Saturday, March 10, 2012

தீபாவளியில் அவனும் அவளும்...

அவன்:
 
ஆடியும் போனதடி
 
ஆசையும் கூடுதடி...
 
  
 
ஆடிக் காற்றினிலே
 
அங்கமெல்லாம் நொந்ததடி...
 
 
 
ஐக்கியம் ஆகிவிட 
 
ஐப்பசியும் வந்ததடி... 
 
 
 
அடைமழை போல நானும்  
 
அணைத்திட வருவேனே!
 
 
 
அவள்:
 
ஆடி வந்து என்னை   
 
ஆட்டி விட்டு போனதையா...  
 
 
 
கூடிய ஆசையெல்லாம்
 
குதியாட்டம் போடுதையா?
 
 
 
ஐப்பசியில் நீயும் வந்து
 
என்பசியில் நிறைவாயோ?   
 
 
 
மோட்சமதைக் காண  
 
முத்தமழை பொழிவாயோ?
 
 
 
அவன்:
 
மழைமேகம் முன்வந்து
 
மகிழும்படி கூறுதடி...
 
 
 
பூத்த பூவிலெல்லாம் உன்  
 
புன்னகையே தோன்றுதடி... 
 
 
 
சேர்ந்த ஆசைவந்து உன் 
 
சேலைதொட நினைக்குதடி...
 
 
 
மீண்டும் வீணையை மீட்டிடவே
 
மாலைவந்து அழைக்குதடி...
 
 
 
அவள்:
 
அழையாத  மேகமாய் நீயும்
 
அங்கத்தினிலே நுழைவாயோ?
 
 
 
பாரமாகும் ஆடைமேலே
 
பாரதப்போர் புரிவாயோ?
 
 
 
தூரமாகும் உணர்வுகளை
 
தூண்டிவிட வருவாயோ?
 
 
 
மத்தளம் போல் நான் மயங்கி
 
மெலிந்துவிட வருவாயோ?
 
 
 
அவன்:
 
அங்கத்திலே ஆசைவந்து
 
அலைக்கழித்துக் கொல்லுதடி...
 
 
 
சங்கத்தமிழ் கூட பாடிச்  
 
சங்கமிக்கச் சொல்லுதடி...
 
 
 
செங்கனிச் சாறெடுக்க
 
செவ்விதழைத்  தேடுதடி...
 
 
 
மங்கை உனைச்சேர்ந்து
 
மனம் மோகமூட்ட கூடுதடி... 
 
 
 
அவள்:
 
குளிர்ந்த அங்கம்தனை
 
குளிப்பாட்ட வருவாயோ?
 
 
 
கலைந்த கூந்தலைக்
 
களிப்பூட்ட வருவாயோ?
 
 
 
ஒளிந்த அழகினை சுடர்  
 
ஒளியாக்க வருவாயோ?
 
 
 
வடிந்த நினைவிடத்தை தீபா
 
வளியாக்க வருவாயோ? 

Thursday, March 8, 2012

சத்திரம் பேசுதடி...

ஆயிரம் சுற்றுலாவுக்கு சத்திரம் ஈடாகுமோ?

ஆயினும் சுற்றுமென் கால்களும் ஏடாகுமோ?

பூவையர் சூடுகின்ற பூக்களும் காடாகுமோ?

தேவியர் கூடுகின்ற மன்மதக் கோடாகுமோ? 



கோடு - மலை, நீர்க்கரை, வரம்பு, வளைவு, வரி சூழ்ந்தவிடம் 


பலதரப்பட்ட பாவையரும் தலையில் பூக்களின்

கலவையைச் சோலையென சூடிக் கொண்டு

உலவும் அழகிலே அவைசுமந்த பாதங்களும்

சலதரங்கம் வாசிக்கின்றதே அந்த வீதிகளில்...


சலதரங்கம் - பலவகைக் கிண்ணங்களில் பல அளவுகளில்

நீர்விட்டு சுருதி அமைத்துக் கொண்டு சிறு கழியால் தட்டி

வாசிக்கும் ஒரு வகை வாத்தியம்... 



விதியை நினைத்து புலம்புவதால் நீயும் சத்திரத்து

வீதிதனில் வலம் வந்தால் அலங்காரப் பாவையுன்

மதியை மயக்கும் எழில் கொண்டு தேவையென்று 

மீதியங்கே அழைத்திடவுன் மனதும் துடிக்குமே...



பூக்களைப் போன்ற மங்கையின் சுவடைத் தேடியே

ஈக்களென பறந்திட ஆசையும் அந்த வீதியிலே  நீர்த்

தேக்கத்தைச் சுற்றி வீசும் தென்றலுடன் மனதிலொரு

தாக்கத்தை உண்டாக்குமே தொடர்ந்து சென்றால்...



சன்னமிடும் மெல்லிய வாய்ப் புன்னகையில்

கன்னமிடும் புல்லிதழ் வாய்த் தேனெடுக்க

முன்னமிடும் உள்ளிதழ்  ஊறும் சுவையில்  

கன்னலிடும் சாறும் என்னவென்பேன்...

 
சன்னம் - சிற்றரும்பு, சிறு முத்து, மென்மை, நேர்த்தி, மறைக்கப்பட்டது ,  கன்னல் - கரும்பு

Wednesday, March 7, 2012

இரவின் வெளிச்சம்...

உதட்டின் வழி உன்னதங்கள் பல காட்டி

ஊறும் மதுவில் உள்ளத்தைக் கரைத்துப்  

பிதற்றும் விழி  முன்னழகினைக் கூட்டிப் 

பெண்மையின் பின்னழைக்கும் இரவு...





வரவைத் தேடித்தன் சிறகை விரிக்குமதன்  

வனப்பை நாடித்தான்  உறவும் சிரிக்குமதன்     

இரவைத்  தேடித்தன் நிழலைப் பிரிக்குமதன்

இன்பத்தில் சேவையதன் வெளிச்சம்...





அரவைத் தீண்டிப் பிழைத்தவர் சிலரே - பூவையின்

அழகைத் தாண்டி சளைத்தவர் இலரே - பாவையின் 

உறவைத் தீண்டி அழைத்தவர் உளரே - சேவையின்

உலகைத் தாண்டி சலித்தவர் இலரே இரவில்...





இலைமறைக் காயென ஒளித்துத் தன்

இடையசைந்தாடும் அழகும் நெளிந்து 

நிலைமறந்தாடும்  இனிமையில் கனிந்து

நினைவுகளை இழுக்கும் இரவு...





உள்ளத்தை உணர்வுக்குள் ஒளித்து அதன்வழி

உலகுக்குத் தன்னழகைக் காட்டும்  உடைவழி

கள்ளத்தைக் கூட்டும் நடனத்தில் கடைவிழிக்

கச்சேரியும் நடக்கும் இரவின் வெளிச்சத்தில்...





மதுவும் மங்கையும் பருகுவதால் கூடும்

மயக்கமும் நெஞ்சை உருக்குவதால் நாடும்

எதுவும் எங்கேயும்  பெருகித் தோற்று விடும்

இயக்கத்தை அழைக்கும்  இரவின் வெளிச்சம்...





அங்கம் தழுவிய ஆடையென அவளிடைச்

சங்கம் தழுவிடத் துடிக்கும் ஆசையும் மதுச்

சாரம் தழுவியே மலர்ந்த பெண்மையின் இதழ்

ஓரம் தழுவிடத் துடித்திடும் இரவின் வெளிச்சம்...






காணக் கிடைக்காத அழகையள்ளிச் சூடி நடைகூட்டிக்

கடைவிரித்துக் கட்டுடலில் பூந்துகிலின் எடைகுறைத்துப்   

பேணக் கிடைக்காத பேரழகும் கையேந்திப் படைதிரட்டிப் 

பேரின்ப எல்லைக்கே அழைக்கும் இரவின் வெளிச்சம்...

 



தொட்டுவிடும் தூரத்தில் அழகெழுந்து  நடனமாடித்

தூதுவிடும் நேரத்தில் பழகத் துடிக்கும் ஆசையும்

மட்டுபடாமல் மதுவோடு கலந்து உடன் புகுந்தாடி

மாதுவிடும் அழைப்புதான் இரவின் வெளிச்சம்...





சாட்டையிலா  பம்பரம் போல் சுழன்றாடும் பாவையும்

சாத்திரத்தை மூடி மறைக்கும் இரவின் வெளிச்சத்தின்

ஓட்டையிலே ஒழுகும் மதுக்கிண்ணத்  தேவையிலே

ஓரம் ஒதுங்கும் ஈரம் ததும்பும்  இதழின் ஓர் மயக்கம்...





தின்பண்டம் மட்டுமே வேறு - உற்று நோக்கினால்

ஊன்கொண்ட பிண்டம் யாவுமே ஒன்று தான் உலகிலே

வான்கொண்ட நிலவு என்றுமே நின்று தான் மனதிலே 

நான்கண்ட நினைவில் தோன்றியதும் அன்று தான்...





நாவில் மதுவின் கசப்பும்  உண்டு

நடனத்தில் நங்கையின் பசப்பும் கண்டு

பூவில் வழியும் தேனாய் உருண்டு

பூவனத்தில் தவறிய நானும் மருண்டு

தீவில் திரண்ட வெள்ளத்தின் நடுவில்

தீஞ்சுவைத் தேடும் இரவின் வெளிச்சம்...


பெண்ணழகு...

மேலழகும் கதை சொல்லும் காலழகும்

நூலவிழும் இடையழகும் முத்துநகைப்  

பல்லழகும் பருவத்தின் சொல்லளக்கும் 

நுதலழகும் மடல்விரிந்த இதழழகின்

பெட்டகத்தை மூடிநிற்கும் கட்டழகை 

வட்டமிட்டுச் சூடிநிற்கும் வடிவழகின்

வாகனமாய் ஏறிநிற்கும் மோகனத்தின்

முன்னழகும் முகிழ்ந்த பின்னழகின் 

உடையழகும் உன்னத நடையளக்கும் 

கடையழகால் காமத்தின்  விடையளக்கும்

கண்ணழகும் யாமத்தின் பெண்ணழகே...

Tuesday, March 6, 2012

ஒரு விடுகதை...

உப்பு  கரிக்கும் - அதிலே

உணர்வுகள் சிரிக்கும்...

தப்பு சரிக்கும் - அது

தவறாமல் உடன்படும்...

மூப்பு  இளமைக்கும் - அது  

முயக்கும் விதி விலக்காகும்...

ஒப்பற்ற உலகுக்கும் - அது

ஒப்புதல் அளிக்கும் இலக்காகும்...

- அது என்ன?


     
ஆம் அது கண்கள்...

மறைபொருள்...

அதனுள்ளே மறைந்த பொருளைத் தேடுவதிலும்

அதையடைய நிறைந்த அருளால் கூடுவதிலும்

இதமாகவே வாழும் தருணத்தில் ஆடுவதிலும்

இசைந்த மனது உணர்வுகளை நாடுகின்றது...



வேதங்களை விரும்பிக் கற்றவனும் தனக்கு

வேண்டியதை அடைய முற்பட்டாலும் கூட 

பாதங்களின் திருப்பமான பயணம்தனை

பார்த்து அறிந்திடும் வழியுண்டோ பூமியில்...




வெற்று விளக்கிலே விடும் எண்ணையும் நீயாக

ஏற்றி வைத்தாலொழிய எரிவதில்லை அதுபோல  

கற்று விளக்கும் பெண்ணையும் இலக்கியத்தோடு

உற்று நோக்கினாலே விளங்கும் எல்லாம்...




நெற்றி வகிடு பிரியும் அந்த நேர்கோட்டினைப்

பற்றி விட விரியும் ஆசையின் ஓர்கோட்டிலே

சுற்றித் திரியும் எண்ணங்களின் வழிபாட்டிலே

முற்றும் புரியும் மங்கையவள்  உடன்பாட்டிலே...



காட்டுக்குள் ஒளிந்த பூவைக் கண்டுத் தேனைக்

கூட்டுக்குள் ஒளித்த தேனீயாக மாறி   நீயும்

ஏட்டுக்குள் ஒளித்த அழகைக் கண்டுத் தேகக்

கட்டுக்குள்  ஒளிந்தப் பூவைக் கூட வேண்டும்...



இருபொருளாய் சங்கமமாகும் உயிர் மெய்யோடு

ஒருபொருளாய் இருந்த போதிலும் கைக்கொண்டு 

உருபொருளை   உணர்ந்து மெய்யோடு உயிராகும்

கருபொருளை உவகையின் மறைபொருள் எனலாம்...



எந்த மறை படித்தாலும் அழகை அருகில் கண்டு

இந்த முறை போதாது என்றே தான் மனம் நாடி

வந்த வழி பழகும் விருப்பம் மிகவும் கொண்டு

அந்த விழி தேடச்சொல்லும் மறைபொருளை...

தேவதாசி...

சேவைக்கென்று ஓர் மனம் - மனிதத் 

தேவைக்கென்று ஓர் தினம் - புனிதப் 

பாதை மீட்டும் ஓர் கணம் - கணிகைப் 

போதை கூட்டும் ஓர் குணம்...



மோகத்தில் அவளும் பசிக்கும்

தேகத்தின் கேள்வியைப் புரிந்திட 

இடையினத்தில் வல்லினம் புகவே

விடையினை மெல்லினமாக்குகிறாள்...



மெய் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு 

பொய் எழுதவே துணை எழுத்தின் வழி 

இரட்டை சுழி கடந்து தன் இடையின்

ஒற்றைச் சுழியில் உயிராக்குகிறாள்...



அரைதனிலே கால் புள்ளியிட்டு 

ஆச்சர்யக் குறி கொண்டு - தன்

வரைதனிலே முழுப் புள்ளிதொட்டு    

வரைகின்றாள் கேள்விக்குறியை...



கடைக்கண் பார்வையிட்டு

தடைஏறி வரும்  தனமிரண்டின்

உடைமீறி வரும் உணர்வாலே

குடைமீறி ஒழுகும் மழைபோல 

இடைக்குறி கொண்டு அழைப்பை

விடையாகி வர விடுத்திடுவாள்...



கள்ளத்தில் தன்னாசை நிறைவேற்ற

உள்ளத்தில் உடல்கெட்டு குழியாகிய  

பள்ளத்தில் தன் கடனைப் புதைத்து 

வெள்ளத்தில் கழுவுகின்றாள்  கற்பினை...