Tuesday, January 27, 2015

மிதக்கும் வரை தான் படகு - மிதக்க விட்டே தான் பழகு...



அன்பிற்குரிய மனையாளுக்கு வணக்கம் - உன் மேல்

என்புதோல் கடந்த உள்ளத்தின் இணக்கம் - நீ அன்று

பிறந்த போது எனக்கெனவே பிறந்தாய் - என் மனம்

திறந்த போது உனக்கெனவே புகுந்தாய்...


புகுந்த உள்ளம் தனில் அன்று தொட்டு இன்று வரை

மிகுந்த அன்பால் என்னை திளைக்க செய்தாய் - கரை

காணா கடலில் அக்கறையாய் என்னுள் கலந்து மறை

தோணா வேதமாய் என் வாழ்வை மாற்றினாய்...


மாற்றியது மாலை மட்டுமன்று - எனை இன்றும்

மாற்றுவது உன் சேலை மட்டுமன்று - அன்பு வழி

காட்டியது அதி காலை மட்டுமன்று - நீ என்றும்

காட்டுவது நதி நாளும் சேரும் கடலன்றோ?


நதி நாளும் சேர்ந்த கடல் போலே நீயும் நவ

நிதி யாவும் சேர்ந்த உடலன்றோ பொன்னுடலை

விதி ஆளும் தினம் பார்த்து பூமடியில் அன்று

ரதி யாய் நீயும் அவனியில் அவதரித்தாய்...


அவதரித்தாய் நீயும் அன்று - உன்னை ஈன்றதனால்

அவள் தரித்தாள் தாயாக - சேயாக நீ வளர்ந்த பின்

யுவதியாகி என் மனதில் குடி கொண்டாய் - இன்றோ

அவதிக் குள்ளாகிறது மனது உனைச் சிறிது பிரிந்தால்...


பிரிந்த இதழ்கள் தாம் பிரிந்த உள்ளங்களை இணைக்கும்

விரிந்த இதழ்களைப் போலே நாளும் நறுமணம் வீசி நான்

புரிந்த வரையில் என் மனக் கோட்டையிலே ன்னாட்சியை

தெரிந்த வரையிலே பிடித்தது உனைத் தவிர யாருமுண்டோ...?


வருடம் தோறும் வசந்தம் நாம் வசிக்கும் வாசல் தேடி

நெருடல்கள் ஏற்படுத்தி தருவதோடு நில்லாமல் நாடிய

ஆருடம் தோற்கும் வண்ணம் அமையும் வாழ்விலே

தேரிடம் அமர்ந்த தெய்வமென அவதரித்தாய் அல்லவா...


நாரோடு பூவை போலே நாமும் நட்டு வைத்த பூஞ்செடியின்

வேரோடு நீரைப் போலே கலந்தின்பம் கண்டு மகிழ்ந்து

பாரோடு பகல் மறையும் மீனைபோலவே ஒளி வீச நானன்று

தாரோடு கைப் பிடித்த நாளைத் தான் மறக்க முடியுமா...?


முடியும் என்றே நம் வாழ்வும் தொடங்கி இன்று வரை

விடியும் என்றே நம்பிக்கையுடன் கடந்த நாட்களில்

படியும் அன்பினை எடுத்தியம்பி உள்ளம் நிரம்பி

வடியும் வரை வாழ்வைச் செலுத்துவோம் என்றும்...


என்னவளுக்கு எனை மணந்த

தென்னவளுக்கு புதுமை தந்த

மன்னவனுக்கு பெருமை அளித்த

அன்னவளுக்கு பிறந்த நாள் மிகுந்த

மகிழ்ச்சியைத் தந்திட வேண்டும்...


மிதக்கும் வரை தான் படகு - வெள்ளத்தில்

மிதக்க விட்டே தான் பழகு - உள்ளத்தில்

மிதக்கும் கரையின் முன்பு - என்றும்

மிதக்க தோன்றும் அன்பு...

No comments:

Post a Comment