Tuesday, March 6, 2012

கவித் துளிகள்...

நான் எழுதிய கவித் துளிகள்:
 
 
முத்தம்:
 
அன்பே!
 
உன் உதட்டு வரியின்
 
பிழைப் போக்க  
 
என் உதட்டு வரி கொண்டு
 
பொருத்தி
 
நான் திருத்தி எழுதும்
 
கவியே முத்தம்...
 
முத்தத்திலே சத்தமில்லாமல் 
 
இருவரின் பிழைகளும்
 
திருத்தப் படுகின்றன...
 
இறைவன் செய்த தவறை
 
இதழ் மூடியே திருத்துவோம்...
 
 
 
ஆசை:
 
அன்பே!
 
நான்
 
களத்து மேட்டிலோ  
 
இல்லையெனில்
 
உன் கழுத்து மேட்டிலோ  
 
தான் சாக வேண்டும்...
 
 
 
காதல்:
 
அன்பே!
 
என்றும் இளமையோடு
 
இருக்கும் இமைமுடிகளைப்
 
போலவே நம் காதலும்
 
உயிருள்ளவரை
 
நரையில்லாமல்
 
உணர்வுகளின்
 
கரை காண வேண்டும்...
 
 
 
உறவுகள்:
 
உலகம் எனும் புத்தகத்தின்
 
பிரிக்க முடியாத பக்கங்களில்
 
உணர்வுகளால் பிரித்து
 
எழுதப் படுகிறது உறவுகள்...
 
 
 
நட்பு:
 
காலம் கடந்து நிற்கும்
 
மாற்றத்தைப் போலவே
 
ஆலம் விழுதெனவே 
 
அருகி நிற்கும்
 
மரத்தை தாங்கியே
 
விருட்சமாய் நிழல் தந்து
 
உரத்தை உள்ளமர்த்தி 
 
அரும்பாகி கனியாவது
 
நட்பாகும்...
 
 
 
திருமணம்:
 
உருவம் இரண்டாகி
 
உள்ளம் ஒன்றாகவே  
 
பருவம் திரண்டதற்கு
 
பலர்கூடி நடத்தும்
 
ஒருவகை ஒப்பந்தமே
 
திருமணமாகும்...
 
 
 
முதல் இரவு:
 
இளமையில் பூத்த 
 
இனிமையை இருவர்கூடி
 
இரவினில் விடியும்வரை
 
தனிமையில் ஒருவர்மாறி
 
ஒருவர் தேடி பருவத்தின்
 
கேள்விக்கு விடை காண்பதே
 
முதல் இரவாகும்...
 
 
 
முதல் இரவு:
 
யாமம் தலைப் பிடிக்க நடுச்  
 
சாமம் கால் பிடித்து நடக்கும்
 
போராட்டத்திலே பரிமாறும்
 
ஓராட்டத்திலே விடியும் போது
 
நெற்றியின் விளிம்பிலே
 
வெற்றியைத் தேடுவது
 
முதல் இரவாகும்...
 
 
 
பாசம்:
 
கதவில்லா உள்ளத்தின் 
 
வாசலிலே காலம் 
 
வரைகின்ற அற்புதக் 
 
கோலமே பாசமாகும்... 
 
அவன் வரைந்தக் கோலத்தை
 
அழிக்க முடியாதெனினும்  
 
தாண்டிச் செல்லலாம்...
 
இறைவன்
 
எங்கெங்கோ புள்ளிகளை
 
வைக்கிறான்...
 
கோடுகளை உணர்வுகளைக் 
 
கொண்டே வரைகின்றான்...
 
 
 
உணர்வுகள்:
 
உள்ளம் ஒளிந்து கொண்டு  
 
உடல்கூட்டில் உலவுகின்ற
 
உருவமில்லாமல்   
 
உயிரோடு சேர்ந்து நடத்தும்
 
உன்னத நாடகமே
 
உணர்வுகளாகும்...
 
 
 
உணர்வுகள்:
 
புத்திக்கும் உள்ளத்தின் 
 
யுக்திக்கும் நடக்கும் 
 
ஒருவிதப் போராட்டமே 
 
உணர்வுகளாகும்... 
 
 
 
கனவுகள்:
 
கண்ணாடியின் பின்னால்
 
நிகழ்வதைப் போலவே
 
கண்களுக்கு பின்னால்
 
நிகழும் அற்புதமே
 
கனவுகளாகும்...
 
 
 
கனவுகள்:
 
உள்ளம் ஒளித்த ஆசைகளை
 
உணர்வுகள் உறக்கத்தின் போது
 
தேடுவதே கனவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் பழகிய
 
உணர்வுகளை ஒத்திகைப்
 
பார்க்கும் நிலையே
 
நினைவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் அசைபோடும்   
 
உன்னத உணர்வுகளின்  
 
ஈர்ப்பு விசையில் 
 
காலம் குவிக்கின்ற 
 
மாற்றமே நினைவுகளாகும்...  
 
 
 
பசி:
 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
 
இடையே நடக்கின்ற உணவுப்  
 
போராட்டமே பசியாகும்...
 
 
உணவுக்கும் உதட்டுக்கும்
 
இடையே நடக்கின்ற உணர்வுப்
 
போராட்டமே பசியாகும்...
 
 
 
வலி:
 
பிறந்தது முதல் மரணம் வரை
 
உணர்வுகளின் எதிரொலியே வலியாகும்...
 
 
உயிருள்ள நிலையையும்
 
உணர்வுகளின் அலையையும் 
 
முடிச்சுப் போடுவது 
 
வலியாகும்... 
 
 
உணர்வுகளின் தடுமாற்றத்திலே
 
உடல் கொள்ளும் ஒருமாற்றமே
 
வலியாகும்...
 
 
 
கண்ணீர்:
 
கண்களின் வழியே இறங்கும்
 
காட்சியின் ஓலமே கண்ணீராகும்...
 
 
காலத்தின் அவல நிலையைக்
 
கழுவுவதற்கு இறைவன் அளித்த
 
நன்கொடையே கண்ணீராகும்...
 
 
உள்ளம் வடிக்கின்ற துன்பமும் 
 
ஊற்றடுப்பது கண்களின் கண்ணீராகும்... 
 
 
 
இன்பம்:
 
நுகர்ச்சிக்கு கிடைக்கும்
 
புகழ்ச்சியே இன்பமாகும்...
 
 
புகழ்ச்சியை அழைக்கும்
 
நுகர்ச்சியே இன்பமாகும்...
 
 
உள்ளம் உணர்வுகளை இழுத்து
 
உள்ளுக்குள்ளே விரிவது தான்
 
இன்பமாகும்...
 
 
 
பெண்மை:
 
மெய்யுண்ட உணர்வுகளிலும் - அகப்
 
பையுண்ட உதிரத்திலும்
 
பெண்மைதான் எச்சமாகும்...
 
 
பருவத்தின் மேன்மையளக்க 
 
உடல்வழியே உணர்வுகளும் 
 
உருவத்தின் துணைகொண்டு   
 
மடல்வழியே எழுதும் உதிரமே  
 
பெண்மையாகும்...
 
 
 
தாய்மை:
 
பெண்மைக்கு பெருமிதம் கொடுக்க
 
உண்மை எய்தும் ஒரு வரம் தான்
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையாலே எழுதப் படுகின்ற
 
உறவுகளின் இறையாண்மையே
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையின் உணர்வுகளுக்கு  
 
உறவு அளிக்கும் ஒரு வடிவமே  
 
தாய்மையாகும்...

No comments:

Post a Comment