Tuesday, March 6, 2012

பெண்ணின் பருவங்கள்...

போதாகி பொழுதாகி பூவையும் மலரெனும்

போதாகி அங்கம் கிளர்ந்தெழுந்து பொங்கும்

கட்டுக்குள் அடங்காத இன்பத்தை இதழெனும்

மொட்டுக்குள் அடக்கி வளரும் உருவமெனும் 

மெட்டுக்குள் அடங்காத தேகம் இசைக்கும்

தட்டுக்குள் அடங்கும் ஏழு வகைப் பருவம்...

போது - மலரத்துடிக்கும் மொட்டு




காமத்துக்கு உருவம் எடுத்தது போலே கதவடைக்கும்

யாமத்துக்கு பருவமங்கே கடைவிரித்து இதழணைக்கும்     

போகத்துக்கு இடை வழங்கும் அட்சயப் பாத்திரமெனும்  

பாகத்துக்கும் தடை சொல்லும் சாத்திரமுண்டோ?

போகம் - இன்பம், பாகம் - பங்கு, யாமம் - நள்ளிரவு,



மெய்க்குள்ளடங்கும்  பருவங்கள் ஏழுவகையாய் உருக்கொண்டு

கைக்குள்ளடங்கா ஆசையும் ஏழுஸ்வரத்தின் பொருள்கொண்டு

பொய்க்குள்ளடங்கும்  சுவையின்பச்சுதி கூட்டிக் கருக்கொண்டு

பைக்குள்ளடங்கும் பாவையின் பண்பட்ட பெண்மையாகும்...   




ஒன்றிரண்டாய் உயிரும் உடலும் வளர்ந்து துணையாகும் 

நன்றிரண்டாய் உருவமும் பருவமும் காமக் கணையாகும்

என்றிரண்டாய் இன்பமும் இளமையும் போருக்  கிணையாகும்    

அன்றிரண்டாய் தழுவி நிற்கும் மங்கையின் அணைப்பாகும்...  




வடிக்காத செந்தேனைத் தேடிய வண்டும் வந்து

குடிக்காத பூவில் ஆடிய இளமை கண்டும் முந்திப்

படிக்காத கவியைப் போலச்சுவை உண்டுப் பந்தி

முடிக்காத பெண்மையின் பாக்கியமே பருவம்...




பேதைப் பாவம் -  ஏமம் தெரியாப் பருவம்...

பெதும்பைப் பருவம் - யாமம் புரியாப் பருவம்...

மங்கைப் பருவம் - வளமை அறியாப் பருவம்...

மடந்தை பருவம் - இளமை முறியாப் பருவம்...

அரிவைப் பருவம் -  தனிமை தழுவாப் பருவம்...

தெரிவைப் பருவம் - இனிமை நழுவாப் பருவம்...

பேரிளம்பெண் பருவம் - தலைமை வழுவாப் பருவம்...

 
ஏமம் - பாதுகாப்பு, யாமம் - நள்ளிரவு, வழுவாத - தப்பாத.

No comments:

Post a Comment