Tuesday, June 16, 2020

தடம் மாறிய அணிகலன்கள்

ராமாயண காலத்தில் வானரங்கள் அறியாது செய்ததைத் தான்

இன்றைய பெண்கள் அறிந்து செய்கின்றனரோ?

ஆம். தடம் மாறிய அணிகலன்கள் என்ற பெயரிலே ஒரு கவிதை.

கவிதைக்கான பின்புலம் கம்பராமாயணத்தில் இருந்தே

எடுத்து ஆளப்பட்டுள்ளது.



அதற்கான பின்புலம் பின்வருமாறு சிறிய விளக்கம்:


ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே
பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது
ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka
இன்றைய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.
தங்கள் வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில்
ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர். அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை
மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.

அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த
ஊர் பெயர் வரக் காரணமானது. ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன்
மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த
சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.



இதைத்தான் கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார்...

"அணியும் வகை தெரியாமல் வானரங்கள்
இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும்...
எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும்...
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும்...
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும்...
மாட்டிக்கொண்டு அலைந்தன என்று"...




தடம் மாறிய அணிகலன்கள் -

தடுமாறிய கோலம் ஏனோ?

இடம் மாறியதன் காரணம்

இன்றைய நாகரீகம் தானோ ?



இடையணி மேகலை என்றொரு அணிகலன்

இருந்ததொரு காலம் - காலப் போக்கில் அது

உடையணிந்ததன் உள் ஒளிந்து உணர்விலே

உருவிய வாளைப் போலே மின்னியதாலோ?



மூக்கிலே துளையிட்டு பின் புத்தியும் தெளிவுற

மூக்குத்தி அணிந்ததொரு காலம் - அது காலப்

போக்கிலே இடம் மாறி மலையேறி கீழிறங்கிப்

போகத் தொப்புளில் பொலிவுற நன்னியதாலோ?



முன்கையில் வளையிட்டு பெண்கை வீசிவரும்

மென்னடைக்குத் தாளம் இசைக்கும் நயம் மாறி

பின்னது காலப் போக்கிலே காதணியாய் உருமாறி

பெருங்கூந்தலோடு கதைபேசப் பின்னியதாலோ?



காதணிந்த தோடுகளும் இரண்டில் ஒன்றானது

கோவைச் செவ்விதழ் நாவிலே இடம் மாறியும்

போதவிழ்ந்த கீழிதழ் மூக்கிலே மற்றொன்றும்

போனதன் காரணம் மோகமது கன்னியதாலோ?



தண்டையாடிய கால்களும் தன் நிலைமீறித்

தாளமிட்ட காலம் போய் மங்கையவள் பூக்

கொண்டையாடிய குஞ்சமும் கால வெள்ளம்

கொண்டு சென்ற இடமெங்கே? தடமெங்கே?



கூந்தலைப் பின்னிச்சென்றது ஒருகாலம் அதைக்

கலைத்து அலையாடவிட்டுத் தன் தலையாட்டும்

ஏந்திழையார் தனை மறந்த நாகரீகப் போர்வையிலே

எழில் மறைந்து போன இடமெங்கே? தடமெங்கே?



தழையாடை மெல்ல மெல்ல மாற்றம் பெற்று

தன்நிலை மாறி உதிர்ந்த காலவெள்ளப் போக்கில்

புழைமூடிய உள் காலுடையாய் உருமாறிப் பூப்

பெய்தும் வகையறியும் இடமங்கே! தடமங்கே!



முன்னழகைப் புதைத்த கலிங்கமெனும் உடை மாறி

முகப்பளக்கும் வட்டுடையாய் உருமாறி மெருகேறி

பின்னழகுக்கும் பேரழகைக் கொடுக்கும் வண்ணம்

பின்னல் கொடுத்த ஓரழகின் இடமங்கே! தடமங்கே!



பூட்டிய அழகிலே பொலிந்தது நங்கை தேகம் - வெளிக்

காட்டிய அழகெல்லாம் மலிந்ததன் மோகம் - நாகரீகம்

கூட்டிய அழகிலே தெரிந்தது மங்கை பாகம் - புதிதாய்

மாட்டிய அணிகலனால் போன இடமெங்கோ? தடமங்கே!



இடையென்பது பெண் அழகைத் தேடத் தான் தோன்றியதன்

உடையென்பது உள் அழகை மூடத் தான் தோன்றியதோ?

தடையென்பது உள்ளவரை தழுவி நிற்கும் இளமையும்

விடைதெரியாக் கேள்வியாகும் இடமெங்கோ? தடமங்கே!



வளையாடிய கைகளும் தாமரைப் பாதங்கள் பூமியில்

விளையாடிய நாட்களும் பூமறையும் பூவை தேகமதில்

துளைமூடிய அணிகலன்களும் பொலிந்த நல்லாடையும்

கிளையோடிய நாகரீகத்தில் போன இடமெங்கோ? தடமங்கே!



புடைவைத்துக் கட்டுவதால் புடவை எனும் பெயர் பெற்று

இடைமறைக்கக் கட்டியங்கு கன்னியவள் மேனியழகைக்

கடைவிரிக்க கூடாதெனும் நுட்பத்தோடு உருவாகியதோர்

உடைமாறி நீள் சல்லடம் ஆன இடமெங்கோ? தடமங்கே!



மார்கட்டு குலையாதிருக்க வாரணிந்த பெண்கள் இடைத்

தேர்தட்டு தான் மறைக்க பட்டுடை அணிந்த காலம் மெல்ல

தார்பட்டு மறைந்த சாலை மேலே மூளும் வெப்பம் தனில்

நீர்பட்டு மறைந்து போன இடமெங்கோ? தடமங்கே!













பொருள் விளக்கம்:


மேகலை - இடையில் அணிகின்ற ஓர் அணிகலன், நன்னியதால் - குறுகியதால்,

போதவிழ்ந்த - மொட்டுவிட்ட, கன்னியதால் - வெப்பமடைதல், ஏந்திழையார் - பெண்கள்,

தழையாடை - இடையில் அணிகின்ற உள்ளாடை, கலிங்கம் - மார்பில் அணிகின்ற உள்ளாடை,

வட்டுடை - பிரா, உள் காலுடை - பாண்டீஸ், பூமறையும் - பூ ஒளிந்த பெண்ணுடல்,

புடை - பக்கம், நீள் சல்லடம் - சுடிதார், வார் - கச்சு அல்லது பிரா, பட்டுடை - பாண்டீஸ்.

No comments:

Post a Comment