Wednesday, March 7, 2012

இரவின் வெளிச்சம்...

உதட்டின் வழி உன்னதங்கள் பல காட்டி

ஊறும் மதுவில் உள்ளத்தைக் கரைத்துப்  

பிதற்றும் விழி  முன்னழகினைக் கூட்டிப் 

பெண்மையின் பின்னழைக்கும் இரவு...





வரவைத் தேடித்தன் சிறகை விரிக்குமதன்  

வனப்பை நாடித்தான்  உறவும் சிரிக்குமதன்     

இரவைத்  தேடித்தன் நிழலைப் பிரிக்குமதன்

இன்பத்தில் சேவையதன் வெளிச்சம்...





அரவைத் தீண்டிப் பிழைத்தவர் சிலரே - பூவையின்

அழகைத் தாண்டி சளைத்தவர் இலரே - பாவையின் 

உறவைத் தீண்டி அழைத்தவர் உளரே - சேவையின்

உலகைத் தாண்டி சலித்தவர் இலரே இரவில்...





இலைமறைக் காயென ஒளித்துத் தன்

இடையசைந்தாடும் அழகும் நெளிந்து 

நிலைமறந்தாடும்  இனிமையில் கனிந்து

நினைவுகளை இழுக்கும் இரவு...





உள்ளத்தை உணர்வுக்குள் ஒளித்து அதன்வழி

உலகுக்குத் தன்னழகைக் காட்டும்  உடைவழி

கள்ளத்தைக் கூட்டும் நடனத்தில் கடைவிழிக்

கச்சேரியும் நடக்கும் இரவின் வெளிச்சத்தில்...





மதுவும் மங்கையும் பருகுவதால் கூடும்

மயக்கமும் நெஞ்சை உருக்குவதால் நாடும்

எதுவும் எங்கேயும்  பெருகித் தோற்று விடும்

இயக்கத்தை அழைக்கும்  இரவின் வெளிச்சம்...





அங்கம் தழுவிய ஆடையென அவளிடைச்

சங்கம் தழுவிடத் துடிக்கும் ஆசையும் மதுச்

சாரம் தழுவியே மலர்ந்த பெண்மையின் இதழ்

ஓரம் தழுவிடத் துடித்திடும் இரவின் வெளிச்சம்...






காணக் கிடைக்காத அழகையள்ளிச் சூடி நடைகூட்டிக்

கடைவிரித்துக் கட்டுடலில் பூந்துகிலின் எடைகுறைத்துப்   

பேணக் கிடைக்காத பேரழகும் கையேந்திப் படைதிரட்டிப் 

பேரின்ப எல்லைக்கே அழைக்கும் இரவின் வெளிச்சம்...

 



தொட்டுவிடும் தூரத்தில் அழகெழுந்து  நடனமாடித்

தூதுவிடும் நேரத்தில் பழகத் துடிக்கும் ஆசையும்

மட்டுபடாமல் மதுவோடு கலந்து உடன் புகுந்தாடி

மாதுவிடும் அழைப்புதான் இரவின் வெளிச்சம்...





சாட்டையிலா  பம்பரம் போல் சுழன்றாடும் பாவையும்

சாத்திரத்தை மூடி மறைக்கும் இரவின் வெளிச்சத்தின்

ஓட்டையிலே ஒழுகும் மதுக்கிண்ணத்  தேவையிலே

ஓரம் ஒதுங்கும் ஈரம் ததும்பும்  இதழின் ஓர் மயக்கம்...





தின்பண்டம் மட்டுமே வேறு - உற்று நோக்கினால்

ஊன்கொண்ட பிண்டம் யாவுமே ஒன்று தான் உலகிலே

வான்கொண்ட நிலவு என்றுமே நின்று தான் மனதிலே 

நான்கண்ட நினைவில் தோன்றியதும் அன்று தான்...





நாவில் மதுவின் கசப்பும்  உண்டு

நடனத்தில் நங்கையின் பசப்பும் கண்டு

பூவில் வழியும் தேனாய் உருண்டு

பூவனத்தில் தவறிய நானும் மருண்டு

தீவில் திரண்ட வெள்ளத்தின் நடுவில்

தீஞ்சுவைத் தேடும் இரவின் வெளிச்சம்...


No comments:

Post a Comment