Tuesday, March 6, 2012

மறைபொருள்...

அதனுள்ளே மறைந்த பொருளைத் தேடுவதிலும்

அதையடைய நிறைந்த அருளால் கூடுவதிலும்

இதமாகவே வாழும் தருணத்தில் ஆடுவதிலும்

இசைந்த மனது உணர்வுகளை நாடுகின்றது...



வேதங்களை விரும்பிக் கற்றவனும் தனக்கு

வேண்டியதை அடைய முற்பட்டாலும் கூட 

பாதங்களின் திருப்பமான பயணம்தனை

பார்த்து அறிந்திடும் வழியுண்டோ பூமியில்...




வெற்று விளக்கிலே விடும் எண்ணையும் நீயாக

ஏற்றி வைத்தாலொழிய எரிவதில்லை அதுபோல  

கற்று விளக்கும் பெண்ணையும் இலக்கியத்தோடு

உற்று நோக்கினாலே விளங்கும் எல்லாம்...




நெற்றி வகிடு பிரியும் அந்த நேர்கோட்டினைப்

பற்றி விட விரியும் ஆசையின் ஓர்கோட்டிலே

சுற்றித் திரியும் எண்ணங்களின் வழிபாட்டிலே

முற்றும் புரியும் மங்கையவள்  உடன்பாட்டிலே...



காட்டுக்குள் ஒளிந்த பூவைக் கண்டுத் தேனைக்

கூட்டுக்குள் ஒளித்த தேனீயாக மாறி   நீயும்

ஏட்டுக்குள் ஒளித்த அழகைக் கண்டுத் தேகக்

கட்டுக்குள்  ஒளிந்தப் பூவைக் கூட வேண்டும்...



இருபொருளாய் சங்கமமாகும் உயிர் மெய்யோடு

ஒருபொருளாய் இருந்த போதிலும் கைக்கொண்டு 

உருபொருளை   உணர்ந்து மெய்யோடு உயிராகும்

கருபொருளை உவகையின் மறைபொருள் எனலாம்...



எந்த மறை படித்தாலும் அழகை அருகில் கண்டு

இந்த முறை போதாது என்றே தான் மனம் நாடி

வந்த வழி பழகும் விருப்பம் மிகவும் கொண்டு

அந்த விழி தேடச்சொல்லும் மறைபொருளை...

No comments:

Post a Comment