Tuesday, March 6, 2012

பெண்ணின் பருவங்கள்...

போதாகி பொழுதாகி பூவையும் மலரெனும்

போதாகி அங்கம் கிளர்ந்தெழுந்து பொங்கும்

கட்டுக்குள் அடங்காத இன்பத்தை இதழெனும்

மொட்டுக்குள் அடக்கி வளரும் உருவமெனும் 

மெட்டுக்குள் அடங்காத தேகம் இசைக்கும்

தட்டுக்குள் அடங்கும் ஏழு வகைப் பருவம்...

போது - மலரத்துடிக்கும் மொட்டு




காமத்துக்கு உருவம் எடுத்தது போலே கதவடைக்கும்

யாமத்துக்கு பருவமங்கே கடைவிரித்து இதழணைக்கும்     

போகத்துக்கு இடை வழங்கும் அட்சயப் பாத்திரமெனும்  

பாகத்துக்கும் தடை சொல்லும் சாத்திரமுண்டோ?

போகம் - இன்பம், பாகம் - பங்கு, யாமம் - நள்ளிரவு,



மெய்க்குள்ளடங்கும்  பருவங்கள் ஏழுவகையாய் உருக்கொண்டு

கைக்குள்ளடங்கா ஆசையும் ஏழுஸ்வரத்தின் பொருள்கொண்டு

பொய்க்குள்ளடங்கும்  சுவையின்பச்சுதி கூட்டிக் கருக்கொண்டு

பைக்குள்ளடங்கும் பாவையின் பண்பட்ட பெண்மையாகும்...   




ஒன்றிரண்டாய் உயிரும் உடலும் வளர்ந்து துணையாகும் 

நன்றிரண்டாய் உருவமும் பருவமும் காமக் கணையாகும்

என்றிரண்டாய் இன்பமும் இளமையும் போருக்  கிணையாகும்    

அன்றிரண்டாய் தழுவி நிற்கும் மங்கையின் அணைப்பாகும்...  




வடிக்காத செந்தேனைத் தேடிய வண்டும் வந்து

குடிக்காத பூவில் ஆடிய இளமை கண்டும் முந்திப்

படிக்காத கவியைப் போலச்சுவை உண்டுப் பந்தி

முடிக்காத பெண்மையின் பாக்கியமே பருவம்...




பேதைப் பாவம் -  ஏமம் தெரியாப் பருவம்...

பெதும்பைப் பருவம் - யாமம் புரியாப் பருவம்...

மங்கைப் பருவம் - வளமை அறியாப் பருவம்...

மடந்தை பருவம் - இளமை முறியாப் பருவம்...

அரிவைப் பருவம் -  தனிமை தழுவாப் பருவம்...

தெரிவைப் பருவம் - இனிமை நழுவாப் பருவம்...

பேரிளம்பெண் பருவம் - தலைமை வழுவாப் பருவம்...

 
ஏமம் - பாதுகாப்பு, யாமம் - நள்ளிரவு, வழுவாத - தப்பாத.

பெண்மையின் துடிப்பு...

வீடு வாசல் விட்டு  திரை கடல் ஓடி திரவியம்

தேடுவதற்காக எத்தனையோ மனிதர்கள் காய்ந்த

மரங்களைப் போலவே காலத்தை கடத்துகின்றனர்

ஈரமில்லாமல் உணர்வுகளை உலரவிட்டு கொண்டு . . .   


உலரப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்காக 

உதடுகளை ஈரப்படுத்தும் எத்தனையோ மனிதர்கள் . . .



கணவனை நினைத்து மனைவியின் துடிப்பு :


கண்மை உலர்வதைக் கண்டு  சொல்லும் என்கணவா

பெண்மை உலர்வதை அறியலையோ ?


உண்மை உறங்குவதை நீ அறிவாய்  - ஆனால் என் 

உணர்வுகள் உறங்காததை அறிவாயோ ?


உடமைக்காகவேச் சென்று இருக்கிறாய் - நானும் அந்த

கடமைக்காகவே காத்து இருக்கிறேன் . . .   



பெண்மையின் துடிப்பு இப்படி :


நான் அணிந்து  இருப்பது  அணிகலன்களா?

இல்லை அணிகாலன்களா? 


புருவத்தின் மத்தியில் அணிகின்ற பொட்டு - நீ எந்த

துருவத்தில் இருந்தாலும் உனை  நினைப்பதற்குத் தானோ ?


தொங்கி கொண்டிருக்கும்  காதணியும் கூட தலையசைவில்

ஏங்கிக் கொண்டிருக்கும் என் காதலை ஞாபகப்படுத்துகிறதன்றோ ?


சத்தமிடும் வளையலும் கூட இரவு நேரங்களில் என்னோடு

யுத்தமிடத் தொடங்குகின்றன  நான் கொண்ட மையலோடு . . .


உன் உதடுகள்  பேசும் விவேகத்தின் முன்னால்

என் கொலுசுகளின் அசைவுகள் கூட மௌனமாகின்றன . . .


சில நேரங்களில் வீரத்தோடு பேசுகின்ற  வார்த்தைகள் கூட

விவேகத்தின் முன்னால் தோற்று விடுகின்றன . . .


கூடலின் போது அழிந்த பொட்டின் நெளிந்த அழகு

தேடலின் போது கிடைப்பதில்லையே -  நீ எந்த


விழியில் எடுத்துச் சென்றாய் என்கணவா - நான் அந்த

வழியை நினைத்துக் கொண்டு இருப்பது தான் என் கனவா ?



என் உடலின் பசலை நிறம் மாறுவதற்காகவே 

நான் தினமும் மஞ்சள் குளிக்கின்றேன் . . .



குளித்தபின் தோன்றும் வெப்பத்தின் உணர்வை நீ

உதிர்க்கும் வார்த்தையிலே உணர்ந்து கொள்ளவா என்கணவா ?

  -   இல்லை  - 

களித்தபின் தோன்றும் வெப்பத்தின் நிலையை நான்

குளிக்கும் போது நினைப்பது தான் என் கனவா ?


கண்ணாடி கூட கேலி செய்கின்றன என் உருவத்தை - உன்

முன்னாடி நான் கொண்ட  உவகை எங்கே என்று . . .

அழகி...

முன்னழகு மூச்சு வாங்க அதைப் பார்க்கும்

பின்னழகு பேச்சு வாங்க எடை போடுமெழில்

கண்ணழகின் வீச்சு வாங்கியதை மெருகேற்றப்

பெண்ணழகின் பூச்சு வாங்கிய அழகியவள்...



ஏங்கித் தவிக்கும் பெண்ணழகின் நுட்பத்தை உள்

வாங்கித் துடிக்கும் உள்ளமது புஷ்பத்தின் கள்

ஊறித் ததும்பும் எண்ணமாய் மாறியதாலே  உள்

ஏறித் துவளும் கோதையின்  வடித்த அழகு...



வெடித்த இலவம்பஞ்சின் மொத்தமும் அழகாய்ப்

பிடித்த வண்ணம்  நித்தியப் பெண்ணழகும் துலங்க  

வடித்த கலையும் நெஞ்சின் முத்தமாய் விளங்கப்

படித்த எண்ணத்தில் ஏறிய அழகியவள்...




பூக்களால் தொடுத்த பூமாலையவள் - மலர் தேடி அலைந்து

ஈக்களால் கட்டிய தேனடையவள் - பலர் கூடிப் போற்றும்

பாக்களால் தொடுக்கும் பாமாலையவள் -  நான் தேடியெடுத்த

ஆக்கத்தினால் அழிவை விரும்பாத அழகியவள்...



நடுச் சாமத்தில் எழுந்த மின்னல் கொடியவள் - தமிழின்

நடுச் சங்கத்தில் மலர்ந்த பின்னல் கொடியவள் - அமுதமாய் 

விடியும் யாமத்தை ஏங்கவிடும் மதியவள் - பழகுமெழில்  

வடியும் அங்கத்தில் தங்கிவிடும் மதியவள்...



கண்ணில் தொலையாத அழகையெல்லாம காந்தி தரும் கவியாக்க

எண்ணத் தொலையாத அழகையெல்லாம் ஏந்தி வரும் அழகியவள்...

இலக்கியத் தோழி...

பிரிவின் ஆற்றாமையால் வருந்தும் தலைவிக்கு

பேருதவியாகத் தோழியவள் மருந்தாகவும் மாறிப்

பரிதவிக்கும் உள்ளத்திற்கு விளக்கம் பலவும் கூறிப்

பண்படுத்துபவளே   தமிழ் இலக்கியத்தின் தோழி...



எண்ணெய் முடியும் போது எரிகின்ற விளக்கிற்குத் தன்

எண்ணங்களையும் தலைவனவன் பிரிந்த நோக்கத்தையும்

எண்ணெய்யாக வார்த்து  அணைகின்ற இளமைக்கு முன்

எண்ணிய விடியலை உணர்த்திடுவாள் தோழியவள்...



பெண்மைக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியை

கண்ணுக்கும் மை தீட்டும் கோலுக்கும்  உள்ளதுபோலே

அண்மைக்கும் நன்மைக்கும் தோழியும் விளக்குவாள்

மண்ணுக்கும் மழை கொட்டும் பருவம் வருமென்று... 



இலையுதிரும் காலம் போலே தலைவனின் பிரிவாலே தன்

நிலையுதிர்ந்த கோலம் கொண்ட தலைவியைப் பரிவோடு

அலையுரசும் கரைபோலே தன்னுடைய அனுபவத்தின்

நிலையுரசும் பேச்சாலே ஆறுதல் அளிப்பாள்  தோழியவள்...



மீட்டிய வீணையை மறுமடியும் மீட்டவே இவ்விடம் முன்பு

கூட்டிய ராகத்தின் இனிமையாலே நாளை அவ்விடம் விட்டு

ஈட்டிய பொருள் போதுமென தலைவியைத் தேடியே அன்பு

காட்டிய பாதையை வந்தடைவான் என்பாள் தோழியும்...



மஞ்சள் பூசி மேனியின் கொதிப்பைத் தலைவியவள் 

கொஞ்சம் மறைத்தாலும் எதிர்ப்பையும் மீறியங்கே 

எஞ்சி நிற்கும் உணர்வுகளின் மதிப்பை தனிமையின்

நெஞ்சில் அடைத்தாலும் அறிவாள்  இலக்கியத் தோழி...

கடை திறப்பு...

உறக்கம் மூடியக் கடை விழி திறக்கும் அவளது

கிரக்கம் மூடியத் தடை வழி திறந்து நானும்

பொறுக்க முடியா என்னாசை வழியும் திறந்து

வெறுக்க முடியா தன்னாசை தான் கடை திறப்பு... 


கிரக்கம் - மயக்கம் அல்லது களைப்பு .



ஊசல் ஆடும் என் உள்ளமது அவளைக்  காணும் 

வாசல் வந்து காத்திருக்கும் பொழுதோடு மனதும் 

பூசல் ஆடும் உணர்வோடு  புவனமே தோணும்

ஏசல் கொண்டு பூத்திருக்கும் கடை திறப்பு...

ஏசல் - ஏசுதல் அல்லது திட்டுதல், புவனம் - உலகம்.  



அணைக்கட்டில் மீதேறி வரும் வெள்ளமின்னும் 

அணைமீறத் துடிக்கும் அந்த வேகத்தோடு உன்

துணைக்கட்டில் தானேறும் வரை உள்ளமின்னும்

துணிந்திருக்கும் துஞ்சாத மோகத்தோடு...
 
துஞ்சாத  - உறங்காத. 

 

சாயும் பொழுதில் குவிந்த குமுதவாய் அவிழ்ந்து 

தோயும் போது  சுரக்கும் அமுதவாய் நிறைந்து

காயும் நிலவும் பூரணமாய் ஒளிர்ந்து மறைந்து

தேயும் வரையில் ஆடி இடையும் குறையும்...
 
 
தோய்தல் - புணர்தல் அல்லது ஒன்றிக்களித்தல் அல்லது கலத்தல், அவிழ்ந்து - மலர்ந்து.   



சிலையில் கண்ட அழகை எல்லாம் சிற்பித் தன்

தலையில் ஏற்றிச் செதுக்கிய உருவம் போலே மென்

கலையில் வளரப் பழகிய பருவம் கொண்டு பொன் 

உலையில் வார்த்தது தான் உன் தேகமோ?



இல்லையன்னாமல் இருக்குமுன் இடையில் நானும்

தொல்லை செய்தாலொழிய உறங்காத விழிகளும்

எல்லைக் காணும் வரைத் தாங்காத வழிகளும் உன்

சொல்லைக் காணாதவரைத் ஏங்கித் தவிக்குமே....
 


உடைவிலக்கி  ஊர்ந்து செல்லும் உணர்வுகளின்

தடைவிலக்கித் தேர்ந்து கண்ட கொங்கையும்தன்

நடைவிலக்கிக் கற்று கொள்ளும் பங்கயத்தாளும்   

இடைவிலக்கி ஆடும் நடனத்தால் ஏற்றமுண்டோ? 

பங்கயத்தாள் - தாமரைப் போன்ற பாதம், கொங்கை - மார்பகம். 



அல்லும் பகலும் குறையாத உன்னழகில் உறவாடக்     

கொல்லும் பொழுதும் நிறையாமல் விளையாடுவதைச்

சொல்லும் உன் தேகமும் மறையாமல் கலந்தாடினால்

செல்லும் என் சந்தேகம் மொத்தமும்...


 
அல்லும் - இரவும்.

கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     

செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...

கவித் துளிகள்...

நான் எழுதிய கவித் துளிகள்:
 
 
முத்தம்:
 
அன்பே!
 
உன் உதட்டு வரியின்
 
பிழைப் போக்க  
 
என் உதட்டு வரி கொண்டு
 
பொருத்தி
 
நான் திருத்தி எழுதும்
 
கவியே முத்தம்...
 
முத்தத்திலே சத்தமில்லாமல் 
 
இருவரின் பிழைகளும்
 
திருத்தப் படுகின்றன...
 
இறைவன் செய்த தவறை
 
இதழ் மூடியே திருத்துவோம்...
 
 
 
ஆசை:
 
அன்பே!
 
நான்
 
களத்து மேட்டிலோ  
 
இல்லையெனில்
 
உன் கழுத்து மேட்டிலோ  
 
தான் சாக வேண்டும்...
 
 
 
காதல்:
 
அன்பே!
 
என்றும் இளமையோடு
 
இருக்கும் இமைமுடிகளைப்
 
போலவே நம் காதலும்
 
உயிருள்ளவரை
 
நரையில்லாமல்
 
உணர்வுகளின்
 
கரை காண வேண்டும்...
 
 
 
உறவுகள்:
 
உலகம் எனும் புத்தகத்தின்
 
பிரிக்க முடியாத பக்கங்களில்
 
உணர்வுகளால் பிரித்து
 
எழுதப் படுகிறது உறவுகள்...
 
 
 
நட்பு:
 
காலம் கடந்து நிற்கும்
 
மாற்றத்தைப் போலவே
 
ஆலம் விழுதெனவே 
 
அருகி நிற்கும்
 
மரத்தை தாங்கியே
 
விருட்சமாய் நிழல் தந்து
 
உரத்தை உள்ளமர்த்தி 
 
அரும்பாகி கனியாவது
 
நட்பாகும்...
 
 
 
திருமணம்:
 
உருவம் இரண்டாகி
 
உள்ளம் ஒன்றாகவே  
 
பருவம் திரண்டதற்கு
 
பலர்கூடி நடத்தும்
 
ஒருவகை ஒப்பந்தமே
 
திருமணமாகும்...
 
 
 
முதல் இரவு:
 
இளமையில் பூத்த 
 
இனிமையை இருவர்கூடி
 
இரவினில் விடியும்வரை
 
தனிமையில் ஒருவர்மாறி
 
ஒருவர் தேடி பருவத்தின்
 
கேள்விக்கு விடை காண்பதே
 
முதல் இரவாகும்...
 
 
 
முதல் இரவு:
 
யாமம் தலைப் பிடிக்க நடுச்  
 
சாமம் கால் பிடித்து நடக்கும்
 
போராட்டத்திலே பரிமாறும்
 
ஓராட்டத்திலே விடியும் போது
 
நெற்றியின் விளிம்பிலே
 
வெற்றியைத் தேடுவது
 
முதல் இரவாகும்...
 
 
 
பாசம்:
 
கதவில்லா உள்ளத்தின் 
 
வாசலிலே காலம் 
 
வரைகின்ற அற்புதக் 
 
கோலமே பாசமாகும்... 
 
அவன் வரைந்தக் கோலத்தை
 
அழிக்க முடியாதெனினும்  
 
தாண்டிச் செல்லலாம்...
 
இறைவன்
 
எங்கெங்கோ புள்ளிகளை
 
வைக்கிறான்...
 
கோடுகளை உணர்வுகளைக் 
 
கொண்டே வரைகின்றான்...
 
 
 
உணர்வுகள்:
 
உள்ளம் ஒளிந்து கொண்டு  
 
உடல்கூட்டில் உலவுகின்ற
 
உருவமில்லாமல்   
 
உயிரோடு சேர்ந்து நடத்தும்
 
உன்னத நாடகமே
 
உணர்வுகளாகும்...
 
 
 
உணர்வுகள்:
 
புத்திக்கும் உள்ளத்தின் 
 
யுக்திக்கும் நடக்கும் 
 
ஒருவிதப் போராட்டமே 
 
உணர்வுகளாகும்... 
 
 
 
கனவுகள்:
 
கண்ணாடியின் பின்னால்
 
நிகழ்வதைப் போலவே
 
கண்களுக்கு பின்னால்
 
நிகழும் அற்புதமே
 
கனவுகளாகும்...
 
 
 
கனவுகள்:
 
உள்ளம் ஒளித்த ஆசைகளை
 
உணர்வுகள் உறக்கத்தின் போது
 
தேடுவதே கனவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் பழகிய
 
உணர்வுகளை ஒத்திகைப்
 
பார்க்கும் நிலையே
 
நினைவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் அசைபோடும்   
 
உன்னத உணர்வுகளின்  
 
ஈர்ப்பு விசையில் 
 
காலம் குவிக்கின்ற 
 
மாற்றமே நினைவுகளாகும்...  
 
 
 
பசி:
 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
 
இடையே நடக்கின்ற உணவுப்  
 
போராட்டமே பசியாகும்...
 
 
உணவுக்கும் உதட்டுக்கும்
 
இடையே நடக்கின்ற உணர்வுப்
 
போராட்டமே பசியாகும்...
 
 
 
வலி:
 
பிறந்தது முதல் மரணம் வரை
 
உணர்வுகளின் எதிரொலியே வலியாகும்...
 
 
உயிருள்ள நிலையையும்
 
உணர்வுகளின் அலையையும் 
 
முடிச்சுப் போடுவது 
 
வலியாகும்... 
 
 
உணர்வுகளின் தடுமாற்றத்திலே
 
உடல் கொள்ளும் ஒருமாற்றமே
 
வலியாகும்...
 
 
 
கண்ணீர்:
 
கண்களின் வழியே இறங்கும்
 
காட்சியின் ஓலமே கண்ணீராகும்...
 
 
காலத்தின் அவல நிலையைக்
 
கழுவுவதற்கு இறைவன் அளித்த
 
நன்கொடையே கண்ணீராகும்...
 
 
உள்ளம் வடிக்கின்ற துன்பமும் 
 
ஊற்றடுப்பது கண்களின் கண்ணீராகும்... 
 
 
 
இன்பம்:
 
நுகர்ச்சிக்கு கிடைக்கும்
 
புகழ்ச்சியே இன்பமாகும்...
 
 
புகழ்ச்சியை அழைக்கும்
 
நுகர்ச்சியே இன்பமாகும்...
 
 
உள்ளம் உணர்வுகளை இழுத்து
 
உள்ளுக்குள்ளே விரிவது தான்
 
இன்பமாகும்...
 
 
 
பெண்மை:
 
மெய்யுண்ட உணர்வுகளிலும் - அகப்
 
பையுண்ட உதிரத்திலும்
 
பெண்மைதான் எச்சமாகும்...
 
 
பருவத்தின் மேன்மையளக்க 
 
உடல்வழியே உணர்வுகளும் 
 
உருவத்தின் துணைகொண்டு   
 
மடல்வழியே எழுதும் உதிரமே  
 
பெண்மையாகும்...
 
 
 
தாய்மை:
 
பெண்மைக்கு பெருமிதம் கொடுக்க
 
உண்மை எய்தும் ஒரு வரம் தான்
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையாலே எழுதப் படுகின்ற
 
உறவுகளின் இறையாண்மையே
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையின் உணர்வுகளுக்கு  
 
உறவு அளிக்கும் ஒரு வடிவமே  
 
தாய்மையாகும்...