Saturday, December 19, 2015

இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அரக்கனாகிய பௌமனை பூமாதேவி அழித்த திருநாளே

நரக சதுர்த்தி எனும் தீபாவளி திருநாளாகும் - துலாமில்

சூரிய சந்திரர்கள் கூடும் ஐப்பசியில் கதிரொளி குன்றுவதால்

நேரிய தீபங்களேற்றி வழிபடுவதும் தீபாவளி திருநாளாகும்...



பார்வதி தேவி தவமிருந்து தன்னுடலில் பரமசிவனை

நேர்பாதியாக்கிய பொன்னாளே தீபாவளி திருநாளாகும்

திருப்பாற்கடலை கடைந்த போது தன்வந்திரி பெருமான்

மருத்துவத்துக்கென்றே தோன்றியதும் தீபாவளியன்றே...



எண்ணையில் எழில்மிகும் மகாலக்ஷ்மியும்

கண்ணைக்காக்கும் அரப்பிலே கலைவாணியும்

குளிப்பதற்கான தண்ணீரிலே கங்காதேவியும்

ஒளிந்திருந்து தீபாவளியன்று ஆசீர்வதிக்கும்

சந்தனத்திலே பூமாதேவியும் மங்களமாய்

வந்தமரும் குங்குமத்தில் கௌரியும் உடுத்தும்

புத்தாடையிலே மகாவிஷ்ணுவும் வீற்றிருந்து

பூத்த மலர்களிலே மோகினியும் படைக்கும்

பண்டங்களிலே அமிர்தாம்பிகையும் ஒளிரும்

அண்டத்திலே தீபமாகிய பரமாத்மாவும் சேர்ந்து

நம்மை அருள்கூர்ந்து தீபாவளி திருநாளன்று

நன்மை பல பெற வைப்பதுவே சிறப்பாகும்...



சிறப்புமிகும் தீபாவளித் திருநாளை உறவினருடன்

பொறுப்புமிகும் உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்து

போற்றுவதோடு அனைவருடைய அகவிருள் நீங்கி

ஏற்றமிகு வாழ்வமைந்திடவும் வாழ்த்துகிறேன்...



ஆடைகளிலே பலவுண்டு புத்தாடை

அணிகின்ற நாளென்று சிலவுண்டு - அணியும்

ஆசையிலே பலவகையுண்டு அடையும்

ஆனந்தத்திலும் சிலவகையுண்டு - தீபாவளி



திருநாளிலே அணிவதன் சிறப்பு கண்டு அகத்

திருள் போக்கிடும் வழி கண்டு வாழ்விலே சில

திருப்பம் கொண்டு வானவில் வண்ணம் போல்

விருப்பம் கொண்டு வெடித்திடும் பட்டாசுகளும்



மத்தாப்பும் சிறுவர்கள் மயங்கிடும் பூத்திரிகளும்

முத்தாய்ப்பாய் கொளுத்தி மகிழ்ந்து கவனத்துடன்

இத்திருநாளைக் கொண்டாடிடவும் இல்லமெங்கும்

இருள்விலகி தீப ஒளி பரவிடவும் வாழ்த்துகிறேன்...



கலகம் பிறந்திடவே அரக்கனைப் படைத்தான் - அவனால்

கலக்கம் நிறைந்திடவே அதற்கோர் வழியைப் படைத்தான்

நரகம் அழிந்திடவே அவதாரம் எடுத்தான் - அம்பெய்தி

அரக்கனை ஒழித்திடவே அவ(ன்)தாரம் தொடுத்தாள்...



தேவியவள் தான் தவமிருந்து பரமனவன் உடலில்

ஆவியவள் சரி பாதியாக வேண்டுமென ஓர் நாளில்

சக்தியவள் விரும்பியதால் 'அர்த்தநாரி' எனும் ஓர்

யுக்திக்குள் சிவசக்தி ரூபமாகியது இந்நாளில் தான்...



ஒருவர் மகிழ்வதற்கே துறவு வைத்தான் - கூடி

இருவர் மகிழ்வதற்கே உறவு வைத்தான் - ஏற்றும்

தீபம் ஒளிர்வதற்கே இரவு வைத்தான் - அதற்கென

தீபாவளித் திருநாளை வரவு(ம்) வைத்தான்...



உடலும் மகிழ்ந்திடவே உணர்வை வைத்தான் - நாடும்

உள்ளம் மகிழ்ந்திடவே உயிரை வைத்தான் - ஆடும்

கடலும் மகிழ்ந்திடவே அலையை வைத்தான் - தேடும்

கண்கள் மகிழ்ந்திடவே அலைய வைத்தான்...



உறவும் செழித்திடவே பாசம் வைத்தான் - அன்பு

உலகம் செழித்திடவே நேசம் வைத்தான் - சிலையின்

உருவம் செழித்திடவே உளியை வைத்தான் - இருள்

உலகம் செழித்திடவே தீபாவளியை வைத்தான்...



முன்னோர்கள் மொழிந்து வைத்த திருநாளை

பின்னோர்கள் பெரிதுவக்க வைக்கும் பெருநாளை

அன்னார்கள் கூடி அனுபவித்ததன் வழிவழியாய்

இன்னார்கள் எடுத்து கொண்டதே தீபாவளியாகும்...



வேண்டுவன யாவும் நிறைவேறிடவும் மனதில்

வேண்டாதவை யாவும் கரையேறிடவும் இன்பகடலில்

நீந்துவன யாவும் நிறைவாகிடவும் இப்பூவுலகில்

நீத்தார்கடன் யாவும் குறைவாகிடவும் வாழ்த்துகிறேன்...



புறவிருள் போக்கிடும் ஒளியும் கண்டு

அகவிருள் போக்கிடும் வழியும் உண்டு

ஆழ்நிலை தியான வழியில் சென்று

சூழ்நிலை யாவும் உலகில் வென்று

வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



இவ்வுடலுக்கு இருவிழிகள்

இரண்டிற்கும் இடைவெளியில்

திவ்வியமாய் இருள்விலக்கத்

திரண்டுநிற்கும் தீப ஒளி...


அவ்வொளி கொண்டே

அஞ்ஞானம் அழிந்திடவே

மேவிய ஒளியாலே

மெஞ்ஞானம் வளர்ந்திடவே

வாழ்த்துகிறேன்...



இத்தீபாவளி திருநாளில் இல்லமெங்கும்

புத்தாடைப் போலே புதுப்பொலிவு பூண்டு

மத்தாப்பு போலே மங்களவாய் மலர்ந்து

தித்திக்கும் பண்டங்களை பகுத்துண்டு



மாற்றம் காணும் மனிதரின் சூழ்நிலைத்

தோற்றம் கண்டு மனதளவில் பலமுறை

ஏற்றம் கொண்டு உழைப்பிலே நேர்மையின்

சீற்றம் கொண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



மேடும் பள்ளமும் உள்ளவரை இறைவனை

நாடும் உள்ளமும் உள்ளவரை இத்திருநாள்

வீடும் வாசலும் உள்ளவரை தீபாவளியை

தேடும் ஆசையில் செல்லும்வரை தொடரும்...



திரளாத மலருக்குள் ஏந்தும் தேனைப் போலே

மிரளாத கடலுக்குள் நீந்தும் மீனைப் போலே

பிறழாத மனதில் தோன்றும் ஆசையும் மெல்ல

பிறருக்கு உதவிட அரும்பட்டும் விரும்பட்டும்...



இரண்டே வரியில் சொல்லப் போனால்:


இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அருளை விளக்கியதன் பொருளை வழங்குவதே தீபாவளி





அனைவருக்கும் 

என்

இனிய

தீபாவளித் திருநாள்

வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment