Friday, March 8, 2013

ஒருகையோசை...

உணர்வுகளில் ஊடுருவும் வலியை

உருவத்தின் தனிப்பட்ட பொலிவை

உள்ளந்தனில் மறைக்கப்பட்ட நலிவே

ஒருகையோசையின்  ஒலியே ஆகும்...



விரலிருந்தும் மீட்டும் வீணையில்லை - முத்துப்

பரலிருந்தும் மோகனவாயின் நகையில்லை - கத்தும்

குயிலிருந்தும் கூவும் அழைப்பில்லை - கொத்தும்

மயிலிருந்தும் தாவும் அணைப்பில்லை...



விளக்கிருந்தும் விழியருகில் ஒளியில்லை - மனதில்

விளக்கமிருந்தும் விரகத்தில் தெளிவில்லை - ஆற்றில்

கொக்கிருந்தும் கொத்திவிட மீனில்லை - எட்டுத்

திக்கிருந்தும் மதியொளி  வீசிட வானில்லை...



பூவிருந்தும் அள்ளிச் சூடிடத் தலையில்லை - மடல்

பூவிரிந்தும் துள்ளி ஆடிடும் நிலையில்லை - உடலில்

நோவிருந்தும் பள்ளி சேர்ந்திடத் தடையில்லை - உள்

நோக்கிருந்தும் எள்ளி நகையாடும் இடையில்லை...



சிலையிருந்தும் செதுக்கும் உளியில்லை - கண்ணில்

சோகம் ததும்பி  வடிக்கும் துளியில்லை - பெண்ணில்

கலையிருந்தும் மயங்கும் வழியில்லை - எண்ணில்

கருத்திருந்தும் இயங்கும் மொழியில்லை...



விதியிருந்தும் சேர்ந்து வாழும் திறனில்லை - மேலும்

விலகிச் சென்றால் வேறேதும் அறமில்லை  - நாளும்

மதியிருந்தும் தேர்ந்து வாழும் பொறுப்பில்லை - அதை 

மனதிலிருந்து சொல்வதற்கும்  மறுப்பில்லை...



விடையிருந்தும் வினவுவதற்கு இடமில்லை - இனி

விடுத்துச் செல்ல வேறெங்கும் தடமில்லை - கையில்

குடையிருந்தும் நனைவதற்கு மழையில்லை -  காலம்

கடந்து நினைப்பதற்கு இதுவும் பிழையில்லை...

No comments:

Post a Comment