Tuesday, March 13, 2012

மணமேடை...

நான் நாயகனாக நிற்காத மேடை

ரசிகனாய், வாசகனாய் நின்ற மேடை

பலர்கூடி ஆசியுடன் விளங்கிய மேடை

இருவர்கூடி வாழ நேசம் வழங்கிய மேடை



கனவும் நினைவாக உலகம் கொடுத்த மேடை

களவும் கற்று மறக்க கற்றுக் கொடுத்த மேடை

மனமகிழ ஆசையின் ஆரம் தொடுத்த மேடை 

மஞ்சத்தில் கொஞ்ச நெஞ்சம் தொடுத்த மேடை



பாவாடைப் பருவத்திற்கும் பூவாடை கொடுத்த மேடை

தாவணியின் உருவத்திற்கும் சேலைத் தொடுத்த மேடை

சேலையின் தலைப்பிற்கும் ஆவலைக் கொடுத்த மேடை

சேர்ந்து வரும் கலைகளுக்கும் அவளைத் தொடுத்த மேடை...




மேதைகள் முட்டாளாவதும்

முட்டாள்கள் மேதையாவதும்

இந்த மேடையில் தான்...


பேதைகள் ஞானியாவதும்

பாதைதேடி  தேனீயாவதும்  

இந்த மேடையில் தான்...



சேவைகள் தேவையாவதும்

தேவைகள் சேவையாவதும் 

இந்த மேடையில் தான்...



ஆய்வும் ஓய்வு தேடுவதும்

ஓய்வில் ஆய்வு தேடுவதும்

இந்த மேடையால் தான்...



சேலைகள் சோலையாவதும்  

மாலைகள் வேலையாவதும்

இந்த மேடையில் தான்...



கனவுகள் நினைவாவதும்

நினைவுகள் கனவாவதும்  

இந்த மேடையால் தான்...



ஒருமை பெருமையாவதும்

பெருமை ஒருமையாவதும்

இந்த மேடையால் தான்...



மனசாட்சி காட்சியாவதும்

மணக்காட்சி சாட்சியாவதும்

இந்த மேடையில் தான்...



விதியும் மதியளப்பதும்    

மதியும் விதியளப்பதும் 

இந்த மேடையில் தான்...



மணமகள் படியளப்பதும்

மணமகன் மடியளப்பதும் 

இந்த மேடையால் தான்...



ஆடை அலங்காரமாய் கட்டி வந்த மேடை

ஆசை இலங்காரமாய் ஒட்டி வந்த வாடை

கூடைப் பூக்கோலமாய் கொட்டி அளக்கும் பாவை

கூடும்  மாக்கோலமாய் மெட்டி விளக்கும் சேவை...



இலங்காரமாய் - இலங்கு + ஆரமாய் (விளங்கும் ஆரமாய்)  

No comments:

Post a Comment