Tuesday, January 27, 2015

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



செண்டாடிய பொழுதுகளை வண்டுகள் மறந்தாலும்

திண்டாடிய பொழுதுகளை காலத்தால் மறந்தாலும்

கண்டாடிய நினைவுகளை கவனம் தான் மறைத்தாலும்

கொண்டாடிய பொழுதுகளை உள்ளம் மறப்பதில்லை...



ஓராயிரம் நினைவுகளோடு புத்தாண்டும் தொடங்கிப்

பாராயிரம் வழிகளில் நாம் பகுத்துண்டு நடந்தாலும்

ஈராயிரத்துப் பதினைந்தாம் ஆண்டும் தொடங்கட்டும்

நாராயிரத்துப் பூக்களின் மாலையெனவே மாறட்டும்...



நில்லா உணர்வுகளின் கடிவாளத்தைப் பிடித்ததன்

பொல்லா நினைவுகளை ஓரிடம் நிறுத்தியதோடு

வல்லா நிலையாக வாழ்க்கையின் பாதையிலே

எல்லா வளமும் பெற்று இன்பமுற வாழ்த்துக்கள்...



மண்ணில் ஊறிய நீரைப் போலவே மகிழ்வதை

எண்ணில் தோன்றிடும் நினைவுகளால் நெகிழ்ந்து

கண்ணில் ஏறிய காட்சிகளைக் கருத்தொருமித்த

பெண்ணில் கண்டு ஆனந்தமடைய வாழ்த்துக்கள்...



கோடுகள் நேர்நின்றால் கோலமாவதில்லை அதனால்

கொஞ்சம் வளைந்து கொடுத்துப் பயணித்து பள்ளம்

மேடுகள் தன்னைக் கடந்த பாதையைக் கோலமாக்கிய

நெஞ்சம் நிலைத்துப் பூமியில் வாழ்ந்திட வாழ்த்துக்கள்...



உளியில் தோன்றாத அழகை உள்ளமதில் நேர்நிறுத்தியக்

களிப்பில் தோன்றிய சிலையின் உருவம் போலவே வான்

வெளியில் தோன்றாத புதுத் தாரகையாய் உருப்பெற்று அன்

பளிப்பாய் தோன்றிய வாழ்கையை அமைத்திட வேண்டும்...



கடந்த ஆண்டில் தொட மறந்ததையும்

நடப்பு ஆண்டில் கை விட்டதையும்

நடக்க இருக்கும் புதிய ஆண்டில்

தொட்டிடவும் தொடர்ந்திடவும்

வாழ்த்துக்கள்...



எண்ணியது யாவும் நடந்திடல் வேண்டும்...

பண்ணிய செயல்கள் பயன்பெற வேண்டும்...

திண்ணிய நெஞ்சம் தினம் தினம் வேண்டும்...

கண்ணியமாய் வாழ்வைக் கடந்திடல் வேண்டும்...



நாளுக்கு நாள் நன்மையைத் தேடிட வேண்டும்...

நன்மைக்குள் உண்மையை நாடிட வேண்டும்...

உண்மைக்குள் பெண்மையைத் தேடிட வேண்டும்...

பெண்மைக்குள் அன்பின் தன்மையை நாடிட வேண்டும்...



இருண்டு விடிவதல்ல விடியல் - உழைத்துக் கொண்டு

இருக்கும் கைகளின் பிடியில்...

விழுந்து ஓடுவதல்ல வெள்ளம் - விடா முயற்சியால்

எழுந்து ஓடுவதன்றோ உள்ளம்...

Tuesday, June 3, 2014

தலைவியின் துடிப்பு



வண்டது தேன் குடிக்கும் போதே இதழ்களால்

கண்டதை தான் மூடியிருக்கலாம் - தலைவியவள்

மறந்து மயக்கத்தில் ஆழ்ந்த போது வண்டது

பறந்து போனதைக் கண்டு துடிக்கின்றாள்...




தொட்டது உடல்தனிலே துலங்கும் முன்னே கைவிடப்

பட்டது மடல்தனிலே விளங்கும் பின்னே - கைதொடச்

சுட்டது உணர்வுக்குள் கலங்கும் - முன்னே மெய்தனைத்

தொட்டது நினைவுக்கு விளங்காமல் துடிக்கும்...




தலைவனை நினைத்து உதிரும் கண்ணீர் துளிகள் எத்தனையோ?

தலையணைக்குள்ளே காணாமல் போகின்றது அத்தனையும்...

இலைமறை காய் போலே எதிர்பட்ட நினைவுகள் எத்தனையோ?

வலைக்குள்ளே சிக்கிய மீனைபோலே துடிக்கின்றது அத்தனையும்...



ஆடைகூட பாரமாகித் தூரமாகிய வண்ணங்கள் எத்தனையோ?

தேடையிலே உணர்வுகளில் ஒளிந்து கரைகின்றது அத்தனையும்...

கூடையிலே கொட்டிய பூக்களில் விடுபட்டது எத்தனையோ?

ஓடையிலே தொடுக்காமல் கை விடப்பட்டது அத்தனையும்...



காலையிலே கதிராய் உதிக்கின்ற ஆவல்கள் எத்தனையோ?

மாலையிலே நிலவாய் வளர்ந்து தேய்கின்றது அத்தனையும்...

சோலையிலே ஒளியில் ஊடுருவுகின்ற நிழல்கள் எத்தனையோ?

பாலையிலே கானலாய் ஒளியில் மறைகின்றது அத்தனையும்...



மேகமது மழை பொழியாமல் கலைகின்றது எத்தனையோ?

தாகமதைத் தணிக்காமல் தொலைகின்றது அத்தனையும்...

மோகமது உணர்வாய் விரிந்து விரும்பியது எத்தனையோ?

தேகமதைத் தீண்டாமல் பிரிந்து சுருங்கியது அத்தனையும்...



தடையகற்றி தவிப்பகற்றிய பொழுதுகள் எத்தனையோ?

இடைமெலிந்த இடைவெளிக்குள் விழுந்தது அத்தனையும்...

மடை திறந்த வெள்ளம் போலே பெருகியது எத்தனையோ?

கொடை கொடுத்த உடல்தனிலே உருகியது அத்தனையும்...



Thursday, April 17, 2014

மையலாய் நானும் உதிப்பேனா...?



ஜயத்தில் தொடங்குது ஆண்டும்

ஐயங்கள் தீர்ந்திடவே தூண்டும்

மையத்தைத் தொடர்ந்து ஈண்டும்

வையத்தில் வாழ்ந்திட வேண்டும்...

 
 
 
படிக்கின்ற காலம் தான் பொற்காலம் - கடந்த பின்

நடிக்கின்ற காலம் தான் தற்காலம் - உணர்வுகளைப்

பிடிக்கின்ற காலம் தான் இக்காலம் - உள்ளந்தனில்

வடிக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 
விதைக்கின்ற காலம் தான் பொற்காலம் - நடந்த பின்

கதைக்கின்ற காலம் தான் தற்காலம் - வந்தததைக் கண்டு

பதைக்கின்ற காலம் தான் இக்காலம் - வேண்டாததைப்

புதைக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 

உழைக்கின்ற காலம் தான் பொற்காலம் - விருப்பங்களில்

திழைக்கின்ற காலம் தான் தற்காலம் - வார்த்தைகளைக்

குழைக்கின்ற காலம் தான் இக்காலம் - திருப்பங்களை

அழைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



குறைக்கின்ற காலம் தான் பொற்காலம் - இருப்பதை

மறைக்கின்ற காலம் தான் தற்காலம் - பொருட்களை

நிறைக்கின்ற காலம் தான் இக்காலம் - கருணையை

இறைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



நகைக்கின்ற காலம் தான் பொற்காலம் - உள்ளதை

வகைக்கின்ற காலம் தான் தற்காலம் - மயக்கத்தில்

திகைக்கின்ற காலம் தான் இக்காலம் - சோம்பலைப்

பகைக்கின்ற காலம் தான் எக்காலம்...?

 
 
எண்ணங்களை வடிப்பேனா...?

எண்ணியதில் துடிப்பேனா...?

வண்ணங்களைப் பிடிப்பேனா....?

வாழ்வுதனில் படிப்பேனா...?


 
விரும்பியதைப் படிப்பேனா....?

விரும்பாததில் நடிப்பேனா...?

அரும்பியதை வடிப்பேனா...?

நெருங்கியதைப் பிடிப்பேனா...?



மையப் புள்ளியில் விதிப்பேனா...?

இயல் இசையை மதிப்பேனா...?

ஐய வருடந்தனை துதிப்பேனா...?

மையலாய் நானும் உதிப்பேனா...?



 
ஜய வருடத்தின் இனிய உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்...



சுயமாய் எடுத்த முடிவுகளில் முயன்று வெற்றி காணவும்

நயமாய் வார்த்தைகளைப் பயின்றதைப் பற்றிப் பேணவும்

வயமாய் தொடுத்த பணிகளை விட்டு விடாமல் தொடரவே

ஜயமாய் வருடமும் சித்திரையில் அடியெடுத்து வருகின்றது...

Saturday, December 14, 2013

மோக உலகம்...




இரவின் வெளிச்சம் இது

இரவல் வெளிச்சமாகும்...




மோக உலகம்...


மதுவில் மனதும் கரைந்தோடும் - அந்த

மனதும் உணர்வின் கரைதேடும் - ஆடித்

ததும்பும் இன்பமும் நிறைந்தாடும் - அந்த


தருணத்தில் மரணமும் மறைந்தோடும்...



பிறந்ததற்கு அர்த்தம் காணப் பல வழிகளுண்டு பூமியிலே - மனம்

திறந்ததற்கு அர்த்தம் பெண்மையின் மொழியிலுண்டு - தினம்

மறந்ததற்கு அர்த்தம் காணும் விழிகளுண்டு பூவையின் - இனம்

சிறந்ததற்கு அர்த்தம் சேர்க்கும் நடனத்தின் களிப்புமுண்டு...



பம்பரமாய் சுழன்று ஆடும் பெண்களும் - அதனையும்

மும்முரமாய் கண்டு ரசிக்கும் கண்களும் - அத்தனையும்

அம்பரத்தில் இழுக்கும் அலைகளும் எனப் பூவையரும்

அம்பலத்தில் சுழன்று ஆடும் கலைகளும் தான் என்னே!


மோக உலகமா - பெண்ணழகின்

தேக உலகமா - கண்ணழகின்

போக உலகமா - மண்ணழகின்

தியாக உலகமா - துபாய் நகரம்...?



எண்ண எண்ணச் சலிக்காத அழகின் கூடமா - அதனை

எண்ணி எண்ணிப் பொலிவாகப் பழகும் பாடமா - மனதும்

தின்ன தின்னத் திகட்டாத தேமதுரப் பண்டமா - உணர்வும்

பின்ன பின்னப் புகட்டும் மதுவும் மயக்கத்தின் கண்டமா?



இடுப்பை அசைக்கிறாளா - தள்ளாடும் படகில் மனதை வைத்துத்

துடுப்பை அசைக்கிறாளா - மயக்கம் அளிக்கும் கிண்ணத்து மதுவின்

கடுப்பை அசைக்கிறாளா - கொள்ளை அழகின் இடையில் மறைக்கும்

உடுப்பை அசைக்கிறாளா - உணர்வின் தடுப்பை அசைக்கிறாளே...!



ஓடையின் வெள்ளத்து அசைவில் ஆடும் நிலவினைப் போலவே

ஓடுகின்ற நாடித் துடிப்பினைத் தேடும் உணர்வினைப் போலவும்

வாடையின் போது மழையிலே ஆடும் மலர்களைப் போலவே

வானத்து விண்மீன்களென சிமிட்டும் ஒளியினைப் போலவும்

மேடையின் அருகிலே மேயும் கண்களுக்கு விருந்தாகவும்

மேம்பட ஆடுகின்ற மங்கையவள் தானும் அணிந்திருக்கும்

ஆடையின் அழகை மெருகூட்டும் ஆட்டத்தின் அழகோடு

ஆசையைக் கலந்து ஆவலோடு தருகின்றாள் அரங்கத்திலே...



மழை வரும் போது தடுப்பதற்காகவே

குடை விரித்தாலும் நனைவதைப் போலவே

மனதையறிந்து இன்பம் கொடுப்பதற்கே

கடை விரிக்கின்ற மங்கையவளும் அதனை

பிழை எனக் கொள்வதில்லை தன் மனதுக்கு

தடை விதித்து உடலுக்கு உடை கொடுத்து

விழையும் சுகத்துக்கு விடை கொடுக்கவே

விருப்பம் மேலிடும் திருப்பம் கண்டிடவே

அழைக்கும் உருவத்திற்கும் பணத்திற்கும் தான்

அடைந்த பருவத்தையே வழங்குகிறாள்...




வில்லினில் இருந்து புறப்படும் அம்பைப் போலவே அவள்

சொல்லினில் இருந்து புறப்படும் வம்பை அறியாத பலரும்

கல்லினில் அகப்பட்ட தேரையைப் போலவே ஒளிமறையும்

அல்லினில் அகப்பட்டு தேவியரைத் தேடிக் கூடுகின்றனர்...



காந்தப் புயலில் சிக்கிய இரும்புத் துகள்களைப் போலவே

காணும் கண்களில் விரும்பி ஆடும் நகல்களை தாமும்

ஏந்தப் போராடும் எண்ணத்தில் மதுவேந்திய கிண்ணத்தில்

எதிர்ப்பட்ட மயக்கத்தில் அசலை மறந்த ஈசலாகின்றனர்...




மதுவுடன் கலந்த வெள்ளத்தை பிரிக்க முடியாததைப் போலவே

மாதிடம் கலந்த உள்ளத்தைப் பிரிப்பதென்பதும் இயலாததாலே

அதனுடன் கலந்த நடனத்தில் தொலைந்த மனதையும் தேடுவது

பாதியாய்க் கலந்த பின்னே மீண்டு வருவதென்பது இயலாததாகும்...



ஆணையிடும் அதிகாரத்தில் பணி அமர்ந்தாலுமே ஆடுமந்த

வீணையிடம் எவனும் மறுபடியும் மீட்டிடவேத் தேடுமந்த

கண்ணிடம் கொண்ட நடனத்தின் எழிலை ரசிக்கக் கூடுமந்த

பெண்ணிடமே வருவான் வந்த வழியினை தானும் மறப்பான்...




மெல்லினமா - மங்கையவளும் பனித்துளி வந்து அமரும்

புல்லினமா - நங்கையவளும் மழைத்துளியில் சிறகுலர்த்தும்

புள்ளினமா - என்கையிலேந்தும் தனித்துளி ததும்பிச் சிந்தும்

கள்ளினமா - இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையினமா...?



பள்ளத்திலே வீழாத வெள்ளமுண்டோ - உண்டால் மதுவெனும்

வெள்ளத்திலே மயங்காத உள்ளமுண்டோ - கண்டால் மங்கையவள்

அசைவினில் ஆட்டத்தின் எல்லையுண்டோ - வண்டால் மலர்களுக்கு

இசைவதால் தேனுண்ணும் இதழ்களுக்கும் தொல்லையுண்டோ...?



இரவை மறைக்க மென் மங்கையவள் இடையாடுகிறது - அங்கவனின்

உறவை மறைக்க பணமும் மனமும் நடைபோடுகிறது - அங்கவளின்

வரவை நிறைக்க தன் பங்கையளித்து விடைதேடுகிறது - கூடுவிட்டுப்

பறவை இன்ப வானில் பறந்து கடைதேடுகிறது வெளிச்சத்தை நோக்கி...



வந்த வழி பார்க்கத் துடிக்க ஓருலகம்

அந்த வழி தேடி அலையும் பேருலகம்

எந்த வழி இன்பம் என்ற போக உலகம்

தந்த வழி தேடி அலையும் மோக உலகம்...



சுருங்கி விரிவது மதுவருந்தும் இதயம் மட்டுமல்ல - அங்கே

சுருங்கி விரிவது மங்கையவள் சதையும் தான் - கொதி நீரை

நெருங்கிப் பிரிவது நெருப்பு மட்டுமல்ல - அவளது மாரை

நெருங்கப் பிரிவது விருப்பும் தான் - இரவின் பொறுப்பும் தான்...



தேடையில் கிடைக்காத அழகெல்லாம் ஒன்றுகூடி அவள்

ஆடையில் அழைக்கின்ற அற்புதமாய் நன்றுகூடி அந்தரங்க

மேடையில் தேடுகின்ற நாட்டியத்தில் வென்றுகூட அவள்

சாடையில் அழைக்கின்ற நாடகத்தின் முடிவை யாரறிவார்...?



கடலில் இருந்தே அலைகள் தோன்றுகின்றன - அவள்

உடலில் இருந்தே கலைகள் தோன்றுகின்றனவோ?

கடற்கரை வந்து நின்றால் காலை இழுக்கின்றன அலைகள் - அவளின்

உடற்கரை வந்து சென்றால் ஆளை இழுக்கின்றன கலைகள்...

பாறையிலே மோதும் அலைகள் நுரையைத் தருகின்றன - அவளின்

பாதையிலே மோதும் கலைகள் நடனத்தைத் தருகின்றன...

மீன்களின் இருப்பிடமோ கத்தும் கடல் - கலை

மான்களின் இருப்பிடமோ அவளின் உடல்...

பொங்கி விழுவது அலைகடலின் கலைகள் - மனம்

ஏங்கித் தழுவுதல் அவளுடலின் நிலைகள்...

தீவுகள் தோன்றுவது மணற்திட்டால் - பல

நோவுகள் தோன்றும் அவளை மணந்திட்டால்...



அத்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அலைகடலின் நிலைகள்...

பித்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அவளுடலின் கலைகள்...

எத்தனையும் அதன் வசப் படுத்தியே

எள்ளி நகையாடுவது அவள் நடனக் கலைகள்...



மது அருந்த அருந்த மயக்கமும் தான் வந்தது -

மணம் பரப்பப் பரப்ப பூவைக்குள்ளும் தேன் வந்தது...

அது இருந்த போதும் இவையெல்லாம் ஏன் வந்தது -

அவரவர் விதியே என்று அவ்விடத்திற்கு நான் வந்தது...



ஆடற்கலைக்கு அவள் மலர்ந்தவளோ - சித்திரக்

கூடற்கலையில் மெய் கலந்தவளோ - சிந்தனையின்

தேடற்கலைக்கு அவள் வளர்ந்தவளோ - பள்ளிக்

கூடற்கலையில் கை தேர்ந்தவளோ...?



எண்ணியது எல்லாம் உள்ளத்தில் நிறைவேறிட

கண்ணிமைக்குள்ளே கனவுலகைக் காணுங்கள்...




பொருள்:

அம்பரம் - கடல், அம்பலம் - சித்திரக் கூடம், கடை - பெண்ணின் மறைவிடம், அல்லினில் - இரவினில்.

Sunday, November 24, 2013

போர்க்குற்றம்...




இனத்தை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்

ஈனப் பிறவியல்லவா நம் அரசியல் பெருந்தலைகள்...


போர்க்குற்றம் செய்தவனும் இன்று உலக அரங்கிலே

யார்க்குற்றம் செய்ததெனக் கேட்கின்றான் உலகமதில்

நியாயம் என்று முன்மொழிகின்ற சில நாடுகளும்

காயம் பட்டு உயிரிழந்த இனத்தைக் கண்டதுண்டோ?


கொற்றவனாய் இருந்தவன் கூற்றுவனாய் மாறி கொடுங்

கூற்றுக்கு இரையாக நம்மினத்தை அழித்ததும் ஏனோ?



கருவாயில் இருந்து பிறந்தவன் எவனும் போரிலே

கருவறுக்க மாட்டான் முறைகேடாய் அவனும்

எருவாயில் இருந்து பிறந்ததினாலே ஈழப்பெண்களின்

கருவறுத்தான் அதற்கு அரசியலின் பின்னணியும்

பெருவாயில் விழுங்கிய பிணங்கள் அத்தனையும்

ஒருநாளில் உலகையும் உலுக்காதோ? பாவியவன்

ஒருவாயில் ஊர்கூடி உமிழும் நிலையும் வரும்

தருவாயில் தனியீழம் இலங்கையில் பிறக்காதோ?


ஒத்தைக்கு ஒத்தையாய் நம்மினத்தை எதிர்த்திருந்தால்

உருக்குலைந்து போயிருப்பான் சிங்களனவன் தந்திரத்தால்

பத்து நாடுகளின் துணை கொண்டு அழித்ததாலே நம்மக்கள்

பரிதவித்து துடித்து உயிர்விட்டு மடிந்ததன்றோ பரிதாபம்...



சிந்தித்தால் விடை கிடைக்கும் நம்மினத்தைச்

சந்தித்தால் வழிபிறக்கும் வாழ்வும் நிலைக்கும்...


உப்பு சப்பில்லாத தீர்மானம் நிறைவேறியது தானதில்

தப்பு செய்தவனைப் பற்றிய வார்த்தைகளே இல்லை...


கதைக்கப் படுகிறது நம்மினத்தை பலவாறு என்றாலும்

புதைக்கப் பட்டது ஈழத்தமிழ் மக்களின் ஊனுடல் அன்றோ!



கொடியும் வேரேனவே வாழ்ந்திருந்த நம்மினத்தின்

கொடியைப் கொளுத்தி வேரைப் பிடுங்கியெறிந்த

முடியரசான சிங்களத்தின் முகத்திரைக் கிழித்து

முடியைப் பிடுங்கி எறிந்திடுவோம் உலகறிய...



விதைப்போம் நாமும் நம் எண்ணமும் எழுத்தினையும்

விரும்பிய தேசத்தில் நம்மினத்துக்கு நல்வாழ்வு ஓர்நாள்

கிடைக்கும் அதில் நாமும் முடிந்தவரை பங்காற்றியிங்கு

கிளர்ந்தெழும் மாணவர் சமூகத்துக்கு தோள் கொடுப்போம்...

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...




கால வெள்ளத்தில் நந்தனம் குளித்து வெளியேற அதைப்

போல வெள்ளத்தில் களித்துக் கொண்டாடிட இன்று வருகை

தரும் விஜய வருடத்தினை நாம் அனைவரும் ஒன்றாக

வருக என வரவேற்று தமிழ்ப் புத்தாண்டாய் உபசரிப்போம்...



நிறைவேறாத ஆசைகள் நிறைவேறிடவும்

கரையேறாத எண்ணங்கள் கரையேறிடவும்

குறைவேறாத மனதில் குடிகொள்ளவும்

வரையறை இல்லாத வாழ்வுதனை

தொடங்கும் விஜய வருடந்தனில்

தொடர்ந்து பெற்றிட வாழ்த்துகிறேன்...



கார்காலம் செழித்து பயிர்கள் சிறக்கவும்

பேர்காலம் செழித்து உயிர்கள் பிறக்கவும்

நார்க்கோலம் செழித்து மணம் பரப்பவும்

ஊர்க்கோலம் செழித்து உணர்வு நிரம்பவும்

பார்க்கோலம் எங்கும் நம் தமிழ் பரவவும்

சீர்க்கோலம் எடுக்கும் விஜய வருடமாகும்...



அசையும் காற்றும் தென்றலாக முகிழ்

அவிழும் மலர்களும் மன்றலாக மனம்

இசையும் வாழ்க்கை நன்றாக தினம்

அமைந்து விஜயம் என்றாக மகிழ்வுடன்

வாழ்த்துகிறேன்...



வந்து போன நந்தன வருடம் நமக்கு

தந்து போனவைகளில் விடுபட்டதை

முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டில்

ஈந்து உள்ளம் மகிழ்ந்திட விஜயம்தரும்

புத்தாண்டில் நினைத்தது நிறைவேறி

பத்தாண்டின் பயனடைய வாழ்த்துக்கள்...




உழைப்பாளிகளின் நெற்றி வியர்வை நீர்த்து விழவும்

படைப்பாளிகளின் வெற்றிப் பார்வை சேர்ந்து எழவும்

உழைப்பில் உலகம் செழிக்க ஏர் நடத்தும் தேர்ந்த உழவும்

படைத்து உணவின் மூலத்தில் உலவும் காலம் தொழவும்

உருவாகும் விஜய ஆண்டும் மழை பெருகி பிழை குறுகி

பெருமைத் தேடித் தரும் ஆண்டாக மலரட்டும், வளரட்டும்...

பேராசைகள் தூங்கா நகரம் துபாயாகும்...




அரெங்கெங்கும் அவளுடைய நடனம் தான் - அதைப் பார்த்துக்

கிரங்குவது என்னெவோ நம்முடைய மனங்கள் தான் - சேர்த்து

அருந்துவது மதுவைத்தான் அன்றிப் பழகத் துடித்து அவளோடு

விருந்துண்ண நினைப்பதந்த இரவில் கரைந்த உணர்வும் தான்...



ஆடப் பிறந்தவள் தானெனின் சில மங்கை பிறருடன்

கூடப் பிறந்தவள் இல்லை என்றாலும் ஆடிப் பொருள்

தேடப் பிறந்தவள் தானெனினும் இவ்வுலகை விட்டே

ஓடப் பிறந்தவள் இல்லை என்றாலும் கூடும் இருள்

நாடப் பிறந்தவள் தானவளும் தன்னால் குடும்பம்

வாழப் பிறந்தவள் என்றவளும் ஆடப் பிறந்தவள்...



ஏழ் பிறவி இவ்வுலகில்

எடுத்து வந்தாலும் இதில்

எத்தனையாவது பிறவி

என்ற போதிலும் அத்தனையும்

பாழ் பிறவி என்றே நான்

பறைசாற்றுவேன் துபாயின்

பகல்போன்ற இரவையும்

பார்த்திராவிடில்...



நிலவை நிழலாக்கி நினைவை எழிலாக்க

நங்கைதன் உடலின் நடைகூட்டி இரவில்

உலகை ஒளியூட்டி உணர்வைக் களிப்பூட்டி

உறவை வெளிக்காட்டும் மதுவை நீராட்டி

மனதைக் குளிப்பாட்டி மறந்த நினைவூட்டும்

மங்கைதன் நாட்டியத்தில் மயங்கும் இரவும்

போனதை மோகத்தில் தானந்த பாகத்தில்

போதையின் பாதையில் போவது எங்கே?



நாவதை மயக்கும் மதுவும் ஆட்டத்தில்

தேவதை முன்னால் எதுவும் நாட்டத்தில்

நானதை எண்ணி மயங்கும் கூட்டத்தில்

தானதைத் தொலைத்தேன் மனமாற்றத்தில்...



கண்ணாடியின் விளிம்பிலும் கரையும் மதுவில்

பெண்ணாடியக் களிப்பிலும் உள்ளமது முடிவில்

முன்னாடிய நடனத்தில் உள்ளோடிய மயக்கத்தில்

நின்றாடிய அரங்கத்தில் வென்றாடிய இரவுகள்...



அசைவது இடையா? இல்லை

அவளணிந்திருக்கும் உடையா?

இசைவது ஆடலா? இல்லை

இன்பந்துய்க்கின்ற தேடலா?

கரைவது மதுவா? இல்லை

கவர்ந்திழுக்கும் மாதுவா?

நிறைவது மனமா? இல்லை

நீந்திகுளிக்கும் தினமா?

நகன்றது நேரமா? இல்லை

நாவருந்திய மதுவின் ஈரமா?

புகுந்தது ஆசையா? இல்லை

பூமடல் விரியும் ஓசையா?



தூங்கா நகரம் - மனதைவிட்டு

நீங்கா நகரம் - துன்பந்தனை

வாங்கா நகரம் ஏமாற்றத்தில்

ஏங்கா நகரம் - நிராசைகள்

தேங்கா நகரம் - பேராசைகள்

தூங்கா நகரம் துபாயாகும்...



பணமாடும் உன் திசைபார்த்து அவளின்

மனமாடும் அதன் இசைசேர்த்து அங்கமும்

நடமாடும் நங்கைக்கு வளையல் இட்டால்

தடமாடும் அழகெலாம் வந்தங்கே படமாடும்...



பருவத்தின் மேன்மையெல்லாம் துபாயின் ஏதோவொரு

துருவத்தில் தொலைக்கும் பெண்கள் - ஆடவரும் தம்

உருவத்தின் தன்மையெல்லாம் ரூபாயில் காணவந்து

புருவத்தின் கீழ் தொலைக்கும் இரவன்றோ அங்கே!



மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போலே நடன

மங்கைக்கு மயங்கும் ஆடவன் போலே மதனப்

பகுதிக்கு மயங்கும் மன்மத நாடகத்தில் தனது

பங்கைத் தான் பெறத் துடிக்கும் இரவுகள்...



கணிதத்தால் கூட கணிக்க இயலாத ஓரழகு...

கணிகையவள் நெஞ்சைவிட்டு அகலாத பேரழகு...

அறிவியலால் கூட அளக்க முடியாத தேரழகு...

அறிந்து அனுபவித்தாலும் விடியாத ஊரழகு...