Tuesday, June 16, 2020

அறிவுரை ஏழு - அனுபவத்தின் ஏடு


செறிவுறத் தயவாய் கேளு -

தெளிவுறப் படித்து நன்றாய்க்

களிப்புறக் கருத்தில் கொண்டே

ஒளிபெற்று வாழ்ந்திட வேண்டும்...



கனிவது காயின் செயல் என்றாலும் காற்றதைத் தழுவி

இனிப்பது எதுவோ அதுவே இயற்கையின் விதியே என்று

அனுபவம் என்பது யாதெனில் பூவாய் மலரும் போதே

கனிவதும் காய்த்து உதிர்வதும் முளைப்பதன் விதியே!



விதியதும் விதித்தது போலே இயங்கினால் அதுவெல்லும்

மதியதும் மதித்ததன் விதியே என்று தயங்கினால் முயற்சிக்

கதியதும் உதித்தது போலே விளங்கினால் தனை வெல்லப்

புதியது போலே தோன்றும் அதுதான் "அனுபவம்" அன்றோ!



அன்றோ விதித்தது மனம் நினைத்தது போலே நடக்கும்

என்றோ நினைத்தால் அனுபவம் சிரித்தது - அவசரப்பட்டு

இன்றே நடக்கும் என்றால் நடந்தது யாவும் விதிப் பயன்

என்றே நினைத்து நாளைக் கடத்திட வேண்டுமன்றோ
!

---------------------------------------------------------------------------------------------------------------

அறிவுரை ஒன்று:

வாழ்விலாது இருக்கும் போது முயற்சியை விட்டுவிட வேண்டாம்

தாழ்வு வந்து இருக்கும் போது தற்பெருமை தான் பேசிட வேண்டாம்

பாழ்கடன் பற்றி இருக்கும் போது சொந்த ஊரில் இருக்க வேண்டாம்

ஆழ்துயர் தொற்றி இருந்தால் அருந்தும் கள்வெறுத்தல் வேண்டாம்




அறிவுரை இரண்டு:

வாழ்வது வந்து போது தன்னடக்கம் தான் கொள்ள வேண்டும்

தாழ்வது தழுவிய போது தளர்வடையாது இருத்தல் வேண்டும்

ஊழ்வினை சூழ்ந்த போது விதிபயன் தெரிந்து கொள்ள வேண்டும்

சூழ்வினை யாவும் வெல்ல சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்




அறிவுரை மூன்று:

பொன்னாசைக் கொண்டு பெண்ணாசையில் பதுங்கிட வேண்டாம்

தன்னாசைக் கொண்டாலும் மண்ணாசை ஒதுக்கிடல் வேண்டும்

என்னாசை கொண்டாலும் மனதில் பேராசைக் கொள்ள வேண்டாம்

பின்னாசை கொண்டு பிதற்றாமல் முன்னாசை கொள்ள வேண்டும்




அறிவுரை நான்கு:

அன்னையம் தந்தையும் அவமதித்துக் கடந்திடல் வேண்டாம்

பின்னையும் கற்ற கல்வியைப் புறந்தள்ளி நடந்திடல் வேண்டாம்

முன்னையும் ஓர்சக்தி உண்டென உணர்ந்து கடந்திடல் வேண்டும்

தன்னையும் நம்பியவளைத் துணையென நடத்திடல் வேண்டும்




அறிவுரை ஐந்து:

வறுமை வந்து வாட்டிய போதும் மனதால் சோர்வடைய வேண்டாம்

பொறுமையைச் சோதிக்கும் போது மௌனத்தில் ஆழ்ந்திட வேண்டும்

பெருமையைக் கொடுக்கும் புகழில் பேதைமைக் கொள்ள வேண்டாம்

ஒருமையில் பன்மையைக் கண்டு நிறைவினைக் கொள்ள வேண்டும்




அறிவுரை ஆறு:

உயர்பதவி வந்த போதும் பணிந்து நடந்திடல் வேண்டும்

துயர்உதவி என்ற போதும் துணிந்து கொடுத்திடல் வேண்டும்

அயர்வுற்று இருக்கும் போது ஆழ்ந்து உறங்கிட வேண்டும்

உயர்வற்று இருக்கும் போது கலக்கம் கைவிடல் வேண்டும்




அறிவுரை ஏழு:

துன்பம் மிரட்டுகின்ற போது துணிவைத் துணையாக்கிட வேண்டும்

இன்பம் புரட்டுகின்ற போது உணர்வைத் தன்வசமாக்கல் வேண்டும்

முன்பின் அறியாதவரிடம் மூளும் கோபம் கொண்டிட வேண்டாம்

அன்பின் அடையாளத்தைக் கலைத்து விளையாடிட வேண்டாம்

No comments:

Post a Comment