Friday, March 8, 2013

நெரிஞ்சிப் பூவாய் நெருங்கும் கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     


செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...

No comments:

Post a Comment