Tuesday, June 16, 2020

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

வெகு நாட்களுக்குப் பிறகு

எண்ணங்களின் மறு தோன்றல் -

கவிதையெனும் மொழி தோன்றல் - உணர்வாய்

அவிழ்ந்த சித்திரமா ? இல்லை உள்ளமதில்

குவிந்ததன் விசித்திரமா ?

படித்தவர்கள் கூறவும்.





என் கண்ணே! என்னே!

நேர்த்தியான அழகு - இளமையின்

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

ஓ பெண்ணே! கோடிட்ட இடத்தைப்

பூர்த்தி செய்யும் எழிற் கோவிலில்

மூர்த்திசெல்லும் போது திறக்குமோ?



அன்னவளைத் தேன்கலந்து

வார்த்து செய்த வனப்பை எல்லாம்

சேர்த்து அனுப்பிய தனமல்லவா?

என்னவள் தான் மண் அளந்து

அசைகின்ற பேரழகு கண்டு இன்பத்தின்

திசைதேடத் தூண்டும் மனமல்லவா?


முன்னமவள்

தலைமுதல் பாதம் வரை நழுவியதோர்

கலையழகு சேர்ந்தமைந்த இடையல்லவா...

பின்னலவள்

மறைத்து இருக்கும் மன்மத பீடம் தனை

குறைத்துக் காட்டுகின்ற உடையல்லவா.
..





குறுநகை முகத்தின் குவியலோ - அதை

கவர்ந்து இழுக்கும் அதரப் புதையலா?

சிறுபிறை தவழும் நெற்றியோ - அதைச்

சிந்தித்தால் எனக்கென்றும் வெற்றியா?



கருநாவல் மிதக்கும் விழிகளோ - அதைக்

கொண்டாடும் கவிதை மொழிகளா?

ஒருசாயல் தாமரை வதனமோ - அதன்

ஒத்த மறுசாயல் மயக்கும் அல்லியா?



தென்னங்கள் ஊறிய பூவிதழ் உறைகின்ற

கன்னங்களா? - இடைவழியின் அடையாளச்

சின்னங்கள் போலே தேனிதழ் மறைகின்ற

எண்ணங்களா? எதை நான் சொல்வேன்...



மூங்கிலென செழித்த தோள்களோ - அதன்

முன்னாலே தோற்றிடும் வாள்களோ?

ஓங்கிய வாழைதான் தொடையோ - அதன்

ஓரத்தில் நீர் பாய்கின்ற ஓடையோ?



அடைபட்டு கொண்டிருக்கும் ஆசையும்

அணை மீறி அவளைக் கண்டு ஓர் நாள்

தடைபட்டு கொண்டிருக்கும் உணர்வைத்

தாண்டி இடை வழியின் பாதை தேடி

உடைபட்டு கொண்டு வெளிப்படும் போது

உள்ளம் தான் உவகை கொள்ளாதோ?



மாறுபட்ட உணர்வை நாடியே நாளும்

மயக்கும் மாலையிதழ் ஊறித் ததும்பும்

சாறுபட்ட நாவால் இன்பரசம் பருகச்

சிவந்திருக்கும் காமம் வெளுக்காதோ?



இரவைப் பகலாக்க இனியவளைக் கிடத்தி

இன்பத்தின் வாசல்வழி நுழைந்து ரசித்து

உறவை அகலாக்கி உணர்வைத் திரியாக்கி

உள்ளமும் நெய்யாகத் தீபமது எரியாதோ?



மைவிழியாள் அவளை அணைத்து பெண்

மைவழியும் இதழோரம் சுவைத்து உண்

மெய்வழியில் காமரசம் பெருகிக் கலந்து

மையல் கொண்டால் பாபமது பிரியாதோ?



கிண்ணமுலைக் கண்டு கிளர்ச்சி யுற்று

எண்ணமங்கே எழுந்து வளர்ச்சி பெற்று

திண்ணமுடன் நுழைந்து தளர்ச்சிகாணா

வண்ணம் கலந்தால் இன்பம் முடியாதோ?



பெண்ணமுதை பருகும் இதழும் காமக்

கிண்ணமதில் உருகும் சூடு கொண்டுக்

கண்ணிரண்டில் காணாததைக் கண்ட

பெண்தடத்தில் போதையும் வடியாதோ?



நதியது அலைகடல் கலந்தால் உப்பாகும்

விதியதில் அவள்உடல் கலந்தால் தப்பாத

மதியுமது காமத்திடல் நுழைந்து செப்பாத

கதியில் சாமத்துடன் கலந்தே விடியாதோ?



அப்பாலில் இரண்டும் மெய்யழகாய் திரண்டு

முப்பாலில் மருண்டு உணர்வெலாம் உருண்டு

முப்போதும் முனைப்புடனே முயங்கிப் புரண்டு

எப்போது முடியுமென அப்போது விரும்பாதோ?



இரண்டு மலைஏறி இடையிலே சிறு பள்ளம்

இனிதே தாண்டி இதழ் விரியும் பெரும்பள்ளம்

திரண்டு நிலைமீறி ஓடையிலே சிறு வெள்ளம்

தீண்டிப் பாய்ந்தாலே ”அந்த” மலர் அரும்பாதோ?



களவும் கற்றுமற - அது கற்றபின் அவளுடலைக்

கற்று நான் கடைத்தேறும் வழி காணத் தளறாமல்

உளவும் உற்றறிந்து - பார்த்தும் பழகிய எழிலான

உணர்வில் தனைமறந்த பொழுதும் திரும்பாதோ?



பலபாடம் படித்தும் பயனில்லை என் நினைவில்

சிலபாடம் நிற்குமதுபோல சிந்தனையில் என்றும்

மனப்பாடம் செய்து ஒப்பித்த நாட்கள் உறவானால்

தினப்பாடம் பயிலும் மனமுவந்து நெருங்காதோ?



யாரும் சொல்லாத இன்பத்தை ஒருகைப் பார்க்கப்

பாரும் கொள்ளாத பயன்பெற நானும் அவளிடைத்

தேரும் செல்லாத பாதையில் தானும் பயணித்தால்

தீரும் என்றால் தீராது என்பேன் பேராசைதானோ?



ஊறும் கேணியும் ஊற்றுள்ளவரை வற்றாததாய்

மாறும் நிலையறிந்து மயங்கிப் பெருக்கெடுத்து

ஆறுபோல் பாய்ந்துக் கலந்தின்பக்கடலாடி கரை

ஏறும்நாள் தான் நிறைவேறும் ஓராசைதானே!



கரை சேருமா ? கடலாடிய திடலிலே உப்பின்

நுரை சேருமா ? உடலாடிய மடலிலே மப்பும்

அரை சேருமா ? களவாடிய உணர்வும் உப்பும்

வரை சேருமா ? உளமோடிய தீராசைதானோ?



சொர்க்கத்தின் திறப்பா ? - மதுவா? அதுவா? எனும்

தர்க்கத்தின் பிறப்பா ? எதுவோ - விழி ஆட்கொள்ளும்

மார்க்கத்தின் உறுப்பா ? - மோதுமோ? போதுமா எனும்

தீர்க்கத்தின் பொறுப்பாய் அமைந்த இன்பத்தின் சிறப்பா?














பொருள் விளக்கம்:

கீர்த்தி - புகழ், மூர்த்தி - விக்கிரகம், குறு நகை - உதடு குறுகிய நகை,

தனம் - செல்வம் மற்றும் மார்பகம், அதரம் - உதடு, வனப்பு - அழகு,

கோடிட்ட இடம் - தலை வகிடு, வதனம் - முகம்,

மன்மத - மனம் மதம் கொள்ளும், உண்மெய் - உண்ணுகின்ற உடல்,

நழுவியதோர் கலையழகு - கண் பார்வையில் இருந்து நழுவிய,

அப்பால் - அறம் மற்றும் பொருள், முப்பால் - மூன்றாவது பாலான இன்பம்,

உளவும் - ஆராய்ந்து, அகலாக்கி - சிறு விளக்காக்கி, உவகை - மகிழ்ச்சி,

பாரும் - உலகும், திடல் - மேட்டு நிலப்பகுதி, மையல் - காதல்,

உணர்வும் உப்பும் - உணர்வு பக்குவம் அடையும், கேணி - கிணறு,

மப்பும் - மயக்கம், அரை - இடுப்பு அல்லடு இடை,

No comments:

Post a Comment