Sunday, November 24, 2013

கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ!



வெண்தாமரைக்கு அப்புறமாக செந்தாமரை என்று இரண்டாவதாக

பெண்தாமரை ஒன்று உதித்ததினால் பெருமகிழ்ச்சி பிறக்கட்டும்...

கண்தாமரையென இரண்டும் காட்சியிலே ஒன்றாகக் கண்டு உள்ளம்

தண்தாமரையாய் மலர்ந்து உவகை கொண்ட மணமும் சிறக்கட்டும்...



கண்ணன் பிறப்பான் என்றே கனவு கண்டும் அதீத நம்பிக்கையும் கொண்டாய்...

பெண்ணாய் பிறந்ததென்று மனதில் மகிழ்வும் கொண்டு பெருமிதம் கொள்வாய்...


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் வேண்டுமம்மா - இரண்டாவதும்

மங்கையாய்ப் பிறந்து விட்டால் மாமாதவம் செய்திருக்க வேண்டுமே....



கொண்டது கோலமென்றால் வென்றது காலமன்றோ! - முன்பு

கண்டதன் காலமின்றும் வென்றதன் கோலமன்றோ! - அன்பு

கொண்டது கண்ணென்றால் வென்றது பெண்ணன்றோ! - கனவு

கண்டது இன்னொன்று ஆனால் வென்றது என்னென்று...?



கற்பனையில் காண்பெதெல்லாம் கவியாவதின்

சொற்பலன் யாவுமென்றும் வெற்றியாவதில்லை...

முற்பயன் கொண்டதெல்லாம் புவிமீதினிலே

பிற்பலன் நடந்த கதையின் தொடர்ச்சியே...



நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

நினைவினில் இன்று கடந்தது நன்று....


அணைத்தது அன்று அணைப்புக்குள் நின்று

அணைப்பினில் வென்று துணையானது இன்று...



பாதையை வகுக்கலாம் பயணத்தைப் பகுப்பது யார்?

போதையில் கதைக்கலாம் தெளிந்ததும் மிதப்பது யார்...?



தள்ளைப் பெறும் முன்னே கனவில் தவிப்பதும்

பிள்ளை பெறும் முன்னே பெயர் வைப்பதும்

வெள்ளை வெயில் முன்னே குளிர்காய்வதும்

கொள்ளை மையல் கொள்ளச் சூடாவதும்

கூடாதென்பது தேடுவதை நாம்பெறவே...




இன்றைய நாகரிகம்:

தமிழிலே முனைவர் பட்டமும் பெற்று

அமிழ்தினும் இனிய பெயர்களை விடுத்து

சமஸ்க்ரிதத்தில் பெயர் தேடி வைப்பதன்

மமதையைத் தான் இன்றைய நாகரிகம்

என்பேன்....



இது தமிழுக்குச் செய்கின்ற ஒருவிதத் துரோகம் ஆகும்...



வந்தாரையும் வாழ வைப்பது தமிழ்நாடு - பாதி

வெந்தாரையும் மீறி நொந்தாரையும் - துன்பம்

தந்தாரையும் துரத்தி வந்தாரையும் - இன்பம்

தந்தாரையும் ஏங்கிச் சென்றாரையும் வாழ

வைப்பது தாய் தந்த தமிழல்லவா - காப்பது

நாமதற்கு செய்யும் தொண்டல்லவா - பிள்ளை

நாமங்கள் இடுவதிலும் உண்டல்லவா...




ஒன்று மறுக்கப்படும் போது அதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில்

என்றும் பயனில்லை...




நூலறுந்த பட்டம் போலறுந்தது போலிருக்கும்

நாதமும் சுரோணிதத்தில் போய் விழுந்ததும்

வாலறுந்து மெல்லக் கருவாய் உருவாகியதுவும்

வளர்ந்து ஆண்-பெண்ணாவது அவரவர் விதியே...



ஓடும் நதி கரையை நனைக்கிறதா? இல்லையதைத்

தேடும் விதி தரையை நனைக்கிறதா? எல்லையை

நாடும் நதி கடல் அலையில் முடிகிறதா? இல்லையது

கூடும் விதி ஆடல் நிலையில் முடிகிறதா?




ஓடும் வெள்ளத்திற்கு தான் தெரியும் நதியின் திசை...

பாடும் உள்ளத்திற்கு தான் புரியும் நாதத்தின் இசை...

ஆடும் ஊஞ்சலை அந்தரத்தில் கட்டி விட முடியுமா...?

தேடும் மஞ்சத்தை மந்திரத்தில் எட்டி விட முடியுமா...?

No comments:

Post a Comment