Tuesday, March 6, 2012

இலக்கியத் தோழி...

பிரிவின் ஆற்றாமையால் வருந்தும் தலைவிக்கு

பேருதவியாகத் தோழியவள் மருந்தாகவும் மாறிப்

பரிதவிக்கும் உள்ளத்திற்கு விளக்கம் பலவும் கூறிப்

பண்படுத்துபவளே   தமிழ் இலக்கியத்தின் தோழி...



எண்ணெய் முடியும் போது எரிகின்ற விளக்கிற்குத் தன்

எண்ணங்களையும் தலைவனவன் பிரிந்த நோக்கத்தையும்

எண்ணெய்யாக வார்த்து  அணைகின்ற இளமைக்கு முன்

எண்ணிய விடியலை உணர்த்திடுவாள் தோழியவள்...



பெண்மைக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியை

கண்ணுக்கும் மை தீட்டும் கோலுக்கும்  உள்ளதுபோலே

அண்மைக்கும் நன்மைக்கும் தோழியும் விளக்குவாள்

மண்ணுக்கும் மழை கொட்டும் பருவம் வருமென்று... 



இலையுதிரும் காலம் போலே தலைவனின் பிரிவாலே தன்

நிலையுதிர்ந்த கோலம் கொண்ட தலைவியைப் பரிவோடு

அலையுரசும் கரைபோலே தன்னுடைய அனுபவத்தின்

நிலையுரசும் பேச்சாலே ஆறுதல் அளிப்பாள்  தோழியவள்...



மீட்டிய வீணையை மறுமடியும் மீட்டவே இவ்விடம் முன்பு

கூட்டிய ராகத்தின் இனிமையாலே நாளை அவ்விடம் விட்டு

ஈட்டிய பொருள் போதுமென தலைவியைத் தேடியே அன்பு

காட்டிய பாதையை வந்தடைவான் என்பாள் தோழியும்...



மஞ்சள் பூசி மேனியின் கொதிப்பைத் தலைவியவள் 

கொஞ்சம் மறைத்தாலும் எதிர்ப்பையும் மீறியங்கே 

எஞ்சி நிற்கும் உணர்வுகளின் மதிப்பை தனிமையின்

நெஞ்சில் அடைத்தாலும் அறிவாள்  இலக்கியத் தோழி...

No comments:

Post a Comment