Sunday, November 24, 2013

பேராசைகள் தூங்கா நகரம் துபாயாகும்...




அரெங்கெங்கும் அவளுடைய நடனம் தான் - அதைப் பார்த்துக்

கிரங்குவது என்னெவோ நம்முடைய மனங்கள் தான் - சேர்த்து

அருந்துவது மதுவைத்தான் அன்றிப் பழகத் துடித்து அவளோடு

விருந்துண்ண நினைப்பதந்த இரவில் கரைந்த உணர்வும் தான்...



ஆடப் பிறந்தவள் தானெனின் சில மங்கை பிறருடன்

கூடப் பிறந்தவள் இல்லை என்றாலும் ஆடிப் பொருள்

தேடப் பிறந்தவள் தானெனினும் இவ்வுலகை விட்டே

ஓடப் பிறந்தவள் இல்லை என்றாலும் கூடும் இருள்

நாடப் பிறந்தவள் தானவளும் தன்னால் குடும்பம்

வாழப் பிறந்தவள் என்றவளும் ஆடப் பிறந்தவள்...



ஏழ் பிறவி இவ்வுலகில்

எடுத்து வந்தாலும் இதில்

எத்தனையாவது பிறவி

என்ற போதிலும் அத்தனையும்

பாழ் பிறவி என்றே நான்

பறைசாற்றுவேன் துபாயின்

பகல்போன்ற இரவையும்

பார்த்திராவிடில்...



நிலவை நிழலாக்கி நினைவை எழிலாக்க

நங்கைதன் உடலின் நடைகூட்டி இரவில்

உலகை ஒளியூட்டி உணர்வைக் களிப்பூட்டி

உறவை வெளிக்காட்டும் மதுவை நீராட்டி

மனதைக் குளிப்பாட்டி மறந்த நினைவூட்டும்

மங்கைதன் நாட்டியத்தில் மயங்கும் இரவும்

போனதை மோகத்தில் தானந்த பாகத்தில்

போதையின் பாதையில் போவது எங்கே?



நாவதை மயக்கும் மதுவும் ஆட்டத்தில்

தேவதை முன்னால் எதுவும் நாட்டத்தில்

நானதை எண்ணி மயங்கும் கூட்டத்தில்

தானதைத் தொலைத்தேன் மனமாற்றத்தில்...



கண்ணாடியின் விளிம்பிலும் கரையும் மதுவில்

பெண்ணாடியக் களிப்பிலும் உள்ளமது முடிவில்

முன்னாடிய நடனத்தில் உள்ளோடிய மயக்கத்தில்

நின்றாடிய அரங்கத்தில் வென்றாடிய இரவுகள்...



அசைவது இடையா? இல்லை

அவளணிந்திருக்கும் உடையா?

இசைவது ஆடலா? இல்லை

இன்பந்துய்க்கின்ற தேடலா?

கரைவது மதுவா? இல்லை

கவர்ந்திழுக்கும் மாதுவா?

நிறைவது மனமா? இல்லை

நீந்திகுளிக்கும் தினமா?

நகன்றது நேரமா? இல்லை

நாவருந்திய மதுவின் ஈரமா?

புகுந்தது ஆசையா? இல்லை

பூமடல் விரியும் ஓசையா?



தூங்கா நகரம் - மனதைவிட்டு

நீங்கா நகரம் - துன்பந்தனை

வாங்கா நகரம் ஏமாற்றத்தில்

ஏங்கா நகரம் - நிராசைகள்

தேங்கா நகரம் - பேராசைகள்

தூங்கா நகரம் துபாயாகும்...



பணமாடும் உன் திசைபார்த்து அவளின்

மனமாடும் அதன் இசைசேர்த்து அங்கமும்

நடமாடும் நங்கைக்கு வளையல் இட்டால்

தடமாடும் அழகெலாம் வந்தங்கே படமாடும்...



பருவத்தின் மேன்மையெல்லாம் துபாயின் ஏதோவொரு

துருவத்தில் தொலைக்கும் பெண்கள் - ஆடவரும் தம்

உருவத்தின் தன்மையெல்லாம் ரூபாயில் காணவந்து

புருவத்தின் கீழ் தொலைக்கும் இரவன்றோ அங்கே!



மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போலே நடன

மங்கைக்கு மயங்கும் ஆடவன் போலே மதனப்

பகுதிக்கு மயங்கும் மன்மத நாடகத்தில் தனது

பங்கைத் தான் பெறத் துடிக்கும் இரவுகள்...



கணிதத்தால் கூட கணிக்க இயலாத ஓரழகு...

கணிகையவள் நெஞ்சைவிட்டு அகலாத பேரழகு...

அறிவியலால் கூட அளக்க முடியாத தேரழகு...

அறிந்து அனுபவித்தாலும் விடியாத ஊரழகு...

No comments:

Post a Comment