Tuesday, June 16, 2020

தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள்

தமிழ் பற்றிய சிறு ஆய்வு - நாகரீகத்தால்

தற்காலத்தில் அதிலே ஒரு தொய்வு...

கண்ணதாசனும் தான் கடைசியாக எழுதிய கவிதையிலே

இதனையே வற்புறுத்துக்கிறார்...



உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.
அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.
அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட
கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு


மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!


ஆம் நாமும் நம்முடைய பிள்ளைகளைத் தமிழ் பேசச் செய்து வைப்போம்...


மகாகவி பாரதியும் இதையே தான் தொகுத்துரைத்தார்:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!



எந்த கொரியனோ அல்லது சீனனோ எடுத்த எடுப்பிலே

அடுத்த மொழியிலே உரையாடுவதில்லை,

தன் மொழியிலே தான் உரையாடுகிறார்கள்...

ஆங்கிலத்தில் பிள்ளைகள் படித்தாலும் வீட்டிலே தமிழ் பேச அனுமதியுங்கள்...

பாங்கான தமிழைப் பிழையின்றிப் பிள்ளைகள் பேசப் பேச வெகுமதி அளியுங்கள்...




"மம்மி என்றது குழந்தை -

அம்மா என்றது மாடு" - எங்கோ படித்த கவிதை


தற்கால வாழ்வியலை விளக்கும் அற்புதம்...




டாடி மாமி என்பதில் பெருமையில்லை -

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளைப் பாருங்கள்...

ஆம்

ஆண்டாள் - தமிழையே ஆண்டாள் -

தமிழைத் தவிர வேறெதையும் சீண்டாள் -

இறைவனையே மணாளனாய் பூண்டாள்

இதைத் தவிர வேறாரையும் வேண்டாள்...



-----------------------------------------------------------------------------------------------

மழலைப் பெயர்களையும் தமிழிலே தேர்ந்தெடுங்கள்...

நிழலைப் போலே அதன் பின் தொடர்ந்து சென்றிடுங்கள்...

விழலைப் போலே வீண் வாதங்கள் தவிர்த்திடுங்கள்...

குழலைப் போலே இனிதாகப் பேசி மகிழ்ந்திடுங்கள்...



வாய்மொழிகள் பல இருந்தாலும் அதைக் கற்றாலும் - நம்

தாய்மொழி தனை மறவாது பேசி வாழ்வோம் - இனிய

கனியிருப்பக் காய் கவர்தல் முறையாமோ? - எனினும் நாம்

நுனிநாவில் தமிழ் மொழியைத் தவழச் செய்திடுவோம்!



வலிக்கின்ற போது அம்மா என்றழைப்போம் - காதல்

பொலிகின்ற போது அன்பே என்றழைப்போம் - பாசம்

அழைக்கின்ற போது அப்பா என்றழைப்போம் - பக்தி

திழைக்கின்ற போது இறைவா என்றழைப்போம்...



தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள் - ஆம்

அமிழ்தக் கடல் நீந்தி அதிலே கரை தேடுங்கள் - வேறிடம்

சென்றாலும் மறவாது தமிழிலே கதை பேசுங்கள் - வேறுபட்டு

நின்றாலும் உறவோடும் சிறப்போடும் நகையாடுங்கள்...



இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான இலக்கியங்கள் பல

திரண்ட மொழியாகும் தமிழ் - ஆயினும் தற்காலம் நாவிலே

பிறண்ட வேற்று மொழியாலே தமிழும் தொய்வடைந்து

வறண்ட நிலையிலே இருப்பதால் நீரை வார்த்திடுவோம்...



ஆதிச்ச நல்லூராம் இருபதாயிரம் ஆண்டுக்கும் பழமையென

போதித்த ஆய்வினை சற்றே நினைவு கூறுவோம் - எனவே நாம்

பாதியில் வந்த மொழிகள் சில பேசினாலும் - தாய் மொழியாம்

ஆதியில் தோன்றியதன் காரணத்தால் தமிழில் பேசிடுவோம்...



பண்பாட்டிலே மேம்பட்ட மொழியாகும் தமிழே - நம் குலப்

பெண்பாட்டிற்கும் ஏற்ற மொழியாகும் அதுவே - அறிவியல்

கற்போர்க்கும் தீர்வு பல கொடுக்கும் மொழியாகும் - செறிந்த

முற்போக்கு சிந்தனை எல்லாம் தோன்றிய நல் மொழியாகும்...



வள்ளுவன் சொல்லாதது ஏதும் இல்லை - மனிதப் பயன்பாட்டில்

கொள்ளுதற்கு அதுவன்றி ஏதும் உண்டோ - வாழ்வுமுறை திறம்பட

தெள்ளுத் தமிழ் மொழியில் சிறந்த காப்பியங்கள் பலவுண்டு - பூக்

கொள்ளும் தேன் மிகுந்த சுவை இலக்கியங்கள் தானுமுண்டு...



இன்பம் கொள்ள சிற்றிலக்கியங்கள் சிலவுண்டு - பக்திஎனும்

பண்புக்குள்ள பிரபந்தங்களும் உண்டு - காதல் ரசம் ஊரும்

கம்ப ராமாயணமும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்பும்

அம்புலியாய் விளங்கும் அகநானுறும் உண்டே நம் மொழியில்...



போர் வீரனுக்கோர் இலக்கியமாம் புறநானுறும் உழவும் சிறக்க

ஏர் ஓட்டுபவனுக்குமோர் காவியமாம் ஏரெழுபது - அநீதிக்கு

சிலம்பம் எடுத்துரைத்த கண்ணகியின் மாண்பும் - விதியே என

புலம்பும் மனிதருக்கும் நாலடியார் நவின்ற நல் பாடமுண்டு...



முச்சங்கம் வைத்து வளர்ந்த தமிழ் - தற்கால நாகரீகத்தில்

முற்றிப் போய் முடங்கலாமோ? வேற்று மொழியினிலே

இச்சங்கம் போல் ஏதும் உண்டோ? மாற்று கருத்துக்குள்

இற்றுப் போய் அடங்கலாமோ? - தற்போதைய நிலையில்...



பற்று வைத்த பரத்தையின் பேரன்பால் தன் தாய்மொழிப்

பற்றை நாமும் மறக்கலாமா? வேறு வழியின்றி வாய்ப்பு

அற்றுப் போகும் நிலை வந்தாலும் தமிழ் மொழியன்றி

வேற்று மொழியில் சிறப்பு ஏதும் உண்டோ? உலக அரங்கில்...



மருத்துவத்தில் சித்தம் போல் சிறப்புமுண்டோ? அந்நிய

மருத்துவத்தில் அறியாத நோய்க்கும் மருந்துமுண்டோ?

பொறுத்துப் பார்த்தால் இத்தனை பெருமையும் வரை-

யறுத்துக் கூறும் மொழி வேறு ஏதேனும் உண்டோ?



பாரில் உண்டு பல மொழிகள் - இருந்தும் அதன்

வேரில் எங்கோ தமிழின் சுவடுண்டு - வார்க்கும்

நீரில் அதுவும் வேறுபடலாம் - எனிலும் நம்மில் பல

பேரின் பேச்சாலே நிலைபெற்று இங்கு வாழ்வதுண்டு...



எம்மொழிகள் பாரினிலே இருந்தாலும் செறிவுமிக்க நல்

மும்மொழிகள் உண்டே அதிலும் மூத்ததொரு மொழியாம்

செம்மொழியெனும் அடையாளம் பெற்ற தமிழ் மொழிபோல்

அம்மொழிகள் அமைவதுண்டோ காண் இந்த உலகினிலே...

(மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம்)



பொதிகை மலை தோன்றி புறப்பட்ட மொழியானது

அதிகம் வளர்ந்தது மதுரையெனும் நகரினிலே பின்

குடிபுகுந்தது தஞ்சைத் தரணியெனும் காவிரித் தாயின்

மடிபுகுந்து மண்பயனுற மக்கள் நலம் பெற்ற தமிழே!



திராவிட மொழிக்கெல்லாம் தாயானாள் - சங்கத்திடைத்

திரண்ட புலவர் கையில் சேயானாள் - அவர்கள் பாடித்

தாலாட்டிச் சென்றதெல்லாம் காவியமன்றோ? அதன்பின்

வாலாட்டி செல்வதெல்லாம் திராவிடத்தின் கூறு அன்றோ!



வந்தாரை வாழ வைத்தே தரணியில் வாழ்கின்றது - அது போல் 

நொந்தாரையும் தாழ வைக்காமல் சமமாகப் பாவித்துப் பாதி

வெந்தாரையும் பொறுத்துக் கொண்டே தாம் வாழக் கவிபலத்

தந்தாரையும் பெருமைப் படுத்துகின்ற அற்புதம் தான் என்னே!



கலைஞர் என்று பேர் கொண்டு வாழ்ந்தோரும் உண்டு எனில்

கவிஞர் என்று பேர் பெற்றுச் சிறந்தோரும் உண்டு பொதிகை

மலைஞாயிறு போல் உதித்து மறைந்தோரும் உண்டு இன்றும்

மண்ணில் நிலையாக வாழ்கின்றது அவர் வார்த்த செந்தமிழே!



எத்தனை பேர் வந்தாலும் தன் இளமைக் குன்றாமல் சுவை

அத்தனையும் கொடுத்த கம்பர் வள்ளுவர் இளங்கோ போல்

தமிழுக்கு மெருகூட்டிய கவிப்பெருமக்கள் உண்டோ? எனில்

அமிழ்தினும் இனிய தமிழுக்கு அவராலே பெருமையுண்டு...



என்னாலும் எள்ளளவே இயம்பிட்டேன் தமிழின் புகழைத்

தன்னாலும் தரணியிலே மென்மேலும் சிறந்திடவே நம்

எல்லோரும் முயன்றிடுவோம் தம் மனதோடு மட்டுமே

நில்லாமல் நாவாலும் சுவைத்திடுவோம் தமிழமுதை...









பொருள் விளக்கம்:

விழலை - உதாவாத நிலம், பொலிகின்ற - பிரகாசிக்கின்ற, தெள்ளு - தெளிந்த,

அம்புலி - நிலவு, இற்று - மெலிந்து, செறிவு - செழிப்பு, நொந்து - நிலை கெட்ட,

வரையறுத்து - குறிப்பிட்டு, மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மும்மொழி,

மலைஞாயிறு - மலையிடை உதிக்கின்ற சூரியன்,

No comments:

Post a Comment