Tuesday, January 27, 2015

அன்ன நடையா...? அன்னாள் நடையா...?


அவள் நடக்கும் தூரத்தை

அவள் கடக்கும் முன்னே

அன்னமது எட்டி விடும் -

அதன் பின்னால் தான்

அவள் வருவாள்...

அவ்வளவு மென்னடையாள்...

அளந்து வரும் நன்னடையாள்...


அடிமேல் அடியெடுத்து

அன்னமவள் நடக்கும் போது

அசைந்து வரும் தேரும் கூட

அதன் முன்னால் தோற்று விடும்...


தேரியங்கும் தெருவீதியிலே

தெய்வச் சிலையெனவெ அவளும்

தேவதையாக நடந்து வந்தாள் -

தேவலோக அழகையெல்லாம் தன்

திருவடியால் கடந்து வந்தாள்...



பூவுலகம் பொன்னுலகம் எல்லாம்

போலவொரு பேருலகமெனவே

பூவையவள் தன்னுலகம் காட்டி

பின்னலிடை அழகைப் பூட்டி


மேவும் அழகையெல்லாம்

மேலும் படை கூட்டி விழி

தாவும் வழி மீதினிலே அவள்

தரணியையே அளந்து வந்தாள்...



தாரணியாம் ஒரணியாம் சேர்ந்து

தங்கி விட்ட எழிலெல்லாம்

பூரணியாம் கூடியவள் பாதத்தில்

பூச்சூடும் படி நடந்து வந்தாள்...


சீரெழுந்த அழகையெல்லாம்

சிந்தாமல் சிதறாமல் மண்ணில்

பேரழுந்த பெட்டகமாய் அவள்

பொலிவோடு நடந்து வந்தாள்...



இடை நடுவில் இலைமறை காயாக

இலக்கியத்தை மறைத்து வைத்து

மடை நடுவில் வெள்ளம்போலே

மயங்கியவள் நடந்து வந்தாள்...


நிறை குடம் போல நீர் தழும்பாமல்

நிரம்பித் தழும்பும் அழகையெல்லாம்

குறை குடம் போலே காண்போரைக்

கூத்தாட விட்டு நடந்து வந்தாள் ...



இத்தனை அழகையெல்லாம் அவள்

எங்கே ஒளித்தாளோ - என்று நாம்

அத்தனை அழகையெல்லாம் தேடும்படி

அங்கே அசைந்து நடந்து வந்தாள்...


அசைய விட்ட அழகையெல்லாம்

ஆடையிலே மறைத்து வைத்தாலும்

இசைந்து அலுங்கிக் குலுங்கி ஓர்

இன்னிசையாய் நடந்து வந்தாள்...



சாமரங்கள் போலே கைவீசி

சாளரத் தென்றலென அசையும்

பூமரங்கள் போலே அவள்

பூமியிலே நடந்து வந்தாள்...


மான் கொண்ட அழகும் மெல்ல

மருண்டு துள்ளுவதைப் போலத்

தான் கொண்ட அழகும் துள்ள

தேன் குடமாய் நடந்து வந்தாள்...



பின்னல் கொண்ட கூந்தல் அவளின்

பின் அங்கும் இங்கும் ஆடுவதை ஏந்திய

மின்னல் போன்ற இடையும் தனத்தால்

மிரண்டு தள்ளாடும் படி நடந்து வந்தாள் ...


கன்னல் போன்ற வாளிப்பான தன்

கணுக்கால் கொண்டு வாலிபத்துக்கு

தின்னக் கொடுக்கும் இடையினிலே

திரண்ட அழகோடு நடந்து வந்தாள்...



மாதவியின் அழகென்ன - சிலம்பத்தின்

மாற்றுக் குறையாத சலங்கை குலுங்க

மாதேவியவள் ரதி தேவியென ஒளிரும்

மதி மயங்க வீதியிலே நடந்து வந்தாள்...


பூதேவியின் அழகென்ன - உள்வாங்கிய

பூமேனி குலுங்கும் பொன் மேனியிலே

சீதேவி விளங்கும் வண்ணம் பொற்பாதச்

சீரோடும் சிறப்போடும் நடந்து வந்தாள்...



சின்ன இடை குலுங்க

சிருங்கார ரசம் பொங்கி

அன்னாள் மடை தழும்ப

அன்ன நடை விளங்க

என்னே! - நான் மயங்க

எண்ணமும் தான் முயங்க

முன்னே அவள் நடக்க

முனைந்திட்ட கவியும்

பின்னே தொடர்ந்து வந்து

பேருவகைத் தாராதோ!!!



அள்ளித் தெளித்த ரசம்

அகப்பையிலே குடியேறி

துள்ளித் திரிந்து கொஞ்சம்

துவண்டெழுந்து என்னெழுது

கோல் புகுந்து எண்ணம் தான்

கோடிட்ட இடத்திலெல்லாம்

கால் பதியும் சுவடு போலே

கவியாய் வடிந்ததம்மா!!!

No comments:

Post a Comment