Tuesday, June 16, 2020

மகா மகத்துவம் பொருந்திய சித்த மருத்துவம்

மருத்துவம் வளர்ந்துள்ளதா? இல்லையதன் நோய் பெருகிய

மகத்துவம் தான் மலிந்துள்ளதா? பலவண்ண மாத்திரை வடிவிலே

மருந்துகளும் பொலிந்துள்ளது - சோதனைக் கருவிகளும் தான் பெருகி

பருந்துகளைப் போலே நோயதன் காரணத்தை ஆராய்கின்றது.



ஆம் அது தான் இன்றைய தலை சிறந்த மருத்துவம் என்று நாம்

நினைக்கும் அல்லோபதி மருத்துவம். உண்மையில் அது தான்

விலை மிகுந்த மருத்துவம். சித்த மருத்துவம் மெல்ல

மெல்ல மக்கள் மறந்ததன் விளைவே நோய்களுக்கான காரண


காரியமின்றி மருத்துவர்களும் மருத்துவத்தை செய்கிறார்கள்.

பண்டைய புலவராம் வள்ளுவர் பகன்றுள்ளார் உடலிலே உண்டாகும்

நோய்க்கான காரணங்கள் மூன்று தான். அதன் வடிவம் பல என்றாலும்

அது தோன்றும் காரணம் வாதம், கபம், பித்தம் என்கின்ற மூன்று தான்.

உலக மருத்துவத்தை தனது ஒன்றரை அடிக்குள்ளே அடக்கியுள்ளார்.


”மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”


ஆம் பித்தம், கபம் மற்றும் வாதம் எனும் மூன்றும் தான் அனைத்து நோய்கள்
உருவாக மூல காரணமாய் இருப்பது.

நம் உடலில் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில்
சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது
மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ
உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.


ஆம் பஞ்ச பூதங்கள் ஐந்துமே மனிதனை ஆட்சி செய்கின்றது. அதிலும் மருத்துவ ரீதியாகப்

பார்த்தல் மூன்று பூதங்களே முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் மனிதன் மண்ணிலே

ஆகாயம் பார்த்த வாழ்க்கை வாழ்கிறான். நெருப்பு, நீர் மற்றும் காற்று ஆகிய பூதங்களாகும்.

அது முறையே பித்தம், கபம் மற்றும் வாதம் எனப் படுகிறது. இந்த பூதங்கள் தன் அளவிலே

தன் நிலையினின்று மாறுபடும் போது உடலிலே நோய்களும் தோன்றுகின்றன.


அடுத்து அவர் நோய்க்கான மருத்துவம் பார்க்கும் முறையினைக் கூறுகிறார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.



நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து
அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும்
அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.


இன்றைய மருத்துவர்கள் நோயாளியிடம் கேட்கிறார்கள் உடலுக்கு என்ன செய்கிறது?
நோயாளி சொல்லும் அறிகுறியை வைத்து மருந்துகளைப் பரிந்துரை செய்கிறார்கள்.
அதிலே குணம் தெரியவில்லையென்றால் ரத்தம் முதலானப் பலவித சோதனைகளுக்கு
உட்படுத்தியே நோய்க்கான காரணத்தை அறிய முயல்கிறார்கள். அதுவும் சில நேரங்களில்
காலவிரயமும், பணவிரயமும் ஆகின்றது.


அன்றைய சித்த மருத்துவர்கள் நாடிப் பரீட்சை செய்தே நோயையும் நோய்க்கான
காரணத்தையும் கூறி அதற்கான மருத்துவத்தை அவருடல் அமைப்புக்கு ஏற்ற
வண்ணம் மருந்தினைப் பரிந்துரை செய்தார்கள். உடல் வெளியேற்றும் கழிவுகளின்
தன்மையை வைத்தே நோயையும் அதன் காரணத்தையும் கண்டறிந்தார்கள்.

ஆகவே மருத்துவத்தின் மாற்றம் குறித்து எனது நிலைப்பாடு ஒரு கவிதை வடிவில்:

கண்டு கருத்தில் கொள்ளவும். 

உண்டுப் பார்த்து பயன் அடையவும். 
பண்டு பார்த்த மருத்துவம் தான் சிறந்ததென பறைசாற்றுங்கள். 
சித்த மருத்துவத்தை கரை ஏற்றுங்கள்.

தமிழ் மருத்துவ முன்னோர்கள் கூறியதாவது:

“மூன்றே பொருளால் ஆனது அண்டம்
மூன்றே பொருளால் ஆனது பிண்டம்
மூன்றே பொருளால் ஆனது மருந்து
மூன்றே பொருளால் ஆனது வாதமே”


என்பதால் ஞாயிறு, திங்கள், மழை ஆகிய மூன்று பொருளால் ஆனது அண்டம்.
வாதம், பித்தகம், கபம் என்னும் மூன்று பொருளால் ஆனது பிண்டம்.
இரசம், கெந்தகம், உப்பு ஆகிய மூன்று பொருள்களால் ஆனவை மருந்தும்,
வாதமும். இவ்வாறு உலகப் பொருள்களின் மூலத்தை மூன்று பொருள்களின்
தன்மையை ஒப்பிட்டுக் காணும் முறை வேறெங்கிலும் காணவியலாது.




-------------------------------------------------------------------------------------------------------------

பித்தம், கபம், வாதம் என்கின்ற மூன்றும் தன்னிலைப்

பிறழ்வதால் தோன்றும் நோய்களைக் கண்டு சொல்லும்

சித்தம் தான் உலக மருத்துவத்தின் முன்னோடியது உடல்

சிந்தும் கழிவுநிலை ஆராய்ந்து கூட நோயைக் காணும்.



நரம்பின் ரத்தம் எடுத்து ஆராயாமல் உடலில் ஓடும் நாடி

நடையைப் பார்த்தே நோயைக் காணும் அந்த நோய்க்கான

வரம்பையும் சித்தம் எனும் மருத்துவமே காரணம் தேடும்

வழியைக் கண்டு சொன்னதன்றோ இன்றைய உலகினுக்கே...



வர்மம் எனும் வகையும் கூடமருத்துவத்தின் அங்கம் தான்

வகுத்து சொன்னது உடலும் இயங்கப் பல புள்ளிகள் கொண்ட

மர்ம முடிச்சை அவிழ்த்துச் சொன்ன மருத்துவம் வேறன்றி

மகா மகத்துவம் பொருந்திய சித்த மருத்துவம் தானன்றோ!



அக்குபஞ்சர் எனும் மருத்துவத்தின் மூலமும் சித்தம் தான்

அதனுள் ஒளிந்த உடலில் அழுத்தம் கொடுக்கும் முறையும்

அக்காலத்தின் ஊசி முறை வர்மமேயன்றி வேறில்லை என

அனுபவத்தில் கண்ட உண்மையாகும் தொடு வர்மமன்றோ!



நோய் மருந்தினால் மற்றும் தீர்வதில்லை அவனவன் கர்மா

நிர்ணயம் செய்த வினைகளைப் பொறுத்தே என்றும் கண்டு

வாய் ஜாலம் செய்வோர்க்கும் நோய் வந்து தவிப்போர்க்கும்

வகுத்து சொன்ன மருத்துவமும் சித்தம் என்பது தானன்றோ!



வேரில் இருந்து இலைகள் வரை ஆராய்ந்ததன் குணமறிந்து

வேண்டும் நோய்க்கு ஏற்ப மருத்துவம் செய்யும் சித்தம் தான்

பாரில் இன்று பக்கவிளைவுகள் இல்லாத ஒரு மருத்துவமாகப்

பயன்பட்டு வருகின்றது என்றால் அதற்கு நிகர் வேறுண்டோ?



சித்தர்கள் பச்சிலையும் வேரையும் அக்குவேறு ஆணிவேராய்

சிறப்புடன் ஆராய்ந்து நமக்களித்த பொக்கிஷம் தான் நம்முயிர்

அத்தம் வரைப் பயன்பட்டுப் பல நோய்கள் தீர்க்கும் மாண்புதான்

அயலார்க்கும் அதிசயமாய் விளங்கும் சித்த மருத்துவமன்றோ!



அஷ்டவிதப் பரீட்சை மூலம் உடலின் நாடி, ஸ்பரிசத்தோடு ரூபம்

அன்றி நாக்குமதை சேர்த்து நேத்திர மல மூத்திரத்தோடு சப்தமும்

நஷ்டப் படும் விதம் கண்டுத் தெளிவுற்று நோக்கியதன் கூறு தான்

நன்றாய் நோயை ஆராயும் வழியென பறைசாற்றும் மருத்துவமே!



அல்லோபதி எனும் ஆங்கில மருத்துவம் கைவிட்ட நோயைக் கூட

அறிந்து சொன்ன நான்காயிரத்து நானுற்று நாற்பத்தி எட்டு எனும்

எல்லைக்குள்ளே அடக்கி அதற்கும் மருத்துவத்தைக் கூறி வைத்த

எண்ணிலடங்கா மூலிகையைக் கண்டு சொன்ன சித்த மருத்துவமே!



விடத்தைக் கூட நன்மையாக்கி நோய் தீர்க்கவும் அரைத்ததன்

வீரியத்தை குறைக்கும் ஹோமியோ மருத்துவம் மூலப் பொருள்

எடுக்க மூலிகை மற்றும் மலர் கொண்டே அரைத்து அணுவாக்கி

கொடுக்கத் தீரும் எந்த நோயும் சித்த மருத்துவத்தின் ஓரங்கமே!



குன்ம முதல் குஷ்டம் வரை தலை தொடங்கி பாதம் வரை பல

குறிப்புகள் எழுதி வைத்த சித்தர்கள் நமக்களித்த மருத்துவத்தில்

கன்ம வியாதிக்கும் கூடப் பரிகாரங்கள் சொல்லிக் கர்ம வினைக்

கடக்கும் வழியில் நடக்கும் முறையை சொன்ன மருத்துவமே!



தொன்மைக் காலம் முதல் தொடர்ந்து வந்த நோய்களுக்கெல்லாம்

தொன்றுதொட்டு அருங்குணத்தை கூறி யோகம்முதல் முக்திவரை

அண்மைக் காலத்துக்கும் பயனளிக்கும் விதமாகப் பகுத்து சொல்லி

அளித்த மருத்துவம் தான் தமிழுலகம் அளித்த சித்த மருத்துவமே!



தீரா நோய்களுக்கும் தீர்வுண்டு இருந்தாலும் விதிப்பயனால் அதைப்

பாராமல் போக அவனவன் கர்ம வினைக் கை விட்டு விட்டாலோ

தேறா உடலைத் தேற்றும் வழியில்லை வழியுண்டு சில ஏடுகளைக்

கூறாமல் சென்றதெல்லாம் சித்தர்கள் உலகின் நன்மைக்காகவே!



எல்லாம் வியாதிக்கும் மருந்திருந்தால் மனிதன் மரணத்தையும்

வல்லான் பொருள் குவிக்கப் பயன்படுத்துவான் என்றெண்ணியே

நல்லான் இறைவன் ஆக்கி வைத்த விதம் தான் இந்த உலகிலே

பொல்லான் விதியை வெல்லும் வகையில் அதுவும் ஒன்றே!



நோயில்லாக் காயம் இல்லை நொந்து விட்டால் நியாயமுண்டோ

காயில்லா மரமும் உண்டே உலகில் பூக்காத செடி கொடியுமுண்டு

வாயில்லா ஜீவனுக்கும் வகையான மருந்துமுண்டு வாழ்வளிக்கச்

சேயில்லா இடத்தை நிரப்பும் தயவான மருத்துவமே சிறந்ததன்றோ!



அறு சுவையின் மகத்துவமும் பகுத்துக் கண்டு சொல்லியதன்

மறு சுவையின் மாறுபாட்டால் நோய் வருமென ஒரு சுவைக்கு

ஒரு சுவை தான் வேறுபட்டால் உடலில் பித்தம், கபம், வாதம்

தரும் சுவை தான் நோயறிந்து குணம்காணும் முறையுமன்றோ!



உப்பின் சுவையே பிரதானம் எனும் ஒவ்வோர் மூலிகையிலும்

உப்புண்டு அவையே மண்ணில் இருந்து பெற்ற மகத்துவம் தான்

செப்பின் சுவை மண்டலம் தான் உண்டு வந்தால் உடல் தேறும்

சிறந்த மருந்தாய் அமைந்து உற்ற நோயும்கூட மறையுமன்றோ!



கூலிகையில் எடுத்தவுடன் வாங்காமல் நோயின் தாக்கமறிந்து

கூடுமான வரை நாடி வந்தோரையும் தேடி வந்தோரையும் பல

மூலிகைக் கொண்டு விஷக்கடியும் குணமாக்கும் விதம் தான்

முன்னோர்கள் கண்டு சொன்ன அற்புதமான சித்த மருத்துவமே!



நித்தம் நமது வாழ்வில் உண்ணும் உணவில் கூட மருத்துவத்தில்

சித்தம் தொகுத்தளித்த காய் கனிகளை உண்டு வந்தால் நாளும்

தத்தம் உடல்வாகுக்கு ஏற்றாற் போல் புரிந்து நடந்து கொண்டால்

மொத்தம் இந்த உடலில் தோன்றும் நோயிலிருந்து காக்கலாமே!



மூச்சிருக்கும் வரையில் மனிதர் முகத்தில் உற்சாகம் எனும்

வீச்சிருக்கும் வரையில் உலகில் சிறந்த மருத்துவம் என்றப்

பேச்சிருக்கும் வரையில் மண்ணில் நிலைத்து நீடித்து நின்றுப்

பூச்சிருக்கும் வரையில் பூமியில் வென்று வாழ்க! வாழியவே!









பொருள் விளக்கம்:

அத்தம் - முடிவு, அஷ்டப் பரீட்சை - நாடி,ஸ்பரிசம், ரூபம், சப்தம், நேத்திரம், மலம், சிறுநீர்,

ருசி எனும் எட்டுவகை பரீட்சைகள், தொன்மை - பண்டைய, வல்லான் - வலிமையுடையான்,

அண்மை - தற்போதைய, பொல்லான் - எமன், செப்பின் - முறையிடின், பூச்சி - பூச்சியினம்,

வீச்சிருக்கும் - வேகமிருக்கும், குன்ம நோய் - அல்சர் நோய், குஷ்ட நோய் - தோல் வியாதி,

கன்ம வியாதி - கர்மவினைப் பயனால் வரும் நோய்.

No comments:

Post a Comment