Friday, March 8, 2013

பேரின்பமே காதலாகும்...

பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மேல் ஆசை கொண்டு

கண்ணும் காட்சியை கருத்தினில் பதிவு செய்யும் போது

எண்ணம் தலைப்பட்டு ஏக்கமும் ஏற்பட்டு ஆண்மையும்

பெண்மையும் கூடி வாழ முற்படுவதே காதலாகும்...



ஏக்கத்தில் தொடங்கி எதிர்காலமே அவளென நினைந்து

பக்கத்தில் வந்துப் பழகத் துடிக்கும் விழிகளில் புனைந்த

தூக்கத்தை இரவுக்குக் கொடுத்து எண்ணமும் வளர்த்து

அக்கணத்தில் அவளிடத்தில் அடங்குவது காதலாகும்...



விழிகள் வரையும் கோலத்திற்கு விதியின் கோடுகளால் 

வழிகள் எங்கும் புள்ளியிட்டு மதியின் விளையாட்டால்

மொழிகள் கரையும் காலத்திற்குள் ஆசையின் உலகத்தில்

பழிகள் யாவும் பார்க்காமல் தொடர்வது தான் காதலாகும்...



எவ்விடம் எக்குலம் என்று ஏதும் எண்ணாது அக்கணம்

அவ்விடமே சொர்க்கமென நினைந்து உயிர் வளர்க்கும்

எவ்வித உணர்வுகளுக்கும் ஊக்கம் கொடுத்து தொடரும் 

அவ்வித மயக்கத்தில் உள்ளம் நனைவதே காதலாகும்...



காமத்துக்கு முன்தோன்றி பூவாய் மலர்ந்து கனிந்த

யாமத்துக்கு பின்தோன்றும் விடியலைச் சேர்ந்திடும்

ஏமத்துக்கு முன்தோன்றி  துணையாகும் அவளுடைய

நாமத்துக்கு பின்தொடரும் பேரின்பமே காதலாகும்...



நாசியில் சுவாசமாய் நாளெல்லாம் ஒற்றுமையாய்

ஆசியில் தெய்வமாய் ஆதார தீபமாய் ஒளிவீசும்

காசியில் கங்கையாய் காதலெனும் வெள்ளமாய்

மாசியில் மகத்துவம் பெற்றிடவே வாழ்த்துக்கள்...



 
காதலைப் பற்றிய அறிவியலின் கூற்று:


ஆதியில் தோன்றிய காதலாயினும் - பின்

பாதியில் தோன்றிய காதலாயினும் - முன்

சாதியை மறந்த காதலாயினும் - எதுவும்

வேதியல் மாற்றத்தால் விளைவதே ஆகும்.



கயல்விழியின் ஈர்ப்பால் தொடரும் ஆசையும் 

மையல்வழியின் சேர்ப்பால் பழகும் ஆர்வத்தில் 

முயல்கையில் தோன்றுகின்ற காதலாயினும்

இயற்பியல் மாற்றத்தின் விளைவே ஆகும்...



விலங்கியலாய்த் தோன்றிய மனிதனும் தன்னுடைய

கலங்கியலாய் இருந்த எண்ணமும் வெளிப்பட்டுத்

துலங்கிடவே தனக்கொரு துணைதேடி அலைந்து

நலங்கெடாத நங்கையிடம் காதல் கொண்டான்...

No comments:

Post a Comment