தானேன்...

இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அரக்கனாகிய பௌமனை பூமாதேவி அழித்த திருநாளே

நரக சதுர்த்தி எனும் தீபாவளி திருநாளாகும் - துலாமில்

சூரிய சந்திரர்கள் கூடும் ஐப்பசியில் கதிரொளி குன்றுவதால்

நேரிய தீபங்களேற்றி வழிபடுவதும் தீபாவளி திருநாளாகும்...



பார்வதி தேவி தவமிருந்து தன்னுடலில் பரமசிவனை

நேர்பாதியாக்கிய பொன்னாளே தீபாவளி திருநாளாகும்

திருப்பாற்கடலை கடைந்த போது தன்வந்திரி பெருமான்

மருத்துவத்துக்கென்றே தோன்றியதும் தீபாவளியன்றே...



எண்ணையில் எழில்மிகும் மகாலக்ஷ்மியும்

கண்ணைக்காக்கும் அரப்பிலே கலைவாணியும்

குளிப்பதற்கான தண்ணீரிலே கங்காதேவியும்

ஒளிந்திருந்து தீபாவளியன்று ஆசீர்வதிக்கும்

சந்தனத்திலே பூமாதேவியும் மங்களமாய்

வந்தமரும் குங்குமத்தில் கௌரியும் உடுத்தும்

புத்தாடையிலே மகாவிஷ்ணுவும் வீற்றிருந்து

பூத்த மலர்களிலே மோகினியும் படைக்கும்

பண்டங்களிலே அமிர்தாம்பிகையும் ஒளிரும்

அண்டத்திலே தீபமாகிய பரமாத்மாவும் சேர்ந்து

நம்மை அருள்கூர்ந்து தீபாவளி திருநாளன்று

நன்மை பல பெற வைப்பதுவே சிறப்பாகும்...



சிறப்புமிகும் தீபாவளித் திருநாளை உறவினருடன்

பொறுப்புமிகும் உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்து

போற்றுவதோடு அனைவருடைய அகவிருள் நீங்கி

ஏற்றமிகு வாழ்வமைந்திடவும் வாழ்த்துகிறேன்...



ஆடைகளிலே பலவுண்டு புத்தாடை

அணிகின்ற நாளென்று சிலவுண்டு - அணியும்

ஆசையிலே பலவகையுண்டு அடையும்

ஆனந்தத்திலும் சிலவகையுண்டு - தீபாவளி



திருநாளிலே அணிவதன் சிறப்பு கண்டு அகத்

திருள் போக்கிடும் வழி கண்டு வாழ்விலே சில

திருப்பம் கொண்டு வானவில் வண்ணம் போல்

விருப்பம் கொண்டு வெடித்திடும் பட்டாசுகளும்



மத்தாப்பும் சிறுவர்கள் மயங்கிடும் பூத்திரிகளும்

முத்தாய்ப்பாய் கொளுத்தி மகிழ்ந்து கவனத்துடன்

இத்திருநாளைக் கொண்டாடிடவும் இல்லமெங்கும்

இருள்விலகி தீப ஒளி பரவிடவும் வாழ்த்துகிறேன்...



கலகம் பிறந்திடவே அரக்கனைப் படைத்தான் - அவனால்

கலக்கம் நிறைந்திடவே அதற்கோர் வழியைப் படைத்தான்

நரகம் அழிந்திடவே அவதாரம் எடுத்தான் - அம்பெய்தி

அரக்கனை ஒழித்திடவே அவ(ன்)தாரம் தொடுத்தாள்...



தேவியவள் தான் தவமிருந்து பரமனவன் உடலில்

ஆவியவள் சரி பாதியாக வேண்டுமென ஓர் நாளில்

சக்தியவள் விரும்பியதால் 'அர்த்தநாரி' எனும் ஓர்

யுக்திக்குள் சிவசக்தி ரூபமாகியது இந்நாளில் தான்...



ஒருவர் மகிழ்வதற்கே துறவு வைத்தான் - கூடி

இருவர் மகிழ்வதற்கே உறவு வைத்தான் - ஏற்றும்

தீபம் ஒளிர்வதற்கே இரவு வைத்தான் - அதற்கென

தீபாவளித் திருநாளை வரவு(ம்) வைத்தான்...



உடலும் மகிழ்ந்திடவே உணர்வை வைத்தான் - நாடும்

உள்ளம் மகிழ்ந்திடவே உயிரை வைத்தான் - ஆடும்

கடலும் மகிழ்ந்திடவே அலையை வைத்தான் - தேடும்

கண்கள் மகிழ்ந்திடவே அலைய வைத்தான்...



உறவும் செழித்திடவே பாசம் வைத்தான் - அன்பு

உலகம் செழித்திடவே நேசம் வைத்தான் - சிலையின்

உருவம் செழித்திடவே உளியை வைத்தான் - இருள்

உலகம் செழித்திடவே தீபாவளியை வைத்தான்...



முன்னோர்கள் மொழிந்து வைத்த திருநாளை

பின்னோர்கள் பெரிதுவக்க வைக்கும் பெருநாளை

அன்னார்கள் கூடி அனுபவித்ததன் வழிவழியாய்

இன்னார்கள் எடுத்து கொண்டதே தீபாவளியாகும்...



வேண்டுவன யாவும் நிறைவேறிடவும் மனதில்

வேண்டாதவை யாவும் கரையேறிடவும் இன்பகடலில்

நீந்துவன யாவும் நிறைவாகிடவும் இப்பூவுலகில்

நீத்தார்கடன் யாவும் குறைவாகிடவும் வாழ்த்துகிறேன்...



புறவிருள் போக்கிடும் ஒளியும் கண்டு

அகவிருள் போக்கிடும் வழியும் உண்டு

ஆழ்நிலை தியான வழியில் சென்று

சூழ்நிலை யாவும் உலகில் வென்று

வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



இவ்வுடலுக்கு இருவிழிகள்

இரண்டிற்கும் இடைவெளியில்

திவ்வியமாய் இருள்விலக்கத்

திரண்டுநிற்கும் தீப ஒளி...


அவ்வொளி கொண்டே

அஞ்ஞானம் அழிந்திடவே

மேவிய ஒளியாலே

மெஞ்ஞானம் வளர்ந்திடவே

வாழ்த்துகிறேன்...



இத்தீபாவளி திருநாளில் இல்லமெங்கும்

புத்தாடைப் போலே புதுப்பொலிவு பூண்டு

மத்தாப்பு போலே மங்களவாய் மலர்ந்து

தித்திக்கும் பண்டங்களை பகுத்துண்டு



மாற்றம் காணும் மனிதரின் சூழ்நிலைத்

தோற்றம் கண்டு மனதளவில் பலமுறை

ஏற்றம் கொண்டு உழைப்பிலே நேர்மையின்

சீற்றம் கொண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



மேடும் பள்ளமும் உள்ளவரை இறைவனை

நாடும் உள்ளமும் உள்ளவரை இத்திருநாள்

வீடும் வாசலும் உள்ளவரை தீபாவளியை

தேடும் ஆசையில் செல்லும்வரை தொடரும்...



திரளாத மலருக்குள் ஏந்தும் தேனைப் போலே

மிரளாத கடலுக்குள் நீந்தும் மீனைப் போலே

பிறழாத மனதில் தோன்றும் ஆசையும் மெல்ல

பிறருக்கு உதவிட அரும்பட்டும் விரும்பட்டும்...



இரண்டே வரியில் சொல்லப் போனால்:


இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அருளை விளக்கியதன் பொருளை வழங்குவதே தீபாவளி





அனைவருக்கும் 

என்

இனிய

தீபாவளித் திருநாள்

வாழ்த்துக்கள்...