Sunday, November 24, 2013

விடிந்ததா? முடிந்ததா?




விடிய விடிய விளக்கு எரியும் - எண்ணெய்

முடிய முடிய அதன் விளக்கம் புரியும்...


விடிய விடிய பூங்கதவைத் திறக்கும் - வித்தை

முடிய முடிய கதகதப்பை மறக்கும்...


விடிய விடிய மெய் விளையாடும் - ஆட்டம்

முடிய முடிய களிப்பின் கை வளைதேடும்...


விடிய விடிய மோதலில் மிகுந்தாடும் - தாகம்

முடிய முடிய காதலும் புகுந்தாடும்...


விடிய விடிய பாதரசம் போல் உருக்கும் - உருகிப்

படியப் படியக் கூடலும் காதல்-ரசமாய் இருக்கும்...


விடிய விடியக் கற்பை அளக்கும் - அளவு கடந்து

முடிய முடிய அதனை முகப் பொற்பும் விளக்கும்...


விடிய விடிய இரவுத் திரையை விலக்கும் - விலக்கி

முடிய முடிய அந்த எல்லையில் போய் கலக்கும்...


விடிய விடிய விளக்கொளியின் விட்டிலாகும் - இரவும்

முடிய முடிய விளக்கம் தேடும் தேகம் கட்டிலாகும்...


விடிய விடிய தடையாகும் உடையாவும் - பொழுது

முடிய முடிய அணிந்தால் கொல்லும் படையாகும்...


விடிய விடிய வளைவுகளை ரசிக்கும் - ரசித்து

முடிய முடிய அந்த வளைவுக்குள் வசிக்கும்...


விடிய விடிய நினைப்பில் தவிக்கும் - ஆவல்

முடிய முடிய அதனை முனைப்பில் குவிக்கும்...


விடிய விடிய நினைத்தால் இனிக்கும் - ஆசை

படியப் படிய சேர்ந்து அணைத்தால் தொனிக்கும்...


விடிய விடிய முந்தியில் மயங்கும் - ரவியும்

படியப் படிய அந்தியில் உணர்வும் இயங்கும்...


விடிய விடிய தேகத்தில் பிறக்கும் - மோகமும்

வடிய வடிய அந்த பாகத்தில் சிறக்கும்...


புலரப் புலரப் பொழுதும் பகையாம் - பருவப்பூ

மலர மலர மாலையில் ஆசையும் மிகையாம்...


புலர புலர மாலை தனை தூரமாக்கும் - இதழ்கள்

உலர உலர கொடுக்கும் முத்தமதை ஈரமாக்கும்...

No comments:

Post a Comment