Friday, March 8, 2013

பொங்கல் வாழ்த்து...

கார் பெருகி மழை பொழிந்து நதியெங்கும் 

நீர் பெருகி வயல் வழி ஓடி பயிர் வளர்ந்து

ஏர் பெருகி உலகெங்கும்  உழவு செழிக்க

ஊர் பெருகி உவகையுடன் கொண்டாடும்

சீர் பெருகிச் சிறந்திட வாழ்த்துகிறேன்...



கழைய வேண்டியவற்றை உள்ளதிலிருந்து கழித்து

உழைப்பினையும் உடலின் உறுதியையும் பெருக்கி


தழைக்கும் நல்வாழ்வினை  உணர்வினில் வகுத்து

அழைக்கும் அன்பும் மகிழ்ந்திட பொங்கல் வாழ்த்து...





உயிர்கள் உய்யவும்

பயிர்கள் செய்யவும்

பயன்படட்டும் இவ்வாண்டு...

பலன்பெறட்டும் நம்மக்கள்...



பொங்கலோ பொங்கல்...



உள்ளத்திலே உணர்வுகள் பொங்கட்டும்...

உலகத்திலே உழவுகள் பொங்கட்டும்...

வள்ளத்திலே உணவுகள் பொங்கட்டும்...

வழக்கத்திலே  உவகையும் பொங்கட்டும்...

வெள்ளத்திலே நதிகளும் பொங்கட்டும்...

விளக்கத்திலே மதியும் பொங்கட்டும்...

பள்ளத்திலே அருவிநீர் பொங்கட்டும்...

பழக்கத்திலே பண்பாடும் பொங்கட்டும்...


வள்ளம்  - கிண்ணம்

புத்தாண்டு நல்வாழ்துக்​கள் 2013...

கடந்த ஆண்டில் எடுத்த கடமைகளைச் செய்ய

நடந்து வந்த தூரத்தை இன்னும் கடப்பதற்காகவே

தொடர்ந்து வரும் இந்த ஆண்டிலும் முயற்சியோடு

நடந்து அவரவர் இலக்கை அடைய வாழ்த்துகிறேன்...




ஈராயிரத்து பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்தாலும்

ஓராயிரம் ஆசைகளின் படியில் உள்ளம் இருந்தாலும்

சீராயிரம் எண்ணங்கள் சிந்தனையின் பிடிவைத்தாலும்

ஏராயிரம் செழித்திடவே என்னுடைய வாழ்த்துக்கள்...




வீடு கடந்து மனையாள் மதி கடந்து வீதி நடந்து

நாடு கடந்து வினையால் விதி விட்ட வழி நடந்து

ஏடு கடந்து சிந்தையின் கதி நடக்க விழி நடத்தும்

பாடும் தொடரும் ஆசையும் பயன்பட வாழ்த்துக்கள்...





கேட்டதெல்லாம் கிடைக்கட்டும்

விட்டதெல்லாம் தொடரட்டும்

தொட்டதெல்லாம் துலங்கட்டும்

பட்டதெல்லாம் தளிர்க்கட்டும்...



விழி பார்த்து நடந்த வாழ்வினிலே

கை கோர்த்து கடந்த பொழுதைப்போலே

வழி பார்த்து  இனிவரும் நாளையும்

மெய் சேர்ந்து  கடந்திட வாழ்த்துகிறேன்...




அகப்பையில் புகப்பட்ட ஆசைகள் யாவும்

நகம்கையில் வளர்வதைப்  போலே வளர்ந்து

யுகம்கையில்  கிடைத்ததென  வாழ்ந்து வந்தால்

சுகம்கோடி உன்னைச் சுற்றித் தொடராதோ? 



தீர்மானங்கள் எடுக்கவும்

ஏர்மானங்கள் காக்கவும்

போற்குணங்கள் மறையவும்

நீர்நிலைகள் செழிக்கவும் 

இந்நாட்டிற்கு படிக்கட்டாக

இந்த ஆண்டு அமையட்டும்...



 


இதய கூண்டுக்குள் எழுந்த எண்ணங்கள் யாவும்

இந்த ஆண்டுக்குள் கைகூடிட வாழ்த்துகிறேன்...

ஏட்டில் எழுதாத கவியே!

ஒற்றைச் சொல்லாய் இருந்தவன் உன்னால் வாக்கியம் ஆனேன்...

நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென்   பாக்கியம் ஆகும்...



கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்

உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...



கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்

ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...

ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்

சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...



தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்

கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின் 

ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்

வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...



மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்

மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...



ஏட்டில் எழுதாத கவியே என்முன்

எழுந்து வந்தது போலே என்மனக்

காட்டில் பருகாத தேனாய் அன்புக்

காட்டிடவே வந்தவள் நீயே!



சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்

அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்

பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம் 

திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...



விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்

உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...



உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்

உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...

வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்

உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...

உன்னையே நான் கேட்பேன்...

என் எண்ணத்தை எதிர்வைத்து

உன்னையும் அதன் முன்வைத்து

எது வேண்டும் என்று கேட்டால்...

உன்னையே நான் கேட்பேன்...

ஏனென்றால் என் எண்ணமெல்லாம்

நிறைந்தவள் நீயல்லவா.....

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

சிந்தனையில் உருவான எண்ணங்கள் திறக்கவும்

சிந்தையில் எழுந்த நினைவுகள் அருகிச் சிறக்கவும்

நந்தன வருடத்தின் நாளெல்லாம் நன்றாகிட நாமும் 

வந்தனம் செய்து வரவேற்போம் இப்புத்தாண்டை... 

 



கதிர்படும் நெல்லெல்லாம் களத்துமேட்டில்

முதிர்பெற்று இல்லத்தில் சிறப்பதைப் போலவே 

எதிர்படும் சொல்லெல்லாம் உளத்துமேட்டில்

முதிர்பெற்று செல்லுமிடத்தில் சிறக்க வேண்டும்....
 



இடை நழுவிய ஆடையை மானம் காத்திடவே

இழுத்துப் பிடிக்கின்ற கைகளைப் போல காலத்தின்

எடை நழுவிய கடந்த வருடத்தின் மானம் காக்க

எதிர்வரும் நந்தனத்தின் உடை கொடுப்போம்....

வறுமை...

வாடிக்கையான நாட்களிலே வாழும் வாழ்கையிலே

வேடிக்கை காட்டும் வறுமை வந்து பாழ்வினையில்  

தேடிக்கை கூடும் உணவும் வாய்க்கு எட்டாமலும் 

பிடிக்கையில் சிக்காமலும் பரிதவிக்கும் பரிதாபம்...


பிறப்பு இங்கே...

இறப்பு அங்கே...

இரண்டுக்கும் நடுவே

இறைவனின் பொறுப்பு எங்கே?

நெரிஞ்சிப் பூவாய் நெருங்கும் கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     


செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...