Tuesday, June 16, 2020

நீரின்றி அமையாது உலகு

நீரின் இன்றியமையாமையை விளக்க ஒரு கவிதை.

அன்பர்கள் படித்து அவதானித்து கொள்ளவும்.

அறிந்தது தான் இருந்தாலும் நாம் அலட்சியம் கொண்டதன்

விளைவு நிலத்தடி நீரானது குறைந்து போனது.


அதுவே இன்னும் சில வருடங்களில் மறைந்தும் போகலாம்.

அதற்கு முன்னே முன்னோர்கள் வெட்டி வைத்த குளங்கள்,

கண்மாய்கள், கால்வாய்கள் எல்லாம் சற்றே ஆழப்படுத்தியும்

மழை நீரை சேமித்தும் நன்னீர் கடலோடு கலந்து வீணாகாமல்

அணை அமைத்து தடுத்தும் வருங்கால சந்ததிக்கு தூய நீரை

விட்டு செல்வோம்.


------------------------------------------------------------------------------------------------------------

நீரின்றி அமையாது உலகு - வளம் கொழிக்க

நீயுமிதை மறந்தாலேது உணவு - வயல் செழிக்க

ஏரின்றி அமையாது உழவு - உளம் மகிழ நாமும்

ஏறிட்டுப் பாராமல் சென்றால் ஏதிங்கு உணர்வு...



சோறின்றி அமையாது உணவு - அது சமைக்க தினம்

நீரின்றிப் போனாலும் சுவைக்காது - உழவைத் தவிர

வேறன்றி சிறக்காது உலகு - அது புரிந்து கொண்டால்

வேரூன்றி நிற்குமே நீரும் நிலத்தடியில் அறிவோமே!



வட்டியில் வளரும் பொருளாதாரம் போலே நெகிழிப்

புட்டியில் உலவும் நீரைக் காசுக்காக விற்கும் பெட்டிக்

கடைகள் பெருகி வருகின்றன - நாளைய கேள்விக்கும்

விடைகள் இல்லாமல் போனது நிலத்தடி நீரைப் போலே!



முப்பங்கு நீரால் சூழ்ந்தது தான் உலகு - கொணர்ந்தால்

அப்பங்கும் பயன்பாடாமல் உப்பாய் போகுமே - மானிடா

எப்பங்கில் நீரை பூமியின் உள்ளே காண்பாய் -உணர்ந்தால்

அப்பங்கில் அதை நீயும் சேமித்தால் எதிர்கால விடிவுண்டு...



காடுகள் காடுகளாய் இருந்தவரை செழித்த பூமி அதையழித்து

வீடுகள் அங்கே அரங்கேறியதும் காணாமல் போனது பறவைக்

கூடுகளும் அதன் உயிரோட்டமும் அன்றி ஊருக்குள்ளே வயற்

காடுகளும் கல்லூரிகளாகிப் பயிரோட்டம் நின்றது தான் மிச்சம்...



ஆறானது கடல் கலந்தால் உப்பாகும் அதன் திடலுக்குள்

ஏறாமல் அணை கட்டித் தடுத்தால் தப்பாமல் பயனாகுமது

மீறாமல் துணைகொண்டு நலம் பயக்கத் தவறினாலது

தேறாமல் கடலை அடைந்தே தன் நிலை தான் இழக்கும்...



விழுந்தால் மழையாகவும் அருவியாகவும் அதுவே விழுந்து

எழுந்தால் ஆறாகவும் தேங்கினால் குளம் குட்டையாகவும்

பாய்ந்தால் வாய்க்காலாகவும் ஊறினால் கிணறாகவும்

காய்ந்தால் மண்ணில் மகத்துவங்கள் உண்டாகுமோ?



தோன்றிய உலகிலே செழித்திருந்த நீரெல்லாம் ஓடித்

தோய்ந்து போன இடம் தானெங்கே? பாரெல்லாம் பயன்

ஊன்றிய காலம் போய்ப் பாகல் பழம் போலே முதுமை

ஊறிய நிலையாக நிலமின்று ஆனதிங்கே - காணீரோ...



வளம் மிகுந்த பூமியிங்கே வளம்குன்றி போய் மக்கள்

உளம் புகுந்த நாகரிகத்தின் கேடாலே நலம்குன்றிப் பல

தளம் கட்டிடங்கள் பெருகியதாலும் கணக்கின்றி நீரும்

ஆழம் போய் தேடும் நிலையின்று ஆளானதன்றோ?



பயிர் செழித்தால் பயன் கண்டு பலன் கொண்டு பல்

உயிர் செழிக்கும் பூமியிலே மக்கள் மனம் வீணாகி

மயிர் மழித்த நிலை போல வழித்தால் பயனுண்டோ

வயல் அழித்த நிலமதில் வாழ்வதால் பலனுண்டோ?



தேக்கி வைக்கும் நீருக்கும் சுவையுண்டு அது போலே

பாக்கி வைக்கும் ஆசைக்கும் பலனுண்டு நெஞ்சிலதைப்

போக்கி வைத்தால் எங்கு செல்ல? நம் எண்ணமதில்

ஆக்கி வைத்தால் செழிக்கும் அங்கே நீரின் நிலை...



பஞ்சம் வந்து பாழும் மனம் கெடலாமோ? இதைக்

கொஞ்சம் நாமும் கருத்தில் கொண்டால் மாறும்

நெஞ்சம் இங்கே வீழும் நீரைச் சேர்த்து வைத்துத்

தஞ்சம் அடைந்தால் பூமியங்கே செழிக்குமன்றோ!



அருவியில் விழுகின்ற நீரானாலும் அது மண்வீழ்ந்து

மருவி ஆறாய் ஓடுமதைத் தடுத்தும் திசை திருப்பிக்

கருவியாக்கி காத்திடவும் வயல் வரைச் சேர்த்திடவும்

தருவது நம் கடனாய் கொண்டாலே நலம் கொழிக்கும்...



ஆறாதாரம் உடலிலுண்டு அது போல் மண்ணிலும் அதன்

நீராதாரம் வகை பெற்று அருவியாகி ஆறாகிக் குளமாகித் 

தேங்காமல் போனாலும் கோடையிலும் வாய்க்காலாகிப் பின்

வாங்காமல் வயல்வழியோடி நாளும் பயனடைய வேண்டும்...



நன்னீரை நாமும் சேமிக்கத் தவறினால் எதிர்காலத்தில்

கண்ணீரில் மட்டுமே கவலையுடன் உணர்வும் உப்பேரித்

தண்ணீரை சிந்துகின்ற நாளும் வரலாம் - நிகழ்காலத்தில்

பன்னீராக்கி இளைய தலைமுறை பயன்பெற வேண்டும்...



நீர் வேண்டும் போது மண்ணும் பயன் பெற நீல வானில்

கார் வந்து அழ வேண்டும் - உளம் உவகைக் கொள்ளச்

சீர் வேண்டும் பூமியில் விழுந்து ஓடியெங்கும் வாடியப்

பயிர் மீண்டு எழ வேண்டும்  - செழித்து வளமாக வேண்டும்...



தாழும் நிலை வந்த போதும் ஆற்றல் மிகுந்த மலையருவி

வீழும் நிலை நோக்கி நாளும் ஊக்கத்தோடு ஓடியலையாடி

வாழும் கலை தந்த நீரின் பெருமை கண்டு மனம் விரும்பி

சூழும் வலை வீசும் விதியை வென்று வாழ வேண்டுகிறேன்...



கற்றாரும் கருத்தில் கொள்ள வேண்டும் பல்பொருள் ஈட்டிப்

பெற்றாரும் கவனத்தில் கொள்ள வேண்டும் கடந்த காலத்தில்

முன்னோர்கள் அமைத்த நீர்வளம் எல்லாம் அழித்தால் நமக்குப்

பின்னோர்கள் அதனால் பயன் பெறுவரோ எண்ண வேண்டும்...



வயல் எங்கும் வளம் கொழித்திடவும் வீடெங்கும்

கயல் விழியாள் நலம் செழித்திடவும் நாடெங்கும்

செயல் படுத்தி உளம் மகிழ்ந்திடவும் நீரைச் சேமித்து

பயன் அடைந்து பலன் பெற்றிடவும் வேண்டுகிறேன்...



விழுந்தால் அருவி போல விழுந்து நடை பயின்று நீயும்

எழுந்தால் குருவி போல சுறுசுறுப்பாய் எழுந்து வேப்பங்

கொழுந்தாய் கசந்த வாழ்வும் கூட நறுமணம் கூட்டும் மரிக்

கொழுந்தாய் மாறி மறுமணம் பரப்பிட வேண்டுகிறேன்...



நாளைத் தொடரும் அவல நிலைக்கு இன்றே ஆளாகலாமோ?

கோளைத் தொடரும் ஆராய்ச்சியில் நீர் தேடுவதும் அவசியமோ?

வேலையென நாம் முயன்றால் பயிர்கள் செழித்துக் காய்த்திடுமே!

பாலைப் போலே நீரைக் காத்திட்டால் உயிர்கள் பல உய்த்திடுமே!









பொருள் விளக்கம்:


நெகிழிப் புட்டி - பிளாஸ்டிக் பாட்டில், நன்னீர் - நன்மை பயக்கும் நீர்,

பன்னீர் - பல்கிப் பெருகிய நீர், முப்பங்கு - மூன்று பங்கு, திடல் - எல்லை,

தேறாமல் - பயன்படாமல், ஆறாதாரம் - அனாதகம் முதலான சக்கரங்கள்,

போறாது - குறையாது, கார் - கருமேகம், வார் - பெண் அணியும் கச்சு,

மார் - மார்பகம், மருவி - உருமாறி, கருவி - பயன்படும் உத்தி, கயல் - மீன்,

தோய்ந்து - படிந்து, கொழித்திட - பெருகிட, கோளை - செவ்வாய் கிரகம்.

No comments:

Post a Comment