Thursday, March 8, 2012

சத்திரம் பேசுதடி...

ஆயிரம் சுற்றுலாவுக்கு சத்திரம் ஈடாகுமோ?

ஆயினும் சுற்றுமென் கால்களும் ஏடாகுமோ?

பூவையர் சூடுகின்ற பூக்களும் காடாகுமோ?

தேவியர் கூடுகின்ற மன்மதக் கோடாகுமோ? 



கோடு - மலை, நீர்க்கரை, வரம்பு, வளைவு, வரி சூழ்ந்தவிடம் 


பலதரப்பட்ட பாவையரும் தலையில் பூக்களின்

கலவையைச் சோலையென சூடிக் கொண்டு

உலவும் அழகிலே அவைசுமந்த பாதங்களும்

சலதரங்கம் வாசிக்கின்றதே அந்த வீதிகளில்...


சலதரங்கம் - பலவகைக் கிண்ணங்களில் பல அளவுகளில்

நீர்விட்டு சுருதி அமைத்துக் கொண்டு சிறு கழியால் தட்டி

வாசிக்கும் ஒரு வகை வாத்தியம்... 



விதியை நினைத்து புலம்புவதால் நீயும் சத்திரத்து

வீதிதனில் வலம் வந்தால் அலங்காரப் பாவையுன்

மதியை மயக்கும் எழில் கொண்டு தேவையென்று 

மீதியங்கே அழைத்திடவுன் மனதும் துடிக்குமே...



பூக்களைப் போன்ற மங்கையின் சுவடைத் தேடியே

ஈக்களென பறந்திட ஆசையும் அந்த வீதியிலே  நீர்த்

தேக்கத்தைச் சுற்றி வீசும் தென்றலுடன் மனதிலொரு

தாக்கத்தை உண்டாக்குமே தொடர்ந்து சென்றால்...



சன்னமிடும் மெல்லிய வாய்ப் புன்னகையில்

கன்னமிடும் புல்லிதழ் வாய்த் தேனெடுக்க

முன்னமிடும் உள்ளிதழ்  ஊறும் சுவையில்  

கன்னலிடும் சாறும் என்னவென்பேன்...

 
சன்னம் - சிற்றரும்பு, சிறு முத்து, மென்மை, நேர்த்தி, மறைக்கப்பட்டது ,  கன்னல் - கரும்பு

No comments:

Post a Comment