Tuesday, March 6, 2012

பெண்மையின் துடிப்பு...

வீடு வாசல் விட்டு  திரை கடல் ஓடி திரவியம்

தேடுவதற்காக எத்தனையோ மனிதர்கள் காய்ந்த

மரங்களைப் போலவே காலத்தை கடத்துகின்றனர்

ஈரமில்லாமல் உணர்வுகளை உலரவிட்டு கொண்டு . . .   


உலரப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்காக 

உதடுகளை ஈரப்படுத்தும் எத்தனையோ மனிதர்கள் . . .



கணவனை நினைத்து மனைவியின் துடிப்பு :


கண்மை உலர்வதைக் கண்டு  சொல்லும் என்கணவா

பெண்மை உலர்வதை அறியலையோ ?


உண்மை உறங்குவதை நீ அறிவாய்  - ஆனால் என் 

உணர்வுகள் உறங்காததை அறிவாயோ ?


உடமைக்காகவேச் சென்று இருக்கிறாய் - நானும் அந்த

கடமைக்காகவே காத்து இருக்கிறேன் . . .   



பெண்மையின் துடிப்பு இப்படி :


நான் அணிந்து  இருப்பது  அணிகலன்களா?

இல்லை அணிகாலன்களா? 


புருவத்தின் மத்தியில் அணிகின்ற பொட்டு - நீ எந்த

துருவத்தில் இருந்தாலும் உனை  நினைப்பதற்குத் தானோ ?


தொங்கி கொண்டிருக்கும்  காதணியும் கூட தலையசைவில்

ஏங்கிக் கொண்டிருக்கும் என் காதலை ஞாபகப்படுத்துகிறதன்றோ ?


சத்தமிடும் வளையலும் கூட இரவு நேரங்களில் என்னோடு

யுத்தமிடத் தொடங்குகின்றன  நான் கொண்ட மையலோடு . . .


உன் உதடுகள்  பேசும் விவேகத்தின் முன்னால்

என் கொலுசுகளின் அசைவுகள் கூட மௌனமாகின்றன . . .


சில நேரங்களில் வீரத்தோடு பேசுகின்ற  வார்த்தைகள் கூட

விவேகத்தின் முன்னால் தோற்று விடுகின்றன . . .


கூடலின் போது அழிந்த பொட்டின் நெளிந்த அழகு

தேடலின் போது கிடைப்பதில்லையே -  நீ எந்த


விழியில் எடுத்துச் சென்றாய் என்கணவா - நான் அந்த

வழியை நினைத்துக் கொண்டு இருப்பது தான் என் கனவா ?



என் உடலின் பசலை நிறம் மாறுவதற்காகவே 

நான் தினமும் மஞ்சள் குளிக்கின்றேன் . . .



குளித்தபின் தோன்றும் வெப்பத்தின் உணர்வை நீ

உதிர்க்கும் வார்த்தையிலே உணர்ந்து கொள்ளவா என்கணவா ?

  -   இல்லை  - 

களித்தபின் தோன்றும் வெப்பத்தின் நிலையை நான்

குளிக்கும் போது நினைப்பது தான் என் கனவா ?


கண்ணாடி கூட கேலி செய்கின்றன என் உருவத்தை - உன்

முன்னாடி நான் கொண்ட  உவகை எங்கே என்று . . .

No comments:

Post a Comment