Sunday, November 24, 2013

மோகனப் புன்னகை...





அவள் இதழ் அவிழ்ந்தால் புன்னகை

அவள் இதழ் குவித்தால் மென்னகை

அவள் இதழ் மகிழ்ந்தால் நன்னகை

நாணம் கொண்டு நெகிழ்ந்த அந்நகை...


அவளின் புன்னகை என் உயிரின் மோகனமா?

ஆவல் கொண்டு நானேறும் மயிலின் வாகனமா?


முத்துக்கள் நிறைந்த மூன்றாம் பிறையா?

முன்னழகில் மறையாத நான்காம் துறையா?


முன்னின்று முகப்பளக்கப் படையெடுக்கும் அத்திரமா?

என்னென்று சொல்லவொண்ணா பேரழகின் சித்திரமா?


இதழ்வெல்லும் இனிமை கொடுக்கும் கோவையா?

பதில்சொல்லும் தனிமைக்கு துணையாகும் பூவையா?


ஆழக்கடலுக்குள் நீந்த வழிகாட்டும் முத்தினமா?

பழகும் உடலுக்குள் வந்து ஒளிகூட்டும் ரத்தினமா?


முத்தம் கனிந்து வரும் மோகத்தின் விளைவிடமா?

அர்த்தம் பல கொடுக்கும் தேகத்தில் முளைவிடுமா?


அமிழ்தம்போல் சுரக்கும் உமிழ்நீரின் அட்சயப் பாத்திரமா?

தமிழ்போல் இனிக்கும் மொழியூறும் காட்சியின் சூத்திரமா?


அணைமீறித் ததும்பும் வெள்ளத்தின் சங்கமக் குமிழா?

துணைதேடும் விரல் வந்து தழுவும் குங்குமச் சிமிழா?


இரண்டாக மடித்து மெதுவாய்த் திறக்கும் பால் நிலவா?

திரண்ட பருவத்தில் தோன்றும் இன்பத்தின் மேல் உலகா?


பக்கவாட்டில் தூக்கலாய் ஒளிவிடும் விளக்கின் சுடரா?

பூக்கள் விரியும் அழகைக் கவியில் அளக்கும் தொடரா?


உலகை மறக்கச் செய்யும் ஒருவகை யுக்தியா?

உணர்வை இழுத்துச் செல்லும் குறுநகை சக்தியா?


திலகம் விளங்கும் முகத்தை தாங்கி வரும் நறுமுகையா?

திருந்தா உள்ளத்துக்கும் திருத்தமாக விளங்கும் சிறுநகையா?


காதற் பிணியைக் கனிவாய்ப் போக்கும் விலைமிகு மருந்தா?

சாதல் இதற்கில்லை என்று சொல்லும் கலைமிகு விருந்தா?


மாதர் முகத்துக்கு தேவனவன் மகிழ்ந்து தந்த கொடையா?

போதாக் குறைக்கு காமன் கேள்விகளுக்கு வந்த விடையா?


நங்கையவள் சிரித்தால் தோற்று விடுவாள் மேனகையே!

பொங்கும் உள்ளம் பூரித்தால் தோற்று விடும் பூநகையே!



அந்த மேனகையால் சரிந்தது என் மனம் மட்டுமல்ல...

அந்த பூநகையால் சரிந்தது அனுதினமும் தான்....


அவள் இதழ் பிரித்தாள் மோகனப் புன்னகை உருவானது...

அவள் எனைப் பிரிந்தாள் கவியில் அந்நகை கருவானது...


அவள் இதழ் பிரித்தாள் உணர்வில் ஒருமாற்றம் உண்டானது...

அவள் எனைப் பிரிந்தாள் உள்ளம் ஏமாற்றத்தில் திண்டாடுது...

No comments:

Post a Comment