Tuesday, June 16, 2020

இயற்கைப் பேரிடர்

இயற்கைப் பேரிடர் வருவது எதனாலோ?

செயற்கைப் பேரிடம் பூமியில் கொண்டதாலோ!



பாவலர் ஆயிரம் புடைசூழ ஆண்டது

நாவலன் தீவு எனும் ஓர் கண்டம்...

ஆம்

அதுவும் மறைந்தது எதனாலோ?



முறையற்ற உறவாலே

முடிந்தது ஓர் சகாப்தம்...

கரையற்ற கடலாகக்

காணாமல் போனதொரு கண்டம்...

லெமூரியா, நாக நாடு எனும் பேர் கொண்டது

சுமேரியாவுக்கு முன் தோன்றிய கண்டம்...

அமேரிக்கா முதல் இங்கிலாந்து வரை அறிஞர்கள்

ஆராய்ந்து சொன்னது எல்லாம் பொய்யன்றோ?




பனிக்காலம் முடிந்ததன் பூமியில்

தனிக்காலம் தோன்றியதன் விளைவாக...

கனிக்காலம் தோன்றிய பூமியில் பாவையும்

தனிக்கோலம் கொண்டதன் விளைவாக...



கற்காலம் தோன்றிய பூமியில் மக்களின்

சொற்காலம் ஊன்றியதன் வினையாக...

பொற்கோலம் கொண்ட பூமி மாறித்

தற்காலம் தோன்றியதன் வினையாக...



புனிதப் படுத்திக் கொள்கிறது பூமியும்

பஞ்சபூதத்தின் பேராற்றலாலே!

வனிதைப் பேரழகை மேலும் கீழும் காண

வஞ்சிக்க வளைத்தது நீராற்றலாலே!



ஆயிரம் காரணம் இருந்தாலும் நான் மொழிவேன்

ஆயினும் வேறு சில காரணங்கள் உண்டல்லோ...


மூன்றில் ஒருபங்கு தான் நிலம் - அது

தோன்றில் மறுபங்கு எல்லாம் நீர் தான்...

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அதுவே

தோன்றில் மறுபங்கில் விளங்கும் உண்மை தான்...





சுனாமி வருவதன் காரணம்:

கன்னியவள் கடற்கரைக்கு சென்றாளே!

பின்னலிட்ட பருவம் தாங்கி நின்றாளே!



கால் நனைத்த அலையானது அவளிடை

மேல் நனைக்க நினைந்தே விரைந்தது...


சுனாமியெனும் பேரலையாய் எமனுக்கு

பினாமியெனும் ஓரலையாய் எழுந்தது...


இடைவெளியில் எத்தனித்த விதியானது

இடைவழியைத் தான் தேடி நிறைந்தது...


கடைவிழியாள் உச்சம் தொடத்தானே

உடைவழியே உயர்ந்தெழுந்து உட்புகுந்தது...


பள்ளம் பார்த்து தானே பாயுமந்த விதியை

வெள்ளமெனும் மதியாலே உரைத்தது...


ததும்பும் இளமை கண்ட அலையானது

வெதும்பிக் கரையில் நுரையாக உமிழ்ந்தது...


கள்ளம் இல்லா மனிதரையும் சேர்த்தே

உள்ளம் இல்லா கடலும் காவு கொண்டது...




பெருமழை வருவதன் காரணம்:

குடைபிடித்துப் போகின்ற பெண்மயில்

உடைபிடிக்க நினைத்தது மழைத்துளி...


நடைபயின்று போகின்ற அன்னமவள்

இடைபயில நினைத்து மழைத்துளி...


கள்ளிடம் இல்லாச் சுவையைப் பேரின்பம்

கொள்ளிடத்தில் காண நினைத்தது மழைத்துளி...


மலையிடம் காணா எழிலைத் தேவதையவள்

முலையிடம் காணத் துடித்தது மழைத்துளி...


புல்லிடம் காணா பசுமையைப் பெண்மையின்

உள்ளிடம் காணத் துடித்தது மழைத்துளி...


ஓடையில் பாய்ந்த வெள்ளமும் மங்கையின்

ஆடையில் பாயத் துடித்தது மழைத்துளி...


தேடையில் ஏதோ ஒன்று மறைந்ததை

சாடையில் கண்டு கொண்டது மழைத்துளி...


மழைத்துளி ஆசையில் பெருக்கெடுத்து

பிழைகொண்டு உருக்கலைத்து சென்றது...




பூகம்பம் வருவதன் காரணம்:

கன்னிமயில் கால் நடந்த அழகைக்

காண ஓர் நாள் பூமியும் நினைத்தது...


அனிச்சமலர் மெல்லிய பாதம் தழுவத்

தொனித்த மண்ணதைக் காணப் பணிந்தது...


பாதமே இத்தனை மென்மையென்றே பூமிப்

பாதாளமும் அதன் ஆழம் காண துணிந்தது...


வேதமே பொய்யாய் போன உலகிலே அவள்

பாதமே மெய்யெனும் சோதனையில் பிளந்தது...


பூவிலும் சிறந்த அழகைத் தேடும் தேகம்தனை

பூமியும் ஆவலில் ஆராய நினைத்தே அளந்தது...


முன் தூக்கிய கலையின் எழில் காணப் பூமியும்

பின் தாக்கிய நிலையில் மெதுவாய் விரிந்தது...


பூவையின் மேல் லோகம் காணும் நோக்கில்

பூலோகம் விரிந்ததில் கீழ் லோகம் தெரிந்தது...


"பூ" கம்பம் என்றே பொன்மேனியைத் தழுவிடப்

பூகம்பமாய் வடிவெடுத்து ஆட்கொண்டது புரிந்தது...




புயல் வருவதன் காரணம்:

கயல்விழியாள் கடைக்கண் நோக்கிடத் தென்றல்

புயல்வடிவில் தடையின்றிப் புறப்பட்டுச் சென்றது...


ஊற்றெடுக்கும் பெண்மையின் உள்ளழகை காணக்

காற்றடித்து அண்மையில் அகப்பட்டுக் கொண்டது...


சில்லென வீசும் குளிர்வாடைக் காற்றாய் உருமாறி

கொல்லென கொல்லாமல் குறைபட்டுக் கொண்டது...


நில்லென என்றால் நில்லாமல் மேலும் மெருகேறி

புல்லென மேனி சிலிர்த்திட சிறைபட்டுக் கொண்டது...


குனிந்து இருக்கும் ஓரழகைக் காணக் காற்றும்

கனிந்துருகிக் களித்திடத் தேகத்திடைப் புகுந்தது...


அணிந்த ஆடைக்குள்ளேத் தோன்றும் வெப்பம்

தணிக்கத் தாகம் கொண்டு தென்றலாய் புகுந்தது...


சுவாசம் புகுந்து இதயம் தொட்ட காற்றும் அவளின்

சுகவாசம் காணும் ஆவலில் அவ்விடம் புகுந்தது...


இவ்விதம் எல்லா அழகைக் கண்ட தென்றலும்

அவ்விதம் இல்லா ஆசையில் புயலென மிகுந்தது...




நெருப்பு வருவதன் (எரிமலை வெடிப்பதின்) காரணம்: 


எத்தனை நாள் உள்ளிருந்த வெப்பம் ஓர் நாளில்

அத்தனை வேகத்துடன் வெளியாவதும் ஏனோ?


பஞ்சணை துயில்கொள்ளும் பேரழகு மங்கையின்

நெஞ்சினில் காதல் கொள்ள வெளியாவது தானோ...


அஞ்சனம் தீட்டிய விழியோடு உறவாட நெருப்பும்

சஞ்சலம் கொண்டு சதிராடி வெளியாவதும் ஏனோ?


புகையும் நெருப்பும் அன்னவள் கட்டழகை ஆராயும்

வகையில் விருப்பும் புதிராக வெளியாவது தானோ...


சிகை முதல் அடிவரை தழுவிட நெருப்பும் பொன்

நகை மின்னும் நிறத்தில் வெளியாவதும் ஏனோ?


பருவத்தின் அழகை மேலும் உருக்கி பேரழகாக்க

உருகும் பதத்தில் நெருப்பும் வெளியாவது தானோ...


பூமடியின் வெப்பம் பருவமடைந்து உடைபட்டு

பூவையின் நுட்பம் காண வெளியாவதும் ஏனோ?


பின்னல் பூங்கொடியாள் மின்னல் கொடியிடையாள்

கன்னித்திரை விலக்கிடவே வெளியாவது தானோ...




ஆகாயம் மாற்றம் கொள்வதன் காரணம்:

மப்பும் மந்தாரம் கொண்ட மங்கை நல்லாள் -

தப்பும் தவறும் புரியத் தலைப்பட்டது ஆகாயம்...


உப்புக் கலந்த கடல் நீரும் கொதிப்பது அவளுடல்

ஒப்பக் கலந்து ஓளீவீசிட நிலைபெற்றது ஆகாயம்...


ஏற்றம் கொண்ட பேரழகும் மெல்ல தன் நிலையில்

மாற்றம் காணப் போக உலைப்பட்டது ஆகாயம்...


நாற்றம் கொண்ட நறுமலர்ப் பெண்மை வெப்பச்

சீற்றம் கொண்டு மாற மலைப்புற்றது ஆகாயம்...


பிண்டத்தில் இவ்வளவுப் பேரழகா என்று நாளும்

அண்டத்தில் சுருங்கி விரிந்து செல்கிறது ஆகாயம்...


கண்பார்த்து தோற்றிடும் அவளெழில் கண்டு முன்னே

விண்மீனும் நெருங்கி விலகிச் செல்கிறது ஆகாயம்...


கிண்ணத்து மதுவுண்ணும் மங்கையவள் அந்தி வான்

வண்ணத்து மேனியெனச் சிவந்து விடுகிறது ஆகாயம்...


எண்ணத்துள் ஏதோ ஒன்று நுழைந்து கொள்ளும் இந்தப்

பெண்ணுக்குள் தாதோ என விழுந்து விடுகிறது ஆகாயம்...







பொருள் விளக்கம்:

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அறம், பொருள், இன்பம் - இந்த மூன்று,

பாவலர் - கவிஞர் மற்றும் புலவர்கள், வெதும்பி - வாடி, கொள்ளிடம் - குவியும் இடம்,

அனிச்சம் - ஒரு வகை மென்மையான மலர், தொனித்த - வெளிப்பட்ட,

கயல்விழி - மீன் போன்ற விழி, துயில் - உறக்கம், அஞ்சனம் - கண்ணுக்கு இடும் மை,

சஞ்சலம் - நிம்மதி இழந்த நிலை, சிகை - தலைமுடி, மப்பும் - இருண்ட மங்கலான நிலை,

ஒப்ப - ஒன்று போல, நாற்றம் - நறுமணம், பிண்டம் - உடல், அண்டம் - அகண்ட ஆகாயம்,

தாதோ - பூந்தாது (தேன்) அல்லது விந்து.

No comments:

Post a Comment